ஃபேஸ்புக் இப்படிப்பட்ட வேலைகளைச் செய்யலாமா?

சமூக இணைய தளங்களில் உலகம் முழுவதிலும் மிக அதிகமான பயனாளர்களைக்
ஃபேஸ்புக் இப்படிப்பட்ட வேலைகளைச் செய்யலாமா?

சமூக இணைய தளங்களில் உலகம் முழுவதிலும் மிக அதிகமான பயனாளர்களைக் கொண்டுள்ள ஃபேஸ்புக் ரகசியமாக ஒரு வேலையைத் தொடங்கியுள்ளது. அதாவது உங்கள் கணினியின் வெப்காம் அல்லது உங்கள் ஸ்மார்ட்ஃபோனிலுள்ள கேமராவின் மூலம் உங்களை ரகசியமாகக் கண்காணித்து சிலவற்றை பதிவும் செய்யப் போகிறது என்றால் அதிர்ச்சியாக இருக்கிறது அல்லவா?

ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்தப் புதிய போக்கைப் பற்றி அதன் பயனாளிகளுக்குத் தெரியப்போவதில்லை. இது ஒரு புதிய தொழில்நுட்பம் எனும் அளவில் தான் அறிமுகமாக உள்ளது. நீங்கள் உங்கள் நண்பரின் ஒரு புதிய புகைப்படத்தைப் பார்த்து லேசாக புன்முறுவல் பூத்தால் உடனே உங்கள் முக உணர்வுகள் படம் பிடிக்கப்பட்டு, நீங்கள் விரும்பிய அந்தப் புகைப்படம் அல்லது அதை ஒத்த புகைப்படங்கள் உங்கள் பார்வையில் படும் படி அடிக்கடி ந்யூஸ் ஃபீடில் வந்து கொண்டிருக்கும்’ என்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய ஆராய்ச்சியைப் பற்றி பதிவு செய்துள்ளது Independent.co.uk எனும் இந்த இணையதளம்.

உங்கள் முகத்தைப் படம் பிடித்ததுடன் இல்லாமல் அதை ஆய்ந்து எது உங்கள் விருப்பப் பதிவுகள் என்பதை அலசி நீங்கள் சைட்டில் வெகு நேரம் இருப்பதற்கான மறைமுக வேலையைச் செய்வது தான் அதன் நோக்கம். உதாரணமாக ஏற்கனவே சொன்னபடி, உங்கள் நண்பரின் புகைப்படத்தை பார்த்து சந்தோஷத்தில் நீங்கள் சிரித்துக் கொண்டிருந்தால், ஃபேஸ்புக்கின் அல்காரிதம் அந்தத் தகவலை பதிவு செய்து அதே போன்ற புகைப்படங்களை உங்கள் காட்சிக்கு தந்து கொண்டிருக்கும். அதே போல் ஒரு பூனை விளையாடிக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் அது உங்களுக்குப் பிடிக்கவில்லை அல்லது உங்களைக் கவரவில்லை என்று முகத்தை வேறு பக்கம் திருப்பினாலும் கூட அதையும் பதிவு செய்து கொண்டிருக்கும் வெப்காம் உங்கள் பார்வைக்கு ஒருபோதும் அத்தகைய காட்சிகளைக் கொண்டு வராமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளும்’. உங்கள் முக மாற்றத்துக்கு ஏற்றபடி புகைப்படங்கள் தேர்வு செய்யப்படும். சிரிப்பதும் முறைப்பதும் பதிவு செய்யப்பட்டு அதற்கேற்றாற் போல உங்கள் மனத்துக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயங்களை மட்டும் உங்கள் பார்வைக்கு கொண்டு வரப்படும்.

அதாவது உங்கள் விருப்பு வெறுப்புக்களுக்கு உட்பட்டு இயங்கும் ஒரு சாதனமாக ஃபேஸ்புக் உருமாறிக் கொண்டிருக்கிறது. இது நல்லதுதானே என்று நினைக்கத் தோன்றுகிறதா? நிச்சயமாக இல்லை. அதிலுள்ள ப்ரொக்ராம்கள் மூலம் ஒரு உளவாளியைப் போல உங்கள் முகம் படம் பிடிக்கப்பட்டு, உங்களை எலியைப் போல ஒரு பொறியில் சிக்க வைக்கும் தந்திரம் தான் இது. நீண்ட நேரம் சமூக வலைத்தளங்களில் அடிமைப்பட்டு கிடந்தால் உங்கள் மனநலம் மற்றும் உடல் நலம் பாதிப்படைந்துவிடும். ஃபேஸ்புக்குக்கு தேவை பயனர்கள். அவ்வளவே ஆனால் அதற்கு நம்முடைய பொன்னான நேரத்தையும் வாழ்க்கையையும் ஒப்புக் கொடுப்பது எத்தகைய முட்டாள்தனம்?

இன்னும் ஃபேஸ்புக் இதனைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்திருக்கவில்லை. ஆனால் எந்த நேரமும் அது இந்த திட்டத்தைச் செயல்படுத்திவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன் நீங்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு தேவையற்ற விஷயங்களுக்கு வாழ்க்கையிலும் சரி ஃபேஸ்புக்கிலும் சரி இடம் கொடுக்காதீர்கள். இந்த பரந்து பட்ட உலகில் செய்ய வேண்டிய பயனுள்ள வேலைகள் எத்தனையோ இருக்கின்றன. தேடிக் கண்டடைய நெகிழ்ந்து கரைய வேண்டிய தருணங்கள் எவ்வளவோ மிச்சம் உள்ளன. மெய் நிகர் உலகை மறந்து நிகழ் நிறை உலகில் என்றென்றும் துடிப்புடனும் மகிழ்வுடனும் வாழுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com