திடீரென்று பாலியல் விருப்பம் குறைவதற்கு என்ன காரணம்?

இச்சை, தாம்பத்திய ஆசை என்பது உயிரியல் சம்பந்தப்பட்ட விஷயம். ஒவ்வொரு
திடீரென்று பாலியல் விருப்பம் குறைவதற்கு என்ன காரணம்?
Published on
Updated on
2 min read

இச்சை, தாம்பத்திய ஆசை என்பது உயிரியல் சம்பந்தப்பட்ட விஷயம். ஒவ்வொரு உயிரின் முக்கியமான பங்கு சந்ததி உருவாக்கம் எனலாம். இயற்கையாக அமையும் இந்த விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கும். உளவியல் ரீதியாக அல்லது உடல்ரீதியாக சிலருக்கு திடீரென்று விருப்பமின்மை ஏற்படலாம். அது தற்காலிகம் என்றால் கவலை வேண்டாம். ஆனால் திடீரென்று முற்றிலும் விருப்பம் இல்லாமல் போய்விட்டால் நிச்சயம் மருத்துவ உதவி தேவைப்படலாம். அதற்கான காரணங்களை முதலில் கண்டறிய வேண்டும்.

சுவாமிநாதனுக்கு திடீரென்று வேலை போய்விட்டது. ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தவர் அவர். நடுத்தர வயது. ஒரே மகன் பள்ளியில் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தான். பேங்க் பேலன்ஸ் உள்ள வரை சமாளித்துக் கொண்டு வேறு வேலை தேடிக் கொண்டிருந்தார். அவரது தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற வேலை அமையவில்லை. போதாதற்கு முந்தைய நிறுவனம் அவரை ப்ளாக் லிஸ்ட் செய்து வைத்திருந்தது. இதனால் மிகவும் மனம் உடைந்த நிலையில் அவர் தன்னை வெகுவாக சுறுக்கிக் கொண்டார்.

தன்னம்பிக்கை உருக்குலைந்து நண்பர்களிடமிருந்தும் விலகிச் செல்ல ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் பணப் பிரச்னையும் சேர்ந்து நெருக்க, அவர் தன்னிலை இழக்க ஆரம்பித்து கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளானார். அச்சமயங்களில் அவருக்கு மனைவி அருகில் வந்தாலே ஒவ்வாமையாக இருந்தது. மனைவியிடம் எரிந்து விழுவார் அல்லது தன்னை தனியே விடும்படி இறைஞ்சுவார். தனக்கு பாலியல் விஷயங்களில் துளிக்கூட விருப்பம் இல்லை என்று வெளிப்படையாகவே கூறிவிட்டார்.

வேலைக்குச் சென்று மீண்டும் தன் சுய பலம் பெற்றதும்தான் அவரால் மூச்சு விட முடிந்தது. ஆண்மை என்பது இங்கு வேலை செய்வது, குடும்பத்தை காப்பது என்பதுடன் அவர் தொடர்பு படுத்தியிருந்தார் என்பதால் அவரால் தனது மனத்துக்குள் ஏற்படுத்திக் கொண்ட திரையை விலக்க முடியவில்லை. மனைவியைத் தான் அந்தக் காலகட்டத்தில் விலக்கி வைத்திருந்தார். சில கவுன்சிலிங் எடுத்து மீண்டும் புதிய வாழ்க்கையைத் தொடங்கினார்.

ஏதோ ஒரு காரணத்தால் தீவிரமாக பாதிக்கப்பட்டு, மன அழுத்தம் ஏற்படும் போது ஒருவரது பாலியல் விருப்பம் பெரிதும் பாதிக்கப்படும். ஸ்ட்ரெஸ் போன்ற பிரச்னைகள் எதிர்மறையான எண்ணங்களைத் தோற்றுவித்து, ஹார்மோன் அளவுகள் சீர்குலைத்துவிடும். சிலருக்கு டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியில் பிரச்னை இருக்கும். இது ஒரு முக்கியமான ஆண் ஹார்மோனாகும். சிலருக்கு வயது அதிகரிக்கும்போது டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்துவிடும். மிக அதிகமாகக் குறைந்துவிட்டால் பாலியல் சார்ந்த விருப்பங்கள் குறைந்துவிடலாம்.

தூக்கமின்மை இன்னொரு பிரச்னை. சிலர் இரவு பகல் பாராது நீண்ட நேரம் வேலை செய்து கொண்டிருப்பார்கள். போதிய அளவுக்கு உறக்கம் இல்லையென்றால் எதிலும் உற்சாகம் இருக்காது. இன்னும் சிலருக்கு, மாத்திரை மருந்துகளில் பக்கவிளைவால் விருப்பமின்மை ஏற்படலாம். முக்கியமாக மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகள் உடல்ரீதியான விருப்பமின்மையை ஏற்படுத்திவிடலாம். தொடர்ந்து உடல் வலி அல்லது கடும் வியாதிகள் ஒருவரை உடல் மற்றும் மன அளவில் பெரிதும் பாதிப்படையச் செய்திருக்கும் சமயத்தில் உயிர் பயம் மிகுந்திருக்கும். அச்சமயங்களில் தாம்பத்ய உறவைப் பற்றி அவர்களால் சிந்திக்க முடியாது.

இதற்கு தீர்வு அடிக்கடி டென்ஷன் ஆகாமல் இருக்க வேண்டும். சிகரெட், மது, போதை போன்ற பழக்கங்கள் இருந்தால் உடனடியாக அதிலிருந்து விடுபட்டு, உடலை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். சத்தான உணவுகளை சாப்பிட்டு கூடுமான வரையில் உடல் மற்றும் மன நலனில் அக்கறை காட்ட வேண்டும். ஆனால் பிரச்னைகள் தொடர்ந்தால் யோசிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். தகுந்த சிகிச்சை பின்னர் பாலியல் விருப்பமின்மை நீங்கிவிடும். அவர் பரிந்துரைக்கும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com