நீங்கள் எப்போதும் என்றென்றும் சந்தோஷமாக இருக்க விரும்புகிறீர்களா? இதோ உங்கள் மகிழ்ச்சிக்கான எளிய வழிமுறைகள்!

இந்த பூமியில் பிறக்கும் எல்லா உயிர்களின் நோக்கமும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே. சிலர் மட்டுமே அடுத்தவரையும் சந்தோஷப்படுத்த ஆசைப்படுவார்கள்.
நீங்கள் எப்போதும் என்றென்றும் சந்தோஷமாக இருக்க விரும்புகிறீர்களா? இதோ உங்கள் மகிழ்ச்சிக்கான எளிய வழிமுறைகள்!

இந்த பூமியில் பிறக்கும் எல்லா உயிர்களின் நோக்கமும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே. சிலர் மட்டுமே அடுத்தவரையும் சந்தோஷப்படுத்த ஆசைப்படுவார்கள். இன்னும் சிலர் அடுத்தவர் சந்தோஷங்களைப் பறித்து அதில் இன்பம் காண்பார்கள். இவர்கள் சாடிஸ்டுகள் அல்லது மனப்பிறழ்வு உடையவர்கள். சரி சந்தோஷம் என்பது அத்தனை எளிதில் வந்துவிடுமா? வாழ்க்கையில் நமக்கு எது தேவை? நிம்மதியா சந்தோஷமா அல்லது இவை இரண்டுமா?

என்னதான் அரும்பாடுபட்டு நம்முடைய சந்தோஷங்கள் எதுவென்று கண்டடைந்து அதை நோக்கிய பயணத்தில் பல பிரச்னைகளை துயரங்களை எதிர்நோக்கி இறுதியாக, அதனை அடைந்தாலும், அது கானல் நீரைப் போன்றதாகிவிடுகிறது. கையில் அள்ளிய நீரைப் போலவே நொடி நேரத்தில் காணாமலாகிறது. ஏன் இவ்விதம்? ஏன் சந்தோஷம் என்பது தற்காலிகமானதாகவே இருக்கிறது?

எனக்கு இது கிடைக்கவில்லை. அது படிக்க ஆசைப்பட்டேன் ஆனால் இதுதான் கிடைத்தது. அந்த வேலைக்கு விண்ணப்பித்தேன், ஆனால் கிடைத்ததோ இதுதான். என்னுடைய தகுதிக்கும் திறமைக்கும் நான் வாங்கும் சம்பளம் மிகக் குறைவு. என் உறவுகள் எல்லாமே என்னைக் கைவிட்டுவிட்டது. எனக்கு உண்மையாக இருப்பவர்கள் யாருமில்லை என ஒவ்வொருவருக்கும் ஒருபாடு குறைகள், குற்றம் சுமத்தல்கள் எந்நேரமும் உள்ளது. மிஸ்டர் ரைட் அல்லது அதி உன்னத மனிதர் என்பவரை நீங்கள் என்றேனும் பார்த்ததுண்டா? முதலில் நீங்கள் அப்படி இருக்கிறீர்களா? எது சரி? எது தவறு?

நீங்கள் சுட்டிக் காட்டும் நபர்களையோ பிரச்னைகளையோ ஒரு நிமிடம் புறம் தள்ளிவிட்டு அந்த விரலை உங்கள் நெஞ்சுக்கு எதிராக விரல்களை சுட்டிப் பாருங்கள். பிரச்னை அங்கிருந்துதான் தொடங்கியிருக்கும். அந்த நூல்கண்டின் முனையை நீங்கள் தான் முதலில் விடுவித்திருப்பீர்கள். இயலாமைகளை ஒருபோதும் பட்டியல் இடாதீர்கள். தோல்விகள் இடர்பாடுகள் இவையெல்லாம் வெற்றிக்கான இன்னொரு வாய்ப்பு என்பதை புரிந்து கொண்டால் வீண் புலம்பல்களில் நேரத்தை விரயம் செய்ய மாட்டோம். எல்லாம் என் விதி, தலையெழுத்து, கடவுள் என் விஷயத்தில் கருணையே இல்லாமல் இருக்கிறார் என்றெல்லாம் மருகிக் கொண்டிருக்காமல், சரி இப்படி ஆகிவிட்டது அடுத்து என்ன செய்யலாம். முதலில் இதிலிருந்து மீள்வதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைப்பதே தெளிவுக்கான பாதையின் முதல் படி.

ஒவ்வொருவர் வாழ்விலும் வெவ்வேறு பிரச்னைகள் இருந்து கொண்டிருக்கும். நமக்கே கூட ஒரே பிரச்னை மீண்டும் மீண்டும் நம் முன் வந்து நிற்கும். ஏன், எதற்கு என்று ஆழமாக சிந்தித்து பிரச்னையை வேர்நுனி முதல் ஆழ்ந்து ஆய்ந்து பார்த்தால் அதைத் தகர்த்தெறியும் உளி நம்மை வந்தடையும். எதற்கும் சோர்வு அடையாமல் ஒவ்வொரு தடைக்கல்லையும் படிக்கட்டுக்களாக்கிவிடும் வல்லமை நமக்கு உண்டு என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

அதற்கு முதலில் என்ன நடந்தாலும் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்ற உறுதியை ஒரு தீர்க்கமான முடிவை நாம் எடுத்துவிட்டால் அது நிச்சயம் வசப்படும்தானே? மகிழ்ச்சியான மனநிலை உள்ளவர்களுக்கு மகிழ்ச்சிக்கான கதவு என்றும் திறந்தே இருக்கிறது அதை உணராதவர்களே மகிழ்ச்சிக்கான சாவியைத் தேடி பல இடங்களில் அலைகிறார்கள் என்பார் பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜிம் கேரி. எனவே இன்று இல்லையில்லை இப்போது இந்த நொடியே உங்கள் மகிழ்ச்சிக்கான திறவுகோலை எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களிடம் மட்டும்தான் உள்ளது.

மனிதனின் செயல்பாடுகளில் பெரும் சதவிகிதம் அவனது ஆழ்மனத்தைச் சார்ந்துதான் இயங்குகிறது. ஒருவரின் நடை உடை பாவனை செயல்கள் என எல்லாம் அவரது ஆழ்மனத்தின் இயல்புப்படியே நடக்கிறது என்கிறார்கள் உளவியலாளர்கள். இந்த ஆழ்மனத்தின் விந்தைமிகு ஆற்றலுடன் உங்கள் மகிழ்ச்சியும் பிணைக்கப்பட்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? உண்மை அதுதான். உங்கள் ஆழ்மனத்தை நீங்கள் சரியான விதத்தில் பயன்படுத்தினால் சந்தோஷம், வெற்றி, அமைதி என எதை நீங்கள் விரும்பினாலும் அது உங்களுக்கு கிடைக்கும். ஆனால் அதற்கு நீங்கள் ஆழ்மனத்தை சரியான வகையில் பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும்.

தேவையற்ற விஷயங்களிலிருந்து விலகி, உங்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவற்றில் கவனம் செலுத்துங்கள். கவலை உங்களை அரித்துக் கொன்றொழிக்கும் குணம். எனவே உங்களால் மாற்ற முடியாதவற்றைப் பற்றி சிந்திப்பதை விடுத்து உங்களால் செய்ய முடிந்தவற்றின் மீது அக்கறை காட்டுங்கள். நிதானம், பொறுமை, பக்குவம் ஆகியவற்றை அனுபவங்கள் மூலம் அறிந்து கொள்ளுங்கள். வாழ்நாள் முழுக்க கோபக்காரனாகவே இருப்பேன் என்பது உங்கள் முடிவாக இருந்தால் சந்தோஷம் எப்படி நிலைக்கும்? சின்ன சின்ன விஷயங்களில் கூட பரவசங்கள் கொட்டிக் கிடக்கும். கண் விழித்துப் பார்ப்பதில் தான் உள்ளது. எந்த நிலையிலும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால், அது உங்களின் வாழ்க்கையை செம்மைபடுத்தும்.

எது எனக்குத் தேவை, என்னுடைய கனவுகளை நாம் எப்படி நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றெல்லாம் தயங்காதீர்கள். எல்லாமும் முடியும். உங்களுடைய கனவுகள் உங்களுக்குப் பெரிதாகவும், எதைவிடவும் முக்கியமானதாக உங்களுக்கு இருந்தால், நிச்சயம் அதை அடையும் வரை நீங்கள் ஓயமாட்டீர்கள். அப்படி உங்கள் ஓய்வெடுக்க விடாது உங்கள் ஆழ்மனது. இடையறாது அது உங்களுக்கு பக்கபலமாக திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும். உங்கள் முயற்சிகளில் நீங்கள் வெற்றி அடையும்போது நீங்கள் பட்ட பாடெல்லாம் கரைந்து சந்தோஷம் மட்டுமே உங்கள் முன் தடாகமாக நிரம்பியிருக்கும். 

எந்த இடர்பாடுகள், பிரச்னைகள் வந்தாலும், இவை என் சந்தோஷத்துக்கும் கனவுகளுக்கும் தொந்திரவாக உள்ளது இதனை மாற்ற என்ன வழி வகை உள்ளது என்று ஆராய்ந்து பாருங்கள். மாற்றி யோசித்தால் போதும் எந்தப் பிரச்னையும் சுலபமாக நீங்கிவிடும். இதை ஒரு உதாரணம் மூலம் பார்க்கலாம். நாம் அனைவரும் ஜூவுக்குச் செல்லும்போதெல்லாம் வன விலங்குகளைப் பார்த்து ரசிப்பதுடன் அவர்கள் மீது திடீரென்று பொங்கும் பாசத்தால் அவை சாப்பிட நாம் எடுத்துச் சென்ற பழங்கள் அல்லது பிஸ்கெட்டுக்களைப் போடுவோம். சிலர் ஆர்வ மிகுதியில் தயிர் சாதம், சாம்பார் சாதம் அல்லது கறி மீன் உள்ளிட்ட முழு சாப்பாட்டையும் கூட போட முன் வருவார்கள். ஆனால் உப்பு புளி காரம் போட்டு சமைக்கப்பட்ட உணவுகள் அந்த விலங்குகளின் உடல் நலத்துக்கு ஏற்றவை அல்ல என்பது பற்றி யாருக்கும் அக்கறை இருக்காது.

இதில் பெரிய இம்சையை அனுபவிக்கும் விலங்குகள் யானைகள் மற்றும் குரங்குகள்தான். அதற்கு அடுத்தபடியாக மீன்கள். ஒரு குளத்தைக் கண்டால் போதும் நம்மவர்கள் பொரியை அள்ளி வீசுவார்கள். பொரி கூட பரவாயில்லை சிலர் மிதமிஞ்சிய அன்பால் சாக்லெட்டுகள், கடலை உருண்டைகள் என மீனுக்கு உணவுத் தருகிறேன் என்று கையில் கிடைத்தவற்றை எல்லாம் குளத்தில் எறிவார்கள். கோவில் அல்லது ஆறில் உள்ள மீன்களுக்கு பொரியைப் போடலாம். ஆனால் பராமரிப்பில் உள்ள மீன்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு அந்த வனவிலங்கு காப்பாளர்கள் அதற்குரிய உணவினை சரியான நேரத்துக்கு அளித்துவிடுவார்கள். 

ஜூவிலுள்ள விலங்குகளுக்கு நீங்கள் சாப்பிட வைத்திருக்கும் உணவை அளித்து தேவையற்றதை அவைகளுக்குத் திணிக்காதீர்கள். காரணம் மிருகங்களில் உணவுப் பழக்கம் வேறானது. நீங்கள் போடும் உணவு வகைகளை அவை சாப்பிடும்போது அவற்றுக்கு ஒவ்வாமை ஏற்படும். பலவிதமான உடல் பிரச்னைகள் வரும். இந்த பிரச்னை அதிகமிருந்த ஒரு வனவிலங்கு பூங்காவில் ‘விலங்குகளுக்கு உணவு தராதீர்கள்’ என்ற வாசகம் தாங்கிய பதாகைகளை பூங்கா முழுவதும் வைத்தனர். ஆனால் அங்கு வருகை தரும் பார்வையாளர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் மிருகங்களுக்கு சாப்பாடு போட்டு அவற்றின் ஆரோக்கியத்துக்கு பாதிப்பு விளைவித்த வண்ணம் இருந்தார்கள்.

என்ன செய்வது என அந்தப் மிருகக் காட்சி சாலையின் ஊழியர்கள் கவலையுடன் யோசித்துக் கொண்டிருந்த போது, அங்கு பழைய அதிகாரி மாற்றாகி சென்றுவிட புதியவர் ஒருவர் வந்து சேர்ந்தார். அவரிடம் இந்தப் பிரச்னையை முறையிட்டார்கள் ஊழியர்கள். அவரும் சிரித்தபடி இது ரொம்ப சுலபம் என்று கூறி ‘விலங்குகளுக்கு உணவு தர 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்’ என அறிவித்து ஒரு பதாகையை வைத்தார்.

மறுநாளிலிருந்து அங்கு வருகை தந்த பார்வையாளர்கள் அதைப் படித்து எங்களுடைய உணவைத் தருவதற்கு நாங்கள் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும். வேற வேலையில்லை என்று முடிவு செய்து அதன் பின் விலங்குகளுக்கு உணவு போடுவதை நிறுத்திவிட்டனர். ஊழியர்களுக்கும் நிம்மதி ஏற்பட்டது. விலங்குகளும் அவற்றுக்குரிய உணவை சாப்பிட்டு நலமுடன் வாழ்ந்தன.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் மாற்றத்துடன் யோசிப்பவர்களே ஜெயிக்கிறார்கள்! மேற்சொன்ன பிரச்னையில் முதல் நாம் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். ஜூவுக்குள் மிருகங்களைப் பாதுகாக்கும் காவலர்களா, தேவையற்ற உணவை போடும் மனிதர்களா இல்லை மாற்றத்தை யோசித்து வழிமுறையை கூறிய வெற்றியாளரா? யாராக இருக்க நாம் விரும்புவோம்? வெற்றியாளராக இருக்க ஆசைப்பட்டால் அதற்காக நம்மை அதற்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நம்முடைய கனவுகள் நனவாகும்போது மனது தன்னம்பிக்கையை தன்னுள் தக்க வைத்துக் கொள்ளும். அப்போது மனத்துக்குள் சந்தோஷம் தானாகவே வந்தடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com