திருமணமே வேண்டாமா? தாம்பத்திய உறவில் பயமா? உங்களுக்கு ஜீனோஃபோபியாவா?

தேவகி, கல்லூரியில் கடைசி வருடம் படிக்கும் ஒரு ஜாலியான பெண். அவள், எல்லோரிடமும் மிகவும் சகஜமாகப் பழகுவாள்
திருமணமே வேண்டாமா? தாம்பத்திய உறவில் பயமா? உங்களுக்கு ஜீனோஃபோபியாவா?
Published on
Updated on
4 min read

தேவகி, கல்லூரியில் கடைசி வருடம் படிக்கும் ஒரு ஜாலியான பெண். அவள், எல்லோரிடமும் மிகவும் சகஜமாகப் பழகுவாள். அவள் இருக்கும் இடத்தில், சிரிப்பலைகளுக்குப் பஞ்சமே இருக்காது. அவளது கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் நல்ல ஒரு வரனாகப் பார்த்து, சிறப்பாக அவள் கல்யாணத்தை நடத்த வேண்டும் என்று அவளது பெற்றோர்கள் தீர்மானம் செய்து இருந்தார்கள். அதற்காக சொந்தக்காரர்கள், அறிந்தவர்களிடம் நல்ல நாளாகப் பார்த்து, தேவகியின் ஜாதகத்தினை கொடுத்தார்கள்.

பெண் பார்க்கும் படலமும் தொடர இருந்த சமயத்தில், எந்த வரன் வந்தாலும் 'வேண்டாம் 'பிடிக்கவில்லை', 'எனக்குக் கல்யாணம் வேண்டாம்' போன்றவையே தேவகியின் பதிலாக இருந்தது. பெற்றோர்கள் மிகவும் குழம்பிப் போனார்கள். பெண்ணுக்கு ஏதாவது காதல் விஷயம் இருக்குமோ என்று நினைத்து, 'உனக்குப் பிடித்த பையன் யாராவது இருக்கிறானா? சொல்லித் தொலை. கல்யாணம் பண்ணிக் கொடுத்து விடுகிறோம்' என்று கூட சொல்லிப் பார்த்தார்கள். எதுவுமே இல்லை என்று துண்டைப் போட்டுத் தாண்டும் பெண்ணிடம் பெற்றோர்கள் என்னதான் செய்வார்கள்?

வீட்டில் பெரியவர்களோ, 'ஒரு வயசுப் பெண் அப்படித்தான் சொல்வாள். கல்யாணம் வேண்டும் என்றா சொல்லிக் கொண்டு அலைவாள்? என்று கூறியதின்  பேரில், உறவிலேயே ஒரு பையனைப் பார்த்து நிச்சயம் செய்து, திருமணத்தை, நல்ல முறையில் நடத்தினார்கள். முதல் இரவும் வந்தது. வீட்டில் வயதில் மூத்தவர்கள் என்னென்ன அறிவுரைகள் கூற வேண்டுமோ அவற்றை தேவைக்கு அதிகமாகவே கூறியும் வைத்திருந்தார்கள். ஆனால் நடந்தது என்ன?

தேவகி, அறைக்கதவைத் திறந்து கொண்டு, அலறிய வண்ணம் முதலிரவு அறையை விட்டு வெளியே ஓடி வந்தாள். அவளைத் தொடர்ந்த அவளுடைய கணவன், காரணம் புரியாமல், வெட்கிய மனநிலையில், அவளை வெளியே விட்டுவிட்டு ஏமாற்றத்துடன் வந்த வழி நடந்தான். ஓரிரு நாட்களில் சரியாகி விடுவாள் என்று நம்பியிருந்த அவள் பெற்றோர், கணவன் மற்றும் புக்ககத்தினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

கடைசியில், அவளை ஒரு மனோதத்துவ நிபுணரிடம் அழைத்துச் சென்றார்கள். ஒரு சிட்டிங், இரண்டு சிட்டிங் ஆன பின்பு மூன்றாவது சிட்டிங்கில் தான், தேவகி மனம் திறந்தாள். அவள், தோழியருடன், தாம்பத்தியம், குழந்தைப் பேறு  போன்ற விஷயங்களை பற்றி பேசுவதோடு, யூட்யூப் மூலம் அவற்றைப் பார்த்து தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டி வந்திருக்கிறாள். உடலுறவு கொள்ளுதல், கர்ப்பம் தரித்தல், குழந்தைப் பெறுதல் போன்ற விஷயங்கள் பற்றி விவாதிக்கவும் செய்திருக்கிறாள். அவளுடைய பயம் எல்லாம் உடலுறவிற்கு சம்மதித்தால், கர்ப்பமுற்று விடுவோம். பிறகு குழந்தை எப்படி சிறிய துவாரம் வழியாக வெளியே வரும்? மிகவும் வேதனையைக் கொடுக்குமே? நம்முடைய உடல் இதைத் தாங்குமா? என்பதே அவளுடைய பயமாக இருந்திருக்கிறது. இதை அவள் வெளியில் சொல்லி விடை தேட முடியாமல் பயந்து போயிருந்திருக்கிறாள்.

தேவகியின் மன நோயினை அறிந்து கொண்ட மருத்துவர், அவளின் பயத்தினைப் போக்கி, உலகில் உள்ள எல்லா தாய்மார்களின் அனுபவமும் இதுதான் என்பதை விளக்கி, வீட்டிற்கும் நாட்டிற்கும் ஒரு தாயால்தான் நல்ல பிரஜைகளை உருவாக்கித் தர முடியும் என்பதை விளக்கி, அவளது கணவரிடமும் சில நாட்கள் பக்குவமாக நடந்து கொள்ளும்படி அறிவுறுத்தி, அனுப்பி வைத்தார்.

உடலுறவு சம்பந்தமாக பல சம்பவங்கள் நித்தமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன, பொதுவாக இதுபோன்ற மனபீதிக்கு, ஜீனோஃபோபியா (XENOPHOBIA) என்று பெயர். புது மனிதர்களைக் கண்டாலோ, வேற்று நாட்டவர் மீதான வெறுப்பையோ ஜீனோஃபோபியா என்று சொல்வார்கள். ஒரு பெண்ணுக்கு திருமணம் என்ற பெயரில் ஒரு ஆணுடன் அன்யோன்யமாகப் பழகும்படி கட்டாயப்படுத்தப்பட்டால் இதே போன்ற மனவுணர்வு தோன்றிவிடுகிறது. அதன் தொடர்ச்சியாக சிலருக்கு கடும் பீதி ஏற்படுவதுண்டு. இதற்கு மனோதத்துவ நிபுணர்கள் கூறும் விளக்கம் என்ன தெரியுமா? '18 வயது முதல் 35 வயது வரை இருக்கும் பெண்களுக்கு, 'டெஸ்ட்டாஸ்டரோன் என்னும் ஹார்மோன், வழக்கத்தை விட குறைந்த அளவில் சுரப்பதால், இந்தக் குறை ஏற்படுகிறது. இக்குறை தனக்கு இருப்பதை ஒருவர் உணர்ந்தால் மருத்துவரை அணுகி உபாயம் தேடிக் கொள்வது நல்லது' என்கிறார்கள்.

தாம்பத்தியம் என்பது பயப்படவேண்டிய விஷயம் அல்ல என்பதை பெண்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். போதியளவு உடலுறவு கொள்வதால், பெண்களுக்கு, ஸ்ட்ரோக், மார்பகப்  புற்று நோய், இருதய சம்பந்தப்பட்ட நோய்கள், மன அழுத்தம் வருவது போன்றவை குறைகிறது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும் பொழுதும், ஆண்களுக்கு 200 கலோரிகளும், பெண்களுக்கு 70 கலோரிகளும் எரிக்கப்படுகின்றன.

இவ்வளவு சாதகமான விஷயங்கள் பெண்களுக்கு இருக்கும் பொழுது தாம்பத்திய உறவுக்குப் பயப்படுவானேன்? ஒரு ஆரோக்கியமான ஆணின் ஒரு ஸ்பூன் விந்துவில், 300 மில்லியன் உயிரணுக்கள் இருந்தாலும், ஒரு உயிரணு மட்டுமே,  மாதத்தில் ஒரு முறை, பெண் வெளிப்படுத்தும் ஒரு கரு முட்டையுடன் சேர்ந்து குழந்தையாக ஜனிக்கிறது.

ஆகையால், பெண்களே, கண்டதை படித்தும், கண்டதை பார்த்தும் மனதைக் குழப்பிக் கொள்ளாமல், உங்களுக்கு எழும் சந்தேகங்களை, பெரியவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். வீட்டில் மூத்தவர்களும், சந்தேகங்களை அலட்சியப்படுத்தாமல், கேள்வி கேட்பவர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு, அவர்களின் பயத்தினைப் போக்குங்கள். ஏனென்றால், இதில் வெட்கப்படுவதற்கு எதுவுமே இல்லை. பள்ளிப் பாடங்களிலேயே  எல்லாமே மாணவர்களுக்கு, அறியப்படுத்தப் படுகிறது.

இக்கட்டுரையே ஒரு உண்மை சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது தான். ஆகையால்,  குழந்தை வேண்டுபவர்கள், தாம்பத்தியத்தில் ஈடுபடும்பொழுது முழுமனதுடன் ஈடுபட்டால்தான், அதற்குண்டான பலன் கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com