மாற்றமில்லாததா? மாற்றக் கூடியவையா? பாகம் 4 விளைவுகள்

மனப்பான்மை என்பது நம் கண்ணோட்டத்தை குறிக்கிறது. நமக்கு எவ்வாறான மனப்பான்மை உண்டோ
மாற்றமில்லாததா? மாற்றக் கூடியவையா? பாகம் 4 விளைவுகள்
Published on
Updated on
3 min read

மனப்பான்மை என்பது நம் கண்ணோட்டத்தை குறிக்கிறது. நமக்கு எவ்வாறான மனப்பான்மை உண்டோ அது போலவே நம் ஆற்றல், நடத்தை, எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளும் அமையும். இந்த மனப்போக்கு மாற்றமில்லாததா? மாற்றக் கூடியவையா? என்பதைத் தான் இந்தத் தொடரில் ஆராய்ந்து வருகிறோம்.

இது வரையில் பார்த்ததில், நாம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் விதம் நம் மனப்பான்மையில் அடங்கும், நம் நடத்தையை அமைக்கும். உதாரணத்திற்கு, அதிக மதிப்பெண் பெறுவதால் தான் “சிறந்தவன்” என்று அடையாளப் படுத்திக் கொண்டுவிட்டால், அதைக் காப்பாற்றவே சவால்களை நெருங்க விடமாட்டோம்.

'புரியவில்லை, தெரியவில்லை' என்றாலும் கேள்விகள் கேட்க மாட்டோம், தெரியவில்லை என்ற சொல்லுக்கு இடமே தர மாட்டோம். தெரியவில்லை என்று சொன்னால் நம்மைப் பற்றி என்ன நினைத்து விடுவார்கள் என்ற அச்சத்தினால் இப்படிச் செய்வோம்.

விளைவுகள்

இது கடிவாளம் அணிவது போல் ஆகும். நாம், சந்தேகங்கள் கேட்க சங்கோசப் படுவோம். உதவி கேட்கத் தயங்குவோம். உதவிக் கேட்பதை பலவீனமாக நினைப்பதால் அந்த வழியைத் தேர்வு செய்ய மாட்டோம். மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன எண்ணுகிறார்கள் என்பது தான் தமக்கு மிக முக்கியமாகும். இதனால், நம்முடைய சந்தேகங்கள் அனைத்துமே 'தெரியவில்லை+ புரியவில்லை' என்றே தொடர்ந்து பயணம் செய்யும். நமக்கு எதுவெல்லாம் தெரியாமல் இருக்கிறதோ, அதுவெல்லாம் அப்படியே இருக்கும். இது நம்மை 'முடியவில்லை'யில் கொண்டு விட்டு விடும்.

அது மட்டுமின்றி, நாம், மற்றவர் சொல்லுக்கு ஏங்கி இருப்போம். அவர்களின் பாராட்டுகளே நம்மை ஊக்குவிக்கும். அந்தச் சொற்கள் ஒரு வேளை வராவிட்டால் நாம் செயலற்ற நிலையில் நிற்போம்.

மற்றவர்கள், புகழில் நம் வாழ்வு, செயல்களை ஒவ்வொன்றையும் அதனுள் அடக்கி வாழ்வோம். இதன் விளைவு - என்றென்றும் நாம் செய்ததை நன்றாக இருக்கிறது என்று தானே சொல்லவும் மாட்டோம், ஏற்றுக் கொள்ளவும் மாட்டோம். இது பணிவு அல்ல. மற்றவர் சொல்லுக்கு ஏங்கும் விதம். வேலை செய்யும் பொழுது, தானாக இயங்க மாட்டோம். மேலதிகாரியோ, மற்றவரோ கட்டளை இடக் காத்திருப்போம். ஏன் இப்படி நிகழ்கிறது? நாமாக அடிமைத்தனத்தை அமைத்துக் கொண்டதினால்!

இப்படியே பழகிவிட, நம் தன்னம்பிக்கை குறைந்து விடுகிறது. ஒவ்வொரு சமயமும் மற்றவர்கள் சொல்லியே செயல் படுவதால் நாமாக, சுயமாகச் செய்யும் துணிச்சல் சரிந்து விடுகிறது. அதனால் ஒவ்வொரு நேரமும் மற்றவர்களின் வழிகாட்டுதலுக்கே காத்துக் கொண்டு இருப்போம். நாமும் யோசிக்கலாம், செய்யலாம் என்பது நமக்குத் தோன்றாது. நாளடைவில் நமக்கு மற்றவர்கள் மேல் இருக்கும் நம்பிக்கை நம்மேல் இருக்காது.

அதுவும் குறிப்பாக, அதிகாரிகள், செல்வாக்கு உள்ளவருக்கு மட்டும் மரியாதையும், கவனமும் செலுத்துவோம். நம்மைப் பொறுத்தவரை இவர்களுக்குத் தான் எல்லாம் தெரியும். மற்றவர்களைத் துச்சமாகப் பார்ப்போம்.

நம் கண்ணோட்டங்கள் சூரிக்கி போய் கொண்டு இருக்கும். போகப்போக மற்றவர்கள் நம்மை அடையாளம் கொள்ள கஷ்டமாக இருக்கும், வெகு சீக்கிரத்தில் நமக்கும் நம்மை தெரியாமல் போய்விடும்.

நம்முடைய மனப்பான்மை விதமே, மற்றவர்களின் அந்தஸ்தை மதிப்பிட்டு, அது உயர்ந்த நிலையில் இருந்தால் மட்டுமே அவர்களின் பேச்சை ஏற்றுக் கொள்வோம். மறுப்பு சொல்ல மாட்டோம். இப்படிப் பார்த்தால் எத்தனைக் குறுகிய மனப்பாங்கு கொண்டவர்களாக ஆகி விட்டோம் என்பதையும் பொருட் படுத்தாமல் இருப்போம்.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நமக்கு வேறுபட்ட கருத்துகளை மற்றவர் நமக்குத் தெரிவிக்கலாம். ஆனால், அசட்டுச் சிரிப்புடன் அவர்கள் சொல்வதை ஆமோதிப்போம், ஏற்றுக் கொள்ள மாட்டோம். சில நேரங்களில் கண் ஜாடையினாலே வெறுப்பைக் காட்டிடுவோம். அதாவது, அவர்கள் சொல்லி, நம்மைச் சரி செய்வது நம் அகராதியில் இல்லாத ஒன்றாகும்.

எப்பொழுதும் இப்படியே நாம் இயங்கிக் கொண்டு இருப்போம், சொல்லப் போனால், பிற்காலத்தில், நாமாகச் செயல்படுவதை விரல் விட்டு எண்ணி விடலாம்.

சபாஷ் என்ற உணர்வு மட்டும் நம்மைச் செயல் படுத்தும்!

இதுபோல் இல்லாமல், தெரியவில்லை என்றால் கேட்டுத் தெரிந்து, புரிந்து செயல் படுபவரும் உண்டு. தன்னையே ஊக்கப் படுத்தி, செய்யும் காரியமே ஊக்கம் என்று மொழி கொள்பவரை அடுத்தபடி பார்க்கலாம்.

- மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com