மனப்போக்கு மாற்றமில்லாததா? மாற்றக் கூடியவையா?

நம் சிந்தனை எப்படியோ, நம் நினைவாற்றல் அப்படியே அமையும். நம்முடைய செயல்களும் அதே போலவே இருக்கும்.
மனப்போக்கு மாற்றமில்லாததா? மாற்றக் கூடியவையா?

நம் சிந்தனை எப்படியோ, நம் நினைவாற்றல் அப்படியே அமையும். நம்முடைய செயல்களும் அதே போலவே இருக்கும். நாம் எதை எப்படிச் செய்கிறோமோ, அவை நம்மைப் பற்றி மற்றவர்களுக்கு மட்டுமின்றி, நமக்கும் கூட தெரிவிக்கும். இதுதான் நம் மனப்பான்மையாகும். இதை, இது அமையும் விதங்களைப் புரிந்து கொள்வது முக்கியம்.

தன்னைக் கணக்கிடும் விதங்களை அறிய வேண்டும். நம் திறன்களை, அறிவுக் கூர்மையை, ஆற்றல்களை நாம் எப்படிப் பார்க்கிறோம், வளர்த்துக் கொள்கிறோம், எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் என்பதே நம் வெற்றி, தோல்வி, சந்தோஷம், நிராசைகளை நிர்ணயிக்கும். அப்படி என்றால், மனப்போக்கு மாற்றமில்லாததா?

இவற்றை வைத்தே நாமும் தன்னை மதிப்பிடுகிறோம். இந்த சுயமதிப்பீட்டை நாம் பல சைகைகள், நடத்தைகள் மூலம் மற்றவருக்கும் தெரிவித்து விடுகிறோம், அவற்றை வைத்தே மற்றவரும் நம்மை எடை போட்டு விடுவார்கள். மற்றவர்கள் நம்மைப் பற்றி நினைப்பதையும், அதைத் தெரிவிப்பதையும் கேட்டு, ‘ஆம், நாம் இப்படித்தான்’ என்று நாமும் முழுதாக நம்பி விடுகிறோம், இது நம் மனப்பான்மையாக வலுவடைந்து விடுகிறது. இந்த மனப்பான்மையில், நம்முடைய கண்ணோட்டங்கள், கருத்துகள் எனப் பல அடங்கும்.

அதாவது, புத்திசாலியா இல்லையா என்பதும், நம்மைக் கணக்கிடும் விதங்களில், நம்முடைய கருத்துக்கள், மற்றவர்கள் நம்மைப் பற்றி நினைப்பதும் அதைத் தெரிவிப்பதும் அடங்கும். இதிலிருந்து நம்முடைய கண்ணோட்டங்கள், கருத்துகள் எனப் பலவற்றே நம் மனப்பான்மையாகும்.

மனப்பான்மை என்பது நம்பிக்கைகள் மட்டும் அல்ல. நம் நம்பிக்கைகளை உருவாக்கும் விதங்கள், நம்முடைய தாக்கம், எதிர்வினைகளும் இதில் சேரும். இவை நம் கவனத்தை பல்வேறு வகைகளில் அமைத்துத் தரும், பலமுறை நம் செயல்களுக்கு வழிகளை வகுத்துத் தரும். நம்முடைய மனப்பான்மை நம்முடைய கையெழுத்து போல் வழக்கமான, வாடிக்கையான ஒன்றாக இருக்கையில், அதுவே நம் அடையாளமாகும், நாம் எப்பேர்ப்பட்டவர் என்பதை எடுத்துக் காட்டும்..

அதே போல், நம்மை மற்றவர்கள் கணக்கிடும் விதங்கள் பல உண்டு. அவர்களின் மனப்பான்மைக்கு ஏற்றவாறு அவர்களின் கணிப்பு வெவ்வேறு சூழ்நிலைகளில் நமக்குத் தெரிவிக்கப் படும். இவை மதிப்பெண்களாக, பரீட்சை முடிவுகளாக, பாராட்டுக்களாக, கோப்பைகளாகக் கிடைக்கும். சான்றிதழ்கள், பிறகு ஊதியம் என எவ்வளவோ இதில் அடங்கும்.

இதில், எதை எடுத்துக் கொண்டாலும் அதில் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது நிதர்சனம். மேலும், இந்த ஒவ்வொன்றிலும் மற்றவர்களுடன் போட்டியின் பங்கும் அதிகமாக இருக்கிறதை நன்றாகக் காணலாம்.

இவை அனைத்துமே மற்றவரின் கணிப்பினால் சூட்டப்படும் புகழும், (பெருமை / இழிவு) பட்டமும், பரிசுமாகும். பலமுறை இப்படி மற்றவர்கள் தெரிவிக்கும் கருத்தை ஏற்றுக் கொண்டு, நாம் இப்படித் தான் என்று இருந்து விடுவோம், மாறவே மாறாமல் அப்படியே இருப்போம்! அதனாலேயே நம்மை அப்படியே இருக்க அமைத்துக்  கொள்வோம். அதுவே நம்மை ஆட்கொள்ளும்.

நம்முடைய மனப்பான்மை சிலவற்றை நாம் நம் கலாச்சாரங்கள், பெற்றோரின் பழக்க வழக்கங்கள், நம்மைச் சுற்றி நடப்பதைப் பார்த்துக் கற்றுக் கொள்வதாகும். குறிப்பாக சில மாற்றங்கள் மிக உயர்ந்த நிலையில் வைத்த ஒருவரிடமிருந்து நாம் உட் கொண்டதாகும். இன்னும் சில மாற்றங்கள், ஒரு புரிதலால், ஒன்று படித்த பின்னால், கேட்டதால், இல்லை உரையாடியதில் ஆனதாக இருக்கலாம்.

அதனாலேயே நம் ஒவ்வொருவரின் மனப்பான்மையில் வேறுபாடுகளைப் பார்க்கிறோம். அதனால் தான் நம்மில் சிலர், தோல்வி என்றாலே பயந்து ஓடி விடுவார்கள். மற்றவர்கள் தோல்விகளைக் கையாளும் திறன் உள்ளவர்களாக இருப்பார்கள். சிலர் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்களாக இருப்பவர்கள், தோல்வியைக் கற்றலுக்கு வைப்பாக வரவேற்கும் நபர்களாக இருப்பார்கள்.

நம் எல்லோருக்கும் உள் உணர்வில் புதியதை ஆராய, வெவ்வேறு விதமாகச் செய்ய, சாதிக்க ஆசை இருக்கிறது. இதை நிறைவேற்ற, நாம் எவ்வாறு நம் மனப்பான்மைகளை வளர்த்துக் கொள்கிறோம் என்றும், அவை எப்படி ஒன்று சேர்ந்து நம்முடைய மெய்ப்பொருளாகிறது என்பதைப் புரிந்து கொள்வது மிக அவசியம்.

அதே போல் நாம் நம்முடைய சமுதாய திறன்களை, மற்றவர்களுடன் பழகும் திறன்களை, நம்முடைய ஆராயும் திறன்களை பற்றியும் புரிந்து கொள்வது தேவை. இவற்றை அறிந்து கொண்டு, எப்படி நம் மனப்பான்மை உருவாகிறது என்பதைத் தெரிந்து கொண்டாலே பல விதத்தில் நமக்கு முன்னேறும் பாதை தெரிய வரும்.

மனப்பான்மை என்பது நிரந்தரமாக இருப்பது இல்லை. மனப்போக்கு மாற்றக் கூடியவையா? மாற்ற முடியும். அதற்கு நாம் நம்மைக் கணிக்கும் விதங்கள் என்ன? நமக்கே கொடுக்கும் பரிசுகள் எவை? நாம் கையாளும் முறைகள் என்னென்ன? மற்றவர்கள் நமக்குத் தெரிவிக்கும் தகவல்களை எவ்வாறு / எப்படி உள்வாங்கிக் கொள்கிறோம்? இவற்றை நமக்குச் சாதகமாகவும், எதிராகவும் நாம் செய்வதை வர வாரங்களில் இந்தப் பகுதியில் மனப்போக்கு: மாற்றமில்லாததா? மாற்றக் கூடியவையா?” என்று சற்று ஆராய்வோம்.

- மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com