Enable Javscript for better performance
மனப்போக்கு: மாற்றமில்லாததா? மாற்றக் கூடியவையா?”- Dinamani

சுடச்சுட

  

  மனப்போக்கு: மாற்றமில்லாததா? மாற்றக் கூடியவையா?

  By மாலதி சுவாமிநாதன்  |   Published on : 18th October 2018 11:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  foto

  1: நம் அடையாளம் 

  மனப்பான்மை என்பது மிகச் சுவாரஸ்யமான ஒன்று. நம்முடைய மனப்பான்மை நம்மை உருவாக்குகிறது. இதுவரை அறிமுக பாகத்தில் நாம் பார்த்தது: இந்த மனப்பான்மையை உருவாக்குவது நம் சிந்தனை, ஆற்றல், கண்ணோட்டம், மற்றவர்கள் நமக்குத் தெரிவிப்பது என்று பலவற்றே.

  நம்முடைய மனப்பான்மை, நம்மை யார் என்று எடுத்துக் காட்டும். இந்தப் பகுதியில் இது எப்படி நிகழ்கிறது, நாம் எவ்வாறு நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம் என்பதைக் கொஞ்சம் ஆராய்வோம்.

  நம் அடையாளம் : நம்மை அடையாளப்படுத்தும் விதங்கள்

  நாம் எல்லோரும் விரும்புவது: வாழ்வில் நலமாக, வளமாக இருக்கவே. நம் உடல்+மன வளம் ஆரோக்கியமாக இருந்திடவே, நன்கு ஆரோக்கியமாக இருந்திடவே. இப்படிப்பட்ட வாழ்வை அமைத்துக் கொள்வது நம் கையில் தான் இருக்கிறது என்றே சொல்லலாம். இருப்பினும் நமக்குள்:

  சில சந்தேகங்கள்: கேட்கலாமா? வேண்டாமா?

  சில அச்சங்கள் : மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?

  சில பயங்கள் : என்னால் இதைச் செய்ய முடியுமா? என்னாலயா? சான்ஸே இல்லை!

  எப்பொழுதாவது ஒரு முறை இது போல் நிகழ்ந்தால் அது பொதுவானது என்றும், சாதாரணமான ஒன்று என்று நடக்கக் கூடியவை என்றும் விட்டு விடலாம். திரும்பத் திரும்ப இப்படியே நிகழ்ந்தால், நம்முடைய மனநலனை பாதிக்கும். மனநலன் பலவீனம் அடைய வாய்ப்பாகிவிடும்.

  அப்படி நேராமல் இருக்க, மனப்பான்மை உருவாகும் விதங்கள் என்னென்ன, அது நம் அடையாளத்தை நிலை நாட்டுவது எப்படி என்பது, கண்டிப்பாகப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். இப்படி அறிந்து செய்யும் போது சலசலப்பு அடைய வாய்ப்புண்டு. ஏனென்றால் இதுவரையில் இருந்த விதத்தைப் பற்றி யோசித்து, அது நமக்குச் சாதகமான ஒன்றா இல்லை மாற்ற வேண்டியதா என்பதைச் சிந்திக்க வைக்கும். சலசலப்பும் குழப்பமும் ஏற்பட்டாலும் நம்முடைய மனநிலையை ஆராய்ந்து பார்க்க வேண்டும். சரி செய்வதே நன்று.

  செய்யாவிட்டால் இப்படி நேரலாம் :

  போச்சு போ. வெறும் 45 மார்க்! மீதி 5 மார்க்கை கோட்டை விட்டேன். வெட்கமா இருக்கு. சரியான மக்கு நான்’

  ஆமா, இந்தப் பேச்செல்லாம் வீட்டில் தான்.

  ஸ்கூல்ல கப்-சிப்.’

  ஊஹும், வேலை வாங்காதே. படிக்கட்டும்’

  நல்லா படித்து,  நிறைய மார்க் வாங்கினா, அதுவே எங்களுக்குப் போதும்’

  எனக்கு இப்படிதான் வேலை செய்து பழக்கம்.  அப்படியே செஞ்சுடறேன்’

  அவங்க பொறுப்பா வேலை செய்வாங்க. ஆன புதுசா ஏதானும் செய்யச் சொன்னா தயங்குவாங்க’

  நன்றாகப் படித்து, பிறர் கேட்கும் சந்தேகங்களுக்குப் பதில் அளித்து, புரிய வைத்து, உடன் பிறந்தவர்கள் - கூடப் பணி புரிபவர்கள் – வீட்டினருக்கும் உதவி செய்வோரைப் பற்றி நாம் இங்கு அதிகம் பேசப் போவதில்லை. வெவ்வேறு காரணங்களினால் மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டு, தன் திறமைகளின், முயற்சிகளின் முழுப் பயனை அடைய முடியாமல் போவது எதனால், அதைத் தவிர்ப்பது எப்படி என்று வர வாரங்களில் பார்ப்போம்.

  மற்றவர்களுக்கு நம்முடைய அடையாளமாகவும்,  முத்திரையாக படுத்துவது நம் பெயர். நமக்குள் அடையாளப் படுத்துவது தன்னைப் பற்றிய அபிப்பிராயம். இதில் அடங்குவது: தேர்வில் நமக்குக் கிடைக்கும் மதிப்பெண்கள், மற்றவர் அளிக்கும் சபாஷ், அடுத்தவர்கள் தெரிவிக்கும் அபிப்பிராயங்கள். இவற்றை முழுமையாக ஏற்றுக் கொண்டு, தம்முடைய அடையாள முத்திரையாக நாம் வைத்துக் கொள்வதுண்டு.

  எக்காரணத்தினால் இந்த நிலையில் செல்கிறோம் என்பதின் புரிதல் மிகவும் அவசியம். நாம் யார் என்று நம் புரிதலிருந்தே மற்றவர்களுக்கும் காட்டுவோம். புரிதலினால் மாறும் நம் செயல்கள், நாம் யார் என்பதை எடுத்துக் கூறும். அதுவே நம் அடையாளம் ஆகிவிடும்

  தனக்கென்று இல்லாமல், மற்றவர்களின் அபிப்பிராயத்தை வைத்தே தன்னைப் பற்றி முடிவு எடுப்பவர்கள் எப்படி செயல் படுவார்கள் என்பதைப் பற்றி முதலில் பேசலாம்.

  எல்லோரும் சொல்வதனால் தான் நான் தான் புத்திசாலி’

  குறிப்பாக மாணவர்கள் மத்தியில் இதை அதிகம் பார்க்க நேரிடும்.

  நிறைய மார்க் கிடைக்கிறது. அதனால் தான் எல்லாரும் என்னைப் புத்திசாலி என்கிறார்கள். அப்படின்னா நான் புத்திசாலி தான்’.

  எப்பவும் நிறைய மார்க் எடுக்க வேண்டும்.

  அப்போது தான் மதிப்பு’.

  குறைந்த மார்க் வந்தா? மத்தவங்க என்னை மார்க் கேட்டா, என்ன பதில் சொல்வேன்?’

  மதிப்பெண் குறைந்தால், நானே என்னை மதிக்க மாட்டேனே’

  வளரும் பருவத்திலிருந்தே இப்படிக் கணக்கிடுவதால் இந்த மனப்பான்மை அவர்களின் அடையாளமாகிறது. மேற்சொன்னதை திரும்பப் படித்து பார்த்தால், அதில் தன்னைத் தாழ்த்திக் கொள்வது தெளிவாக தெரியும்.

  அன்னிக்கி மீடிங்க்ல தவறா பேசிட்டேன். எனக்கு கஸ்டமர் கிட்ட பேச வராது’

  எல்லாரும் நான் தயார் செய்த ரிப்போர்ட் நல்லாயிருக்குன்னு சொன்னாங்க. ரிப்போர்ட் தயார் செய்வதுதான் எப்பவும் என் வேலைன்னு வெச்சுப்போம்’

  கல்வி கற்றுக் கொள்ளும் வரையில் மதிப்பெண்களே குறியாக இருப்போம். மதிப்பெண் ஒன்றே நம் அடையாளம் என்று இருந்துவிட்டால், வேலை செய்யும் போதும் மற்றவர்களின் சொல்லுக்கு ஏங்கி, எதைச் செய்தால் மற்றவர்களின் நற்சொல் கிடைக்கும் என்று எதிர்பார்த்து அதை மட்டும் செய்து கொண்டிருப்போம். ஒரு முறை முடியாமல் போய்விட்டால் அதற்கு என்றென்றைக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைத்து விடுவோம்.

  எந்த விதத்தில் இவற்றைப் பார்த்தாலும், ஒவ்வொன்றும் அவர்களின் ஒரு பகுதியை தான் காட்டுகிறது. அதற்கு மட்டும் முக்கியத்துவம் தந்து, அதுதான் தன் முழு அடையாளம் என்று ஏற்றுக்கொள்வார்கள்.இப்படித் தான் நான்’ என்ற உறுதியோடு இருப்பார்கள். ஏன் இப்படிச் செய்தோம் என்பதை ஆராயாமல் இருப்பதும் உண்மை.
   

  இவர்களின் திறமைகளில், திறன்களோ எந்த ஒரு குறைபாடும் இருக்காது. இருந்தாலும், மற்றவர்கள் தரும் சான்றிதழ்களுக்கும், மதிப்பெண்களுக்கும் மதிப்பீட்டிற்கும் மட்டும் ஏன் இத்தனை ஒரு மவுசு? அடுத்து வரும் பகுதியில் இதைப் பற்றி பேசுவோம்.

  - மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

  malathiswami@gmail.com

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai