பொறாமை எண்ணத்தை முதலில் கைவிடுங்கள்! மனநல மருத்துவர் அறிவுரை!

என் வயது 46. பள்ளியிலும், கல்லூரியிலும் என்னுடன் படித்த சில வகுப்பறை மாணவர்கள் இன்று நல்ல நிலைமையில் இருக்கிறார்கள்.
பொறாமை எண்ணத்தை முதலில் கைவிடுங்கள்! மனநல மருத்துவர் அறிவுரை!

வாசகர்களின் மனநலம் சார்ந்த கேள்விகளுக்கு மனோ தத்துவ நிபுணர் டாக்டர் லட்சுமி விஜயகுமார் அளித்த பதில்கள்:

என் வயது 46. பள்ளியிலும், கல்லூரியிலும் என்னுடன் படித்த சில வகுப்பறை மாணவர்கள் இன்று நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். ஆனால், என்னால் அது போன்று ஆக முடியவில்லை.

இதனால் என் நண்பர்கள் மீது பொறாமைப்படுகிறேன். இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு வீட்டிலும், வெளியிலும் எல்லாரிடத்திலும் அதிகம் கோபப்படுகிறேன். அடிக்கடி ஏற்படும் மனப் போராட்டம் காரணமாக, நிதானத்தை இழந்து எரிச்சல் அடைகிறேன். அவர்களிடம் செயற்கையாகப் பழகுகிறேன். இதை குணப்படுத்த என்ன வழி? உங்களது ஆலோசனை வேண்டும்.

- விஜயசங்கர், திருச்சி.

பொதுவாக பொறாமை வந்தாலே கோபமும், எரிச்சலும் கூடவே வந்துவிடும். எனவே, அடுத்தவரை நீங்கள் கம்பேர் செய்தால், பிரச்னை உங்களுக்குதான். பொதுவாக எந்தவிதத்தில் பார்த்தாலும், நம்மை விட நல்ல நிலையில் 10 பேர் இருப்பார்கள், நம்மைவிட குறைந்த நிலையில் 10 பேர் இருக்கத்தான் செய்வார்கள். இது இயல்பு. இதை நம்மால் மாற்ற இயலாது. இதனால், மேலே இருப்பவர்களைக் கண்டு பொறாமையும் படக் கூடாது. கீழே இருப்பவர்களை கண்டு சந்தோஷப்படவும் கூடாது. உங்களால் செய்ய முடிந்ததை முயற்சி செய்து கொண்டே இருங்கள். மேலும், உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை வேண்டும். அதைவிட்டு அடுத்தவருடன் கம்பேர் செய்தால் ஏமாற்றம்தான் கிடைக்கும். அந்த ஏமாற்றம்தான் உங்களுக்கு எரிச்சலையும், கோபத்தையும் கொடுக்கிறது. இதை இப்படியே விட்டுவிட்டீர்களானால், நாளாடைவில் உங்களை உங்களுக்கே பிடிக்காமல் போய்விடும். அதன்பிறகு மற்றவர்களுக்கு உங்களை எப்படி பிடிக்கும்.

அதனால் பொறாமை எண்ணத்தை முதலில் கைவிடுங்கள். உங்களுடன் படித்தவர்கள் இன்று நல்ல நிலைமையில் இருக்கிறார்கள் என்று சந்தோஷப்படுங்கள். பொதுவாக அறிவியல் ரீதியாக சொல்லப்படுவது, நாம் ஒருவர் மீது அதிகளவில் பொறாமையோ, கோபத்தையோ காண்பித்தால், அது அவரைவிட நம்மைதான் அதிகம் பாதிக்கும் என்பார்கள். ஏனென்றால், பொறாமையும், கோபமும் ஏற்படும்போது நமது உடலில் மாற்றங்கள் ஏற்படும். அதாவது நம்மை அறியாமலே, பிரஷர் ஏறும், சுகர் ஏறும் அது நமது உடலை பாதிக்கும். பிரஷரும், சுகரும் ஏறும்போது நம்மை சார்ந்தவர்களிடமே நமக்கு கோபம் வரும். இதனால் நம்மை சார்ந்தவர்களின் அன்பையே நாம் இழக்க நேரிடும். உடனே நமக்கு, நம்மை சார்ந்தவர்களே நம்மை மதிக்கவில்லையே என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். எனவே, உங்கள் குணத்துக்காக மதிப்பவர்களிடம் நட்பாக இருங்கள். பணத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருந்தால், அப்படிப்பட்ட நட்பே உங்களுக்கு தேவையில்லை. எனவே, நீங்கள் மற்றவரின் வெற்றியில் மகிழ்ச்சி கொண்டால் தான் உங்கள் மனநிலை மாறும். உங்கள் வாழ்க்கையும் மாறும்.

என் கேள்வி இதுதான். எனது ஓரகத்தியின் பெயர் கீதா. அவருக்கு 50 வயதாகிவிட்டது. நொய்டாவில் வசித்து வருகிறார். அவருக்கு சென்ற 4,5 வருடங்களாக உடம்பு சரியில்லை. மனதில் ஏதோ நினைத்து கொண்டு இருக்கிறார். சில நேரங்களில் சரியாக பேசுகிறார். சில நேரங்களில் கோபமாக பேசுகிறார். எல்லோரிடமும் கோபப்படுகிறார். அவருக்கு ஒரு பெண் இருக்கிறாள். பி.டெக் முடித்துவிட்டு தில்லியில் பெரிய நிறுவனத்தில் நல்ல வேலையிலும் இருக்கிறாள். ஆனால், மகளிடமும் என் ஓரகத்தி கோபமாக பேசுகிறார். எதனால் இப்படி ஆகிறது என்று தெரியவில்லை. மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. இதை எப்படி சரி செய்வது. அவர் உடல் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
- சுதா, நியூதில்லி.

உங்கள் ஓரகத்திக்கு 4-5 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லை என்று பொதுவாக சொல்லியுள்ளீர்கள். அவருக்கு உடல் ரீதியாக என்ன பிரச்னை என்று குறிப்பிட்டிருந்தால், அதற்கான தீர்வு என்னவென்று சொல்லியிருக்கலாம். அப்படி உடலில் எந்த பிரச்னையும் இல்லாமல், கோபப்படுவதும், எரிந்து விழுவதும்தான் அவரது பிரச்னையாக இருந்தால், இதனால் கூட இருக்கலாம். அதாவது, பொதுவாக பெண்களுக்கு 45-50 வயதுகளில் மாதவிடாய் நிற்கக் கூடிய காலம். எனவே, சில பெண்களுக்கு அந்த சமயத்தில் மன அழுத்தம் வரக் கூடிய வாய்ப்புகள் உண்டு. இதனால் எதைக் கண்டாலும் எரிச்சல் இருக்கும். எல்லோர் மீது கோபப்படுவார்கள். சரியாக தூங்க மாட்டார்கள். வெயிட் போட்டுவிடுவார்கள். சிலர் பார்த்தீர்கள் என்றால், இதுவரை நம்மை எல்லோரும் பயன்படுத்திக் கொண்டார்கள். இப்போது நமக்கு ஒன்றுமேயில்லை. யாருமே இல்லை போன்ற எண்ணங்கள் எல்லாம் வரும். இது, "போஸ்ட் மெனோபாஸ் அன்ட் டிப்ரஷன்' ஆக இருக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. அதுதான் அவரது பிரச்னை என்றால், அருகில் இருக்கும் மனநல மருத்துவரை அணுகினால், அவருக்கு தேவையான சிகிச்சை முறைகளை சொல்லுவார்.

பொதுவாக மன அழுத்தம் உள்ளவர்கள், ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டும் என்று அவசியமில்லை. அவர்கள் பார்க்க நார்மலாகத்தான் இருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு எதை பார்த்தாலும் ஒரு வெறுப்பு, எரிச்சல் இருக்கும். அதுவும் மன அழுத்தத்தின் அறிகுறிதான்.

அல்லது அவர்களுக்குள் ஏதாவது பிரச்னை இருக்கலாம். அதை வெளியில் சொல்லாமல் இருக்கலாம். அந்த பிரச்னைதான் அவரை இது போன்று நடந்து கொள்ள செய்யலாம். எனவே, அவரை அருகில் உள்ள மனோ தத்துவ நிபுணரிடம் அழைத்துச் சென்று கவுன்சிலிங் கொடுத்தால் சரியாகிவிடுவார். இதனை விரைவில் செய்யுங்கள். ஏனென்றால் அவருக்கு இளம் வயதில் மகள் இருப்பதாக கூறியுள்ளீர்கள். அவருக்கு திருமண ஏற்பாடுகள் எல்லாம் செய்ய வேண்டும் என்றால், அவரது மன நிலை சந்தோஷமாக இருந்தால்தான் நல்லது.
 

சந்திப்பு: ஸ்ரீதேவி
 
 மன நலம் சார்ந்த பிரச்னைகளா?

குடும்பத்தில்... அலுவலகத்தில்... பள்ளி...கல்லூரிகளில்... என சமூகம் சார்ந்த உங்கள் மனநலப் பிரச்னைகள் எதுவாக இருந்தாலும், நீங்கள் கேள்வி கேட்கலாம்.

உங்களது சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார் பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் லட்சுமி விஜயகுமார் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:

 தினமணி - மகளிர்மணி, எக்ஸ்பிரஸ் கார்டன்,
 29, இரண்டாவது முதன்மை சாலை,
 அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை - 600058.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.