3. குழந்தைகள் வேலைகளில் ஒத்துழைப்பு செய்வதின் நன்மைகள்!

குழந்தைகள் பொறுப்பு உள்ளவர்களாக, மற்றவர்களுக்கு மரியாதை செலுத்தி, உதவும் மனப்பான்மையுடன் வளர வேண்டும்.
"சேவாலயா" மையத்தில் நடைபெற்ற காந்தி ஜயந்தி விழாவில், மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய ஐ.கே.கே.டி. நிறுவன தலைமை அதிகாரி டாம்லுக்கே.
"சேவாலயா" மையத்தில் நடைபெற்ற காந்தி ஜயந்தி விழாவில், மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய ஐ.கே.கே.டி. நிறுவன தலைமை அதிகாரி டாம்லுக்கே.

குழந்தைகள் பொறுப்பு உள்ளவர்களாக, மற்றவர்களுக்கு மரியாதை செலுத்தி, உதவும் மனப்பான்மையுடன் வளர வேண்டும். இது பெற்றோர், ஆசிரியர், குழந்தைகளுடன் நேரம் செலுத்தும் விதத்தில்தான் உள்ளது. குழந்தைகளின் வயதுக்கேற்ப, அவர்களின் உடல் வளர்ச்சிக்கும் ஏற்றவாறு வேலைகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் அளித்தால், போகப் போகத் தானாகவே எடுத்துச் செய்வது அவர்களுக்கு பழக்கமாகிவிடும், மேற்கண்ட நற்குணங்கள் தானாக அமையும்.

இருந்தும் சில குழந்தைகளுக்கு எதிர்மறையான தன்மை இருப்பதின் காரணியைச் சென்ற வாரம் பார்த்தோம். இந்த குழந்தைகள் எவையெல்லாம் இழந்து விடுவார்கள் என்பதை இங்குச் சொல்லுவதைப் புரிந்ததும் தெளிவாகிவிடும்.

குழந்தைகள் எப்போது, ஏன் ஒத்துழைப்பு செய்ய வேண்டும்?

குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கையில் அவர்கள் அங்கே இங்கே எனப் போய் பொருட்களை எடுத்துக் கொள்வார்கள். இன்னும் கொஞ்சம் வயது கூடியதும், மேலும் சிலவற்றை நம்முடனும், தானாகவும் செய்வார்கள். வளர வளர, சொல்லத் தேவையில்லை, தானாகச் செயல்படுவதே வழக்கமாகும்.

இதைப் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, அவர்களை வீட்டு வேலைகளில் பங்கேற்பது, தாங்களாகச் செய்ய விடுவது சரிதானா என்று ஏதேனும் சந்தேகம் இருந்தால், உங்களின் பல கேள்விகளுக்கு ஆராய்ச்சிகள் பதில் அளிக்கின்றன. 

குழந்தைகள் வேலைகளில் ஒத்துழைப்புத் தருவதைப் பற்றி எழுபத்து ஐந்து வருடங்களாகத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தார்கள். இப்படி நீண்ட கால ஆராய்ச்சியின் குறிக்கோள், குழந்தைப் பருவத்தில் உதவி செய்பவர்கள், செய்யாதவர்கள் நூற்றுக்கணக்கானோரைக் கண்டெடுத்து, அடுத்த 30-40 வருடங்களில் அவர்களின் வாழ்க்கை எப்படி அமைந்தது என்ற தகவல்களையும் சேகரித்து, இரு தரப்பினரின் அனுபவங்களின் வித்தியாசங்களின் மூலம், சிறு வயதில் உதவுவதின் பிற்கால விளைவுகள் என்னென்ன என்பதை ஆராய்வதே  ஆகும். இந்த ஆராய்ச்சி முறைக்கு நெடுங்கால ஆராய்ச்சி (longitudinal study) என்று பெயர்.

இதில் தெளிவான தகவல்கள் இவை: வீட்டு வேலைகளில் பங்கேற்ற குழந்தைகள், மற்றவர்களைப் புரிந்து கொண்டு செயல்பட்டார்கள், நல்ல ஆரோக்கியமாக இருந்தார்கள், தானாகச் செயல்பட்டு, தைரியத்துடனும், பொறுப்புணர்வுடனும், தன்னடக்கத்துடனும் வளர்ந்தார்கள். இந்தக் கண்டுபிடிப்பைப் பல ஆராய்ச்சிகளின் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 

இப்படி அமைவதற்குப் பல காரணிகள் உண்டு. குழந்தைகளை வேலையைச் செய்யவோ உதவவோ சொல்வதினால் நாம் அவர்களுக்குத் தெரிவிப்பது, "உங்களால் முடியும் எனத் தோன்றுகிறது / நினைக்கிறேன்" என்று. அதாவது, நாம் கேட்பதால், அந்த வேண்டுகோளே குழந்தைகளை உயர்த்தி விடுகிறது. இதன் மூலம் அவர்களின் திறமைகளின் மேல் நாம் வைத்துள்ள அபிப்பிராயத்தைத் தெரிவிக்கிறோம். இதுவே அவர்களை உத்வேகம் செய்து, அவர்களைச் செயல் நோக்கமாக இருக்கச் செய்கிறது.

குழந்தைகள் உதவுவதின் விளைவுகள்

குழந்தைகளை ஒரு போக்கில் நடத்தி வந்தால், நாளடைவில் அவர்கள் "ஓஹோ, நாம் இப்படித்தான்" என்று அப்படியே நம்பி, அதற்கு ஏற்றவாறே நடந்து கொள்வார்கள். இந்த கண்ணோட்டத்தையும் ஆராய்ச்சி செய்து நிரூபித்துள்ளார்கள். அதை "பிக்மெலியியன் எஃபெக்ட்" (Pygmalion effect) என்பதுண்டு. உதாரணத்திற்கு, குழந்தை முயலும் போது உடனடியாக உன்னால் முடியாது என்று எதிர்மறைக் கருத்துக்களை நாம் தெரிவித்தால் குழந்தைக்குத் தன்மேல் சந்தேகம் எழும். இதனால் நம்பிக்கையை இழக்கக் கூடும். ஒவ்வொரு முறையும் செய்யும் போது இதைப் போலவே கேட்டுக் கொண்டிருந்தால் "ஆமாம் நம்மால் முடியாது" என்று குழந்தைகளும் நம்பி விடுவார்கள்.

மாறாக, முடியும் என்று நாம் சொன்னால், தன்னால் முடியாவிட்டால் கூட, செய்து காண்பிக்கக் குழந்தை பெரும் முயற்சிகள் எடுக்கும். இதற்காகத்தான் குறிப்பாகக் குழந்தைகளுடன் இருப்பவர்கள் பெற்றோரோ, உறவினர்களோ, ஆசிரியர்களோ நம் அணுகுமுறைகள் குழந்தைகளின் மனப்பான்மையை அமைக்கக் கருவியாகிறது என்பதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எந்த சந்தேகமுமின்றி, குழந்தைகளை "செய்கிறாயா?" என்று கேட்பதின் நேர் விளைவு, "இவர்கள் என்னைக் கேட்கிறார் என்றால், என்னால் இதைச் செய்ய முடியும் என்பதால்தான்" எனக் குழந்தைகள் உணர்வார்கள். 

குழந்தைகளுக்கு அந்த வயதிற்கு ஏற்றவாறு, வளர்ச்சிக்குப் பொருந்திய வேலைகளைக் கொடுத்தால் ஈடுபாட்டுடன், ஆர்வத்துடன்  செய்யத் தோன்றும். செய்யச் செய்ய அவர்களுக்கும் தன்னால் முடிகின்றது என்று புரியவர, தாராளமாகச் செய்ய முன் வருவார்கள். இதைக் குழந்தையின் இளம் பருவத்திலேயே உணர்த்தினால் வெகு சீக்கிரமே பொறுப்புள்ளவர்களாக வளருவார்கள். தொடக்கத்திலேயே இவ்வாறு செய்வதால் அதன் மூலம் குழந்தைகளுக்குத் தெரிவிப்பதின் உள் அர்த்தமான "உன்னால் சாதிக்க முடியும் என நான் நம்புகிறேன், செய்வது நல்லது" என்றது பிஞ்சு மனதில் துளிர் விட ஆரம்பமாகிறது.  

இதன் விளைவாக, குழந்தைகள் அப்போது கேட்பதைச் செய்வதுடன் நிறுத்திக் கொள்ள மாட்டார்கள். இதுவரையில் சேர்ந்து முயன்றதைத் தானாகவே செய்ய வேண்டும் என்று இன்னும் பிரயத்தனம் செய்வார்கள். 

இதுவும் அர்த்தமுள்ள நடத்தை. கற்று வரும் காலகட்டத்தில் ஒன்றைப் பல முறை செய்து பார்த்துத்தான் திறமைகளை வளர்த்துக் கொள்வார்கள். ஒன்றை மீண்டும் மீண்டும் செய்ய, தன்னால் முடியும் என்பதைக் குழந்தைகள் உணர்ந்து, அதன் செய்முறையை முழுமையாகக் கற்றுக்கொள்வார்கள். இந்தச் சமயத்தில் குழந்தைகளுடன் இருக்கும் நாம் அதற்குப் பல வாய்ப்புகளைத் தர வேண்டுமே தவிர, குறுக்கிட்டால் வளர்ச்சிக்குப் பாதிப்பு ஏற்படுத்தும். தவறுகள் ஏற்பட்டால், முதலில் அவர்களுக்குத் தானாகவே சரி செய்ய வாய்ப்புக் கொடுக்க வேண்டும், தேவைப்பட்டால் மட்டுமே நாமாகச் சரி செய்து காட்டலாம்.

குழந்தைகளை இப்படிச் செய்ய விடுவதால் அவர்களுக்குப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு செய்வது நிதர்சனமாகும். மனதில் தாங்களும் உதவுகிறோம், வீட்டுப் பொறுப்புகளில் பங்குண்டு என்பது பதிய, தங்களைப் பற்றி அவர்களுக்கு நல்ல அபிப்பிராயம் பிறக்க, நல்ல மனிதர்களாக வளர்வதற்கான பாதையாகிறது. அது மட்டுமல்ல, குடும்பத்தினருடன் உறவு மேலும் வலுவடையும்.

வேலை செய்தால்தான் இந்த பற்றா? குடும்பத்திலும் சரி, வேலை இடங்களிலும் சரி, குழுவாகப் பங்கேற்றுச் செய்வது சகஜம், மிகவும் அவசியம். ஆராய்ச்சியாளர்கள் இதை இன்டர்டிபென்டன்ஸி (interdependency) என்பார்கள். நாம் எல்லோரும் இயங்குவது ஒருவருக்கு ஒருவர் சேவைகள் செய்து, சேவைகள் பெற்றுத்தான். இந்த நன்மைகளின் பரிமாற்றமே பற்றின் அடிப்படையாகும். 

இது மட்டுமல்ல, வேலையில் ஈடுபடுபவர்கள் தங்களை அந்தச் சூழலில் ஒரு அங்கமாக, தனக்கும் முக்கியத்துவம் இருப்பதை உணருகிறார்கள். தங்களால் மற்றவர்களுக்கு உதவ முடிகிறது, அந்த பூரிப்பைச் சின்ன வயதில் உணருவதே அந்த குணத்தை என்றென்றும் நிலைக்க உதவுகிறது. தானாகவே வீடு மட்டுமின்றி வெளி உலகிலும் இதைச் செய்ய ஆரம்பிப்பார்கள். எல்லாவற்றின் மூலகாரணம், குழந்தைகளுக்கு வேலையில் பங்கு கொள்ள வைப்பதும், அவர்கள் செய்து மகிழ்வதும்தான்.

வேலை செய்வதின் நன்மை!

குழந்தைகளை வேலைகளில் ஈடுபடச் செய்வதில் ஆய்வாளர்கள் வேறொரு நன்மையைப் பற்றியும் விவரித்து இருக்கிறார்கள். அதாவது குழந்தைகளை வளரும் போதே அவர்களைச் செய்ய வேண்டுகோள் விடுத்து, சின்னச் சின்ன வேலைகளைத் தந்து, செய்ய வைப்பதில் அவர்களின் "வாழ்வுத் திறன் கற்றல்"களான யோசித்தல், உணர்வு, உரையாடி, தொடர்பு கொள்ளல் ("Life Skills Learning", Thinking, Emotions, Communication, Interaction) என்ற ஒவ்வொன்றின் வளர்ச்சிக்கும் அஸ்திவாரமாகிறது. 

இதை உலகளவில் WHO (World Health Organization) என்ற நிர்வாகம் விவரித்து இருக்கிறார்கள். இதன் ஆரம்பமே செயலைச் செய்வதிலும், செயல்களில் பங்கு கொள்வதுமாகும். குழந்தைகள் வளரும் போது இவ்வாறு செய்வதில் அவர்களின் வளர்ப்புக்கும் பல விதங்களில் உதவும்:

  • வேலையில் பங்கேற்பு எடுத்து-கொடுத்து, ஏற்றி-இறக்கி, ஏறி-இறங்கி, வைத்து-எடுத்து வர எனப் பலவிதமான காரியங்களில் ஈடுபட வைக்கலாம். இவை, குழந்தைகளின் வளர்ச்சியான எலும்பு, தசைகளை வலுப்படுத்த உதவும். ஆரம்ப வளர்ச்சிக் காலத்தில் இவை முக்கியமான அம்சம். 

  • தானாகச் செய்யப் பல வாய்ப்புகள் அமைத்துத் தருவது மிக முக்கியம். குழந்தைகள் பலமுறை செய்வதால் தான் கற்றுக் கொள்வார்கள். அவர்களின் முதல் கட்ட வளர்ப்புக்குப் பக்கபலமாகும். தானாகச் செய்வதில் பொறுப்பும் வளரும்.

  • அடுத்தவர் சொல்ல, அதைக் கேட்டு முடிப்பதும் முக்கியமான அம்சம். இதில் மூன்று விஷயங்கள் உண்டு 

    • சொன்னதைக் கேட்டுக் கொள்ள-அதை மனதில் வாங்கிக் கொண்டு (கவனம் செலுத்தி) - கிரமமாகச் செய்ய வேண்டும். 

    • கவனம் செலுத்தி வருவதே பல திறன்களை வளர்க்க உதவும்.

    • இது பள்ளிப்படிப்பை மேம்படுத்த யுக்தி என்றும் சொல்லலாம். அதாவது சொல்வதில் கவனம் செலுத்தி-மனதில் பதித்து-செய்யும் தருணம் வரும் பொழுது தனக்கு  ஞாபகப் படுத்துவதற்கான பயிற்சி. 

  • செய்வதை எவ்வாறு செய்வதென்று தாங்களாக அறிய, தானும் செய்யலாம் என்ற மனப் பக்குவம் அடைய ஒரு பெரிய வாய்ப்பாகும். 

    • உதாரணத்திற்கு: பூக்களைப் பறிக்க மென்மையாக இருப்பது தேவை என்பதைக் கற்றுக் கொள்வது. உங்களுடன் குப்பை போட வந்து பழகிய பின், அவர்களாகப் போட வெட்கப் பட மாட்டார்கள். மாறாக, தானாகவே போட்டு வரும் பொறுப்பை எடுத்துக் கொள்வார்கள்.

வீட்டுப் பொருட்களை எடுத்து வைப்பது, அகற்றுவது, சுத்தம் செய்வது கை விரல்கள், விரல் நுனிகளுக்குத் தங்களை அறியாமல் தரும் பயிற்சியாகும். சாப்பிடும் இடத்தில், சூடு குளிர் பதார்த்தங்கள் வைக்கும் முன் அதற்கென்று கோஸ்டர் வைப்பது, பூக்களை அதன் குவளையில், நாள் இதழை அதன் இடத்தில் வைப்பது, காய் கனிகளை உரிப்பது, கீரை ஆய்வது எனப் பல விதமான வேலை செய்ய வாய்ப்பளிக்க, அவர்களும் வேலையில் கவனம் செலுத்த, குழந்தைகளின் மூளை வளர்ச்சி மேம்படுகிறது. பொருட்களைப் பிடித்து, எடுத்து, வைப்பதே அவர்களின் படிக்க-எழுதத் தேவையான திறன்களுக்கு முதல் அஸ்திவாரமாகும். எப்படி என்றால், பிடித்து எழுத கை விரல்கள் ஒன்றாகச் செயல்பட வேண்டும், வெவ்வேறு வேலைகளில் ஈடுபட இந்தத் தன்மை வளரும். 

ஒவ்வொரு வேலையில் உதவ பல்வேறு வார்த்தைகளைக் கேட்டுக் கற்றுக் கொள்வதும் நன்மைகளில் ஒன்று. ஒவ்வொரு சொல்லுக்கும் இணைந்த வார்த்தைகளைச் சிறு வயதிலிருந்தே கற்றுக் கொள்வார்கள். அதன் பெயர், சொல் இதுதான் என்பதைச் சம்பந்தப்படுத்துவதால் கற்றலுக்கு உதவுகிறது. 

குழந்தைகள் உதவப் பழகிக் கொள்ள அவர்கள் நடக்க ஆரம்பிக்கும் போதே அவர்கள் விளையாட்டுப் பொருட்களை நம்முடன் சேர்ந்து எடுத்து வைப்பது என்று ஆரம்பிக்கலாம். இதன் முக்கியத்துவம் உண்டு! அவர்களின் ஐந்து வயதுவரை மூளை வளர்ச்சி மிக வேகமாக ஓடிக் கொண்டிருக்கும். இந்த நிலையில் அந்த மூளைக்கு எவ்வளவு தீனிகளைப் போடுகிறோமோ அந்த அளவிற்கு வளர்ச்சி அடையும். குழந்தைகளுக்கு இப்படி நிகழ்கிறது என்று தெரியாது. ஆனால் இயற்கையாகவே அவர்கள் இந்த ஆரம்ப வயதான ஐந்து வயது வரையில் எதைப் பார்த்தாலும் பலவிதமான கேள்வி கேட்பது உண்டு, செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் உண்டு. சதா காலமும் ஏன்? எதற்கு? எப்படி? என்றே இருப்பார்கள். 

நமக்கு தெரிந்தால் விளக்கம் அளிக்கலாம். ஒரு வேளை தெரியவில்லை இல்லை குழப்பமாக இருந்தால் தெரியவில்லை என்று ஒப்புக் கொள்ள வேண்டும். இதிலிருந்து குழந்தைகள் தனனடக்கம் கற்றுக் கொள்ள வாய்ப்பாகிறது. அதே நேரத்தில் தெரியாமல் போகவும் செய்யும் என்பதை உணர்ந்து, அதற்கு விடை தேடுவது நம் பொறுப்பு என்பதையும் அறிய வாய்ப்பாகிறது. இத்துடன், முடிந்தால் நாமும் அவர்களுடன் சேர்ந்து விடை கண்டுபிடிக்க முயலுவது, உதவி நாடுவது, மற்றவரைக் கேட்பது என்று முயற்சி செய்தால், விடை தேடுவதின் அருமையை, வழிகளை விளக்குவதாக அமையும். அவர்கள் நமக்கு உதவுதைப் போல, நாமும் அவர்களுக்கு உதவுகிறோம். பலவிதமான நன்மைகள் பெறுவதுடன் வளர்ச்சியையும் மேம்படுத்தும்.  

குழந்தைகளுடன் இருக்கும் நபர்கள் செய்ய வேண்டியவை  

  • குழந்தைகளுடன் அவர்களாக ஒரு செயலைச் செய்ய வரும் வரை அவர்களுடன் நாமும் செய்யலாம்.

  • குழந்தைகள் முதன் முறையாகச் செய்கிறார்கள் என்றால் அதை எவ்வாறு செய்வது என வர்ணித்தபடி அவர்களுடன் செய்யலாம். 

  • வீட்டில் மற்றவர்களும் வீட்டு வேலையில் பங்கேற்றுச் செய்து வர வேண்டும். நாம் செய்வதைப் பார்த்துக் கற்றுக் கொள்வதால், மற்றவரும் பங்கேற்றால், அவர்களிடமிருந்து குழந்தைகள் பங்கேற்பது முக்கியம் என்றும் கற்றுக் கொள்வார்கள். 

  • வெளிப்படையாக வேலைகளைப் பற்றிப் பேசுவதில், எதுவும் துச்சம் இல்லை என்று புரிந்து கொள்ள முடிகிறது. 

  • அருகில் இருப்பவர்கள் குழந்தை செய்வதில் குறுக்கிடாமல் ஆர்வம் காட்ட வேண்டும்.

  • குழந்தைகள் தங்களிடம் செய்யச் சொன்னதைச் செய்த பின் அவர்கள் செய்த விதத்தைப் பற்றிப் பேசி, பகிரலாம். இவ்வாறு செய்வதால் அவர்கள் செய்முறையை நாம் ஆமோதிப்பைக் காட்டுகிறோம். 

தொடரும்...

மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

malathiswami@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com