வாழ்க்கைப் பயணம்
"மனமெனுந் தோணி பற்றி
மதியெனுங் கோலையூன்றிச்
சினமெனுஞ் சரக்கை யேற்றிச்
செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி
மறியும்போ தறிய வொண்ணா
துனையுனு முணர்வை நல்கா
யொற்றியூ ருடைய கோவே."
தேவாரத்தில் வரும் இப்பாடல் மிக ஆழமான கருத்துக்களை உடையது.
சம்சார சாகரமாகிய கடலில் வாழ்க்கை என்பது ஒரு சிறு தோணியில் செய்யும் பயணத்தைப் போன்றது. அலையில் தோணி ஆடிக் கொண்டே இருப்பதைப் போல மனம் எண்ணங்களால் எப்போதும் ஆடிக் கொண்டே இருக்கிறது.
ஆடும் இந்த மனதை நிலை நிறுத்துவது புத்தி. இது எவ்வாறு நிகழ்கிறது?
மனதின் எழும் சிந்தனைகள் இன்பத்தை நோக்கியதாகவே இருக்கிறது. ஆனால் புத்தியோ அதன் தராதரத்தை ஆராய்கிறது. மனதை ஒதுக்கி விட்டு புத்தி சொல்கிறபடி முடிவெடுத்தால் மனதிற்குப் பிடிப்பதில்லை. இதனால் மனதில் வெறுப்பு என்ற உணர்ச்சி தோன்றுகிறது.
புத்தியை ஒதுக்கி விட்டு மனம் சொல்கிறபடி நடந்தால் புத்தி சதா எச்சரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் மனதில் குற்ற உணர்ச்சியானது தோன்றுகிறது.
இப்படி மனமும், புத்தியும் இரு துருவங்களாக மாறி மனிதனை தன் பக்கமாக இழுக்கிறது. மனம் சொல்லும் வழியில் மட்டுமே சென்றவன் வாழ்க்கையில் உயர்வை
இழக்கிறான்.
புத்தி சொல்படி மட்டுமே நடக்கிறவன் வாழ்க்கையை ரசிக்க மறக்கிறான்.
மனம் புலன்களுக்கு அருகாமையில் இருப்பதால் மனதில் எழும் எண்ணங்களில் கோபம் போன்ற உணர்ச்சிகள் தோன்றுகிறது. ஆனால் புத்தியோ ஆன்மாவிற்கு அருகில் உள்ளதால் மனதில் எழும் எண்ணங்களை நெறிபடுத்துகிறது.
இதனையே திருவள்ளுவர்..
"இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று"
என்று கூறுகிறார்.
காயாக இருக்கும் எண்ணங்களை கனியாக மாற்றுவது புத்தி. மனதில் எண்ணங்கள் தோன்றியவுடன் வெளியிட்டால் சில நேரம் காயாக கசக்கிறது.
ஆனால் சிறிது நேரத்தில் புத்தி காயை கனிய வைக்கிறது. இப்படி பேசிவிட்டோமே என்று வருத்தம் வருகிறது.
புத்திக்கும் மனதிற்கும் இடையே நடக்கும் இந்த போராட்டத்தை சரி செய்யவே மனிதனின் பெரும்பான்மையான ஆன்ம சக்தியானது செலவழிக்கப் படுகிறது.
இந்த போராட்டம் நடக்காமல் இருக்க வழி புத்தியும் மனதும் ஒருங்கே செயல்படுவதுதான்.
எண்ணங்கள் தொடர்ச்சியானவை அல்ல. ஒரு எண்ணங்களுக்கும் அடுத்த எண்ணங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியில் புத்தி புகுந்து செயலாற்றுகிறது.
மனதில் எழும் எண்ணங்களை உற்று கவனித்தால் இந்த இடைவெளி பெரிதாகும். புத்தியின் செயல் திறன் அதிகரிக்கும். இதை பழகப் பழக மனமெனும் தோணியை மதியெனும் கோலையூன்றி கட்டுக்குள் வைக்கலாம்.
ஆனால் புத்திக்கும் ஒரு எல்லை இருக்கிறது. புத்தி என்பது அனுபவங்களின் தொகுப்பு அவ்வளவே. ஒரு குறிப்பிட்ட அளவே புத்தியால் மனதில் ஆதிக்கம் செலுத்த முடிகிறது.
இறை சக்தியை மறந்த அறியாமை என்னும் வலிய பாறை தாக்கும் போது மனமெனும் தோணி உடைந்து சம்சார சாகரத்தில் மனிதனை மூழ்கடித்து விடுகிறது.
மதியெனும் கோல் அங்கே பயனற்றதாகிறது. அக்கரையை அடைய விடாமல் மீண்டும் மீண்டும் சுழல வைக்கிறது.
இந்த நிலையில் நம்மைக் காப்பாற்றுபவர் யார்?.
ஈசன் ஒருவரே. ஈசனின் கருணையே தத்தளித்துக் கொண்டிருக்கிற மனிதனை கரை சேர்க்கிறது.
மனமும் நாமல்ல புத்தியும் நாமல்ல. இரண்டுமே இந்த உலக வாழ்க்கைக்காக உடலோடு படைக்கப் பட்டவை.
ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அகப்பட்டால் மனமும், புத்தியும் கைவிட்டுவிடும். திக்கற்ற நிலையில் நிற்பதாகத் தோன்றும். ஆனால் நமக்கு உள்ளிருந்து மூன்றாவதாக
ஒரு குரல் கேட்கும்.
அது ஆத்மாவின் குரல், ஈசனின் குரல். நாம் கேட்க மறந்த குரல். நமக்குள் தொடர்ந்து எந்நேரமும் ஒலித்துக் கொண்டே இருக்கும் குரல்.
அது காட்டும் வழியில் பயணித்தவர்கள் வெற்றியை அடைந்ததாக பல உதாரணங்கள் வரலாற்றில் பதிக்கப்பட்டுள்ளன.
ஓம் நமச்சிவாய...
நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்
ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்.