காமம் யோகம் என்ன வித்தியாசம்?

என் மனம் ஒரு சமயம் யோகத்தின் உச்சத்திலும், மற்றொரு சமயம் காமத்தின் உச்சத்திலும்
காமம் யோகம் என்ன வித்தியாசம்?
Published on
Updated on
2 min read

என் மனம் ஒரு சமயம் யோகத்தின் உச்சத்திலும், மற்றொரு சமயம் காமத்தின் உச்சத்திலும் மாறி மாறி செல்கிறது. தொடர்ந்து மனதை ஆன்மீகத்தில், அன்பு நெறியில் கொண்டு வர என்ன செய்ய வேண்டும்?

அடிப்படையாக காமத்திற்கும், யோகத்திற்கும் நோக்கம் ஒன்றுதான். காமத்திற்கு நோக்கம் என்ன? இப்போ தனியாக இருக்கிறீர்கள்; இன்னொரு உயிரை ஒன்றாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு ஆர்வம். இது நீங்கள் நிர்ணயிக்கவில்லை. உடலில் இருக்கிற ரசாயனமே அப்படி செயல்படுகின்றது. ஒரு பத்து பன்னிரெண்டு வயது வரைக்கும், நன்றாகவே இருந்தீர்கள். அதற்குப்பிறகு ஏதோ கொஞ்சம் ரசாயன மாற்றம் உள்ளே நடந்தது. அதற்குப்பிறகு எதைப் பார்த்தாலும் ஏதேதோ தெரிகிறது. வேறே ஒன்றும் புரியவில்லை. ஆனால் இதன் நோக்கம் என்னவென்றால், ஒன்று என்பதை உணர வேண்டும் என்பதாகும். ஆனால் உடல் நிலையில் முயற்சி நடக்கிறது. இரண்டு உடல்களை என்ன செய்தாலும் ஒன்றாகப் பண்ண முடியாது. இது தனிதான். அது தனிதான். ஒன்றாக இருக்கிற மாதிரி நடிக்க முடியும். கொஞ்சம் நேரம்தான். அதற்குப் பிறகு பார்த்தால், இது தனிதான். அது தனிதான். என்ன செய்தாலும் இந்த உடலையும், அந்த உடலையும் ஒன்றாகச் சேர்க்க முடியாது. இந்த மனம், அந்த மனம் கொஞ்சம் முயற்சி செய்கிறது. ஒன்றாக இருக்கிற மாதிரி நடக்கின்றது. நான்கு நாட்கள் சென்ற பிறகு பார்த்தால், இது தனி, அது தனிதான் புரிந்ததா? திருமணம் ஆன புதிதில் இரண்டு மனங்களும் ஒன்று என்றுதானே நினைத்தோம். ஆனால் கொஞ்சம் நாள் கழித்து பார்த்தால் இது தனி, அது தனிதான். ஒன்றாக இருக்க வேண்டும் என்ற முயற்சி நடக்கிறது. உணர்வு என்பது சில நேரங்களில் பார்த்தால் ஒன்றாக ஆகிவிட்டது போல் தெரிகிறது. ஆனால் அதற்குப் பிறகு பார்த்தால் இது தனி, அது தனிதான்.

காமத்திற்கும், யோகத்திற்கும் ஒரே நோக்கம்தான். ஒன்றாக வேண்டுமென்ற நோக்கம். ஆனால் காமத்தின் மூலமாக அது நிறைவேறாது, அவ்வளவுதான். ஒன்றாக வேண்டும் என்று இரண்டாக இருந்தது தற்போது மூன்று ஆகிவிட்டது! நோக்கம் நன்றாகத்தான் இருக்கின்றது. இரண்டு உயிராக இருப்பதை ஒன்றாகப் பண்ண வேண்டும் என்கிற நோக்கம் நன்றாகத்தான் இருக்கின்றது. ஆனால் அது செயல்படவில்லை. யோகத்திற்கும் அதே நோக்கம்தான். இரண்டாக இருப்பதை ஒன்றாகப் பண்ண வேண்டும். கோடியாக இருப்பதை ஒன்றாகப் பண்ண வேண்டும் என்ற நோக்கம் இது. ஆனால் இது வேலை செய்கிறது. நோக்கம் நன்றாகத்தான் இருக்கின்றது. நோக்கம் நன்றாக இருந்தால் பத்தாது. செயல் திறமையாக இருக்க வேண்டும்தானே?

எது வேலை செய்யவில்லையோ அதை விட்டு விட வேண்டும். ஒரு தொழில் செய்தீர்கள். அது நஷ்டத்தில் நடக்கிறது. அந்த தொழிலை நிறுத்தி விடுவீர்கள்தானே? அது போல் இரண்டு உடல்கள் ஒன்றாகும் முயற்சி நடந்தது. இது தப்பா? சரியா? அது பற்றி இல்லை. ஆனால் நோக்கம் நிறைவேறவில்லைதானே? அப்படியானால் நிறுத்தி விட வேண்டும்தானே? ஆனால் அதில் ஏதோ இன்பம் இருக்கின்றது. பெரிய ஆனந்தம் நமக்குள் நடந்துவிட்டால், இந்த சின்ன சின்ன இன்பங்கள் தாமாகவே விழுந்துவிடும். சின்ன குழந்தையாக இருந்தபொழுது ஒரு கடலை மிட்டாய் சாப்பிட வேண்டுமென்று ஆசை. உங்கள் அம்மா வாங்கிக் கொடுக்கவில்லை என்றால், அவர்களைப் பார்த்தாலே வெறுப்பு வந்துவிட்டது. அந்த நேரத்தில் 5 பைசா கடலை மிட்டாய் அவ்வளவு முக்கியமாக இருந்தது. இப்பொழுது அந்த கடலை மிட்டாய்க்காக யார் கூட வேண்டுமானாலும் சண்டை போடுவீர்களா? ம்… என்ன ஆகிவிட்டது. கொஞ்சம் வளர்ந்து விட்டீர்கள். அவ்வளவுதான். இன்னும் வளர வேண்டும். கொஞ்சம் வளர்ச்சி அடைய வேண்டும். வளர்ச்சி நடந்துவிட்டால் கடலைமிட்டாய் மேல் ஆசை போய்விடும் நமக்கு. அப்போது எது தேவையோ அதன் மீதுதான் கவனம் இருக்கும்.

- சத்குரு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com