யோகா செய்யாதீர்கள் உங்கள் முழங்கால்களுக்கு ஆபத்து! இந்திய டாக்டர் கடும் எச்சரிக்கை

1910-ம் ஆண்டில் பிரிட்டனில் ஒரு யோகா அமைப்பு உருவானது, 1950-களின் பிற்பகுதியில் பி.கே.எஸ்.ஐயங்கார்
யோகா செய்யாதீர்கள் உங்கள் முழங்கால்களுக்கு ஆபத்து! இந்திய டாக்டர் கடும் எச்சரிக்கை


தினமும் யோகா செய்வது உங்கள் கர்மாவுக்கு வேண்டுமானாலும் நல்லது செய்யலாம், ஆனால் உங்கள் முழங்கால்களுக்கு அது ஆபத்தாகிவிடக் கூடும் என்று இந்திய எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். பல முன்னணி யோகா ஆசிரியர்கள் மற்றும் குருமார்களுக்கு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள டாக்டர் அசோக் ராஜகோபால் அண்மையில் ஒரு பத்திரிகை பேட்டியில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அவரது கூறியதிலுள்ள உண்மை யோகாவை வர்த்தமாக்கிவிட்ட பலருக்கு சவாலாகிவிட்டது. காரணம் இன்றைய தேதியில் யோகாதான் உலகம் முழுவதும் எளிதாக பணம் குவிக்கும் தொழில்முறையாக மாறி இருக்கிறது. இத்தகைய யோகா மையங்கள் கூறுவது என்னவென்றால், நீங்கள் தினமும் யோகா செய்தால் உங்கள் இளமையை தக்க வைக்கலாம், ஆரோக்கியமும் ஆயுளும் அதிகரிக்கும், உடல் நலம் பேணலாம், உலக அமைதிக்கான வழி யோகாவில் மட்டுமே சாத்தியம் என்று இப்படி பலவிதமான நம்பிக்கைகள் விதைத்துவருகிறார்கள். இவற்றில் உண்மை இருக்கலாம். ஆனால் யோகாவை கற்றுக் கொடுப்பவர்கள் முதலில் அதனை முழுமையாகவும் முறையாகவும் கற்றுத் தேற வேண்டும்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உலகளாவிய கவனத்தை உருவாக்கிய இந்தியாவின் பாபா ராம்தேவைப் போன்ற மிக கவர்ச்சிகரமான யோகா ஆசிரியர்களில் சிலர், அதன் மூச்சு பயிற்சிகளால் எய்ட்ஸ், புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய்களை குணப்படுத்த முடியும் என நம்புகின்றனர். அமெரிக்காவில் மட்டும், ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர்களுக்கும் மேலதிகமாக யோகா உபகரணங்களுக்காக செலவழிக்கப்படுகிறது. மேலும் 15 மில்லியன் மக்கள் தீவிரமான யோகப் பயிற்சியாளர்களாக உள்ளனர்.

டாக்டர் ராஜகோபாலின் கூற்றின் படி, யோகாவை செய்யும்போது ஒருவரின் இதயம் விரிவடைகிறது, இத்தகைய தீவிர பயிற்சிகள் ஒருவரின் மூட்டுகளில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன, தொடர்ந்து செய்து வருகையில் இது மூட்டுவலிக்கு வழிவகுக்கிறது.

அதுவும் யோகாவை தினமும் செய்பவர்களுக்கு எலும்பு வியாதிகள் அதிகளவில் காணப்படுகிறது. சரியான சூழ்நிலையில் முறையாக செய்யப்படும் யோகா அற்புதமாகத்தான் இருக்கும், ஆனால் யோகாவை மக்கள் கூட்டம் கூட்டமாக கற்றுக் கொள்ள பயிற்சியளிக்கப்படுகையில் அவர்கள் கவனமாகக் கற்றுக் கொள்வதில்லை, உத்தேசமாகவே செய்கின்றனர். எனவே தவறாகக் கற்றுக் கொண்ட ஒரு பயிற்சியை அது தவறெனவே தெரியாமல் தினமும் உடலை பிரயாசைப்படுத்தி செய்வதன் மூலம் அது அவர்களைக் காப்பாற்றுவதற்கு பதிலாக பிரச்னைகள் விளைவித்துவிடுகின்றன’ என்று டாக்டர் அசோக் கூறினார்.

'பல யோகா ஆசிரியர்களுக்கு நாங்களே முழங்கால் அறுவை சிகிச்சை செய்துள்ளோம். தினமும் பலவிதமாக செய்து கொண்டிருந்த யோகா உடல் இயக்கங்களினால் (postures) கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று டாக்டர் ராஜகோபால் 'தி டெய்லி டெலிகிராப்' பத்திரிகையாளரிடம் கூறினார்.

'இத்தகைய யோகா பயிற்சியில் தீவிரமாக தினந்தோறும் ஈடுபடும்போது முழங்காலில் கடுமையான, ஆழமான வளைவுகள் ஏற்படும். உடலில் ஏற்பட்ட அழுத்தங்களின் காரணமாக அவை தீங்கு விளைவிக்கும், மற்றும் குருத்தெலும்புகளில் சேதம் விளைவிக்கும்.

சிறிய குழுவினராக பயிற்சி அளிக்கப்பட்டவர்களுக்கு அதிகப் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் 100-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒரு வகுப்பில் யோகா பயிற்சி எடுத்துக் கொள்ளும்போது, அவர்களுக்கு பின்னாட்களில் ஏற்படும் உடல் உபாதைகளை நானே கண்கூடாக பார்த்துள்ளேன்’ என்றார்.

தங்களுடைய உடல் பாகங்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் ஒவ்வொருவரும் யோகாவை முறையாகக் கற்றுக் கொள்ள வேண்டும். தன் உடலில் நிலையையும், இதற்கு முன்னால் ஏதேனும் பிரச்னை இருந்துள்ளதா என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு தான் யோகாவின் மூலம் உடலை பலவிதமாக வளைத்தும் நீட்டியும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாமல் போனால் உடல் அவர்களை ஒருகட்டத்தில் பழிவாங்கிவிடும். கடுமையான மூட்டு வலி மற்றும் உடல் வலிகளால் பாதிக்கப்படுவார்கள்.

பல யோகா ஆசிரியர்கள் 'வஜ்ராசனம்' கற்றுத் தருவார்கள். இது ஒரு எளிமையான ஆசனமாக தோன்றலாம். வஜ்ராசனத்தில் உட்கார்ந்து பிராணயாயம் செய்ய வேண்டும் என்பார்கள்.

இந்த நிலைக்கு 'thunderbolt’ என்றும் சொல்வார்கள். இந்த வஜ்ராசன நிலையில் உட்காரும் போது பலர் முழங்கால் வலி உள்ளிட்ட பல பிரச்னைகளை சந்தித்தனர். 

யோகா மையத்தில் பயிற்றுவிப்பாளராக உள்ள சாவிரா குப்தா கூறுகையில், 'யோகா செய்யும் போது காயங்கள் ஏற்பட்டு உடல் பாதிக்கப்படலாம் எனவே ​​மெதுவாக பயிற்சியைத் தொடங்க வேண்டும். அவசரம் கூடவே கூடாது. கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ளும் போது நம் உடல் அதற்கு ஒத்துழைக்கிறதா, நம்முடைய உடல் யோகாவுக்கு ஏற்ற வகையில் அப்பயிற்சிக்கு தயாராக உள்ளதா என்பதை அறிந்து கொண்ட பின்னரே ஒருவர் தீவிர யோகா பயிற்சியை தினமும் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் உடல் வலி உள்ளிட்ட பிரச்னைகளை தவிர்க்கலாம்’ என்றார்.

'யோகாவை கற்பிக்கும் போது, ​​உடற்கூறு மிகவும் முக்கியம், காரணம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு உடல் அமைப்பும் உடல் ஆற்றலும் இருக்கும், அதனை கருத்தில் கொண்டு தான் பயிற்சிகளைத் தர வேண்டும். உங்கள் உடல் எந்தளவுக்கு ஒத்துழைக்கிறதோ, எந்தளவுக்கு தாங்கிக் கொள்ளும் சக்தியை உடையதோ அதற்கேற்ற வகையில் தான் பயிற்சி செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட வகையில் உடலை இருத்தி, குறிப்பிட்டபடி சுவாசத்தில் கவனம் வைத்து ஒரு பயிற்சியை செய்ய முடியாமல் போனால், அது உங்களுக்கு உள்காயம் ஏற்படுத்திவிடும். எனவே யோகாவை கற்றுக் கொள்ளும்போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சரியான ஒழுங்கமைவுகள் மற்றும் பயிற்சியால் மட்டுமே ஒருவர் இத்தகைய காயங்களை தவிர்க்க முடியும்’ என்று அவர் கூறினார்.

1910-ம் ஆண்டில் பிரிட்டனில் ஒரு யோகா அமைப்பு உருவானது, 1950-களின் பிற்பகுதியில் பி.கே.எஸ்.ஐயங்கார், சர் யெஹூடி மெனுஹின் என்பவருக்கு யோகா கற்றுத் தந்தார். 1968-ம் ஆண்டு பிரபல பீட்டில்ஸ் குழுவினருக்கு இந்தியாவில் யோகப் பயிற்சி அளித்தார் ஆன்மிக குரு மகரிஷி மகேஷ் யோகி.

1970-களில் பள்ளிக்கூடங்கள் மற்றும் சமூக பொது மையங்களின் ஊடாக யோகா வகுப்புகள் பரவலானது. யோகாவால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்று பிரபலப்படுத்தப்பட்டது. இன்று உலகம் முழுவதும் சுமார் 30 மில்லியன் மக்கள் யோகா பயிற்சிகள் மேற்கொள்கின்ற்னார். பிரிட்டனில் மட்டுமே கிட்டத்தட்ட 500,000 யோகா பயிற்சி வகுப்புகள் உள்ளன.

நன்றி - தி டெலிகிராஃப்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X