உடல் உயிர் ஆனந்தம்

உலக யோகா தினம் ஜுன் 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உடல் உயிர் மனம் செம்மையடைய யோகா உதவுகிறது.
உடல் உயிர் ஆனந்தம்
Published on
Updated on
3 min read

உலக யோகா தினம் ஜுன் 21-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உடல் உயிர் மனம் செம்மையடைய யோகா உதவுகிறது. இயற்கையோடு இயற்கையாக நம்மை அர்ப்பணித்துக் கொள்ள உதவும் கருவி இந்த யோகா. இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்த அற்புத பயிற்சியின் பிறப்பிடம் இந்தியா என்பது எத்தனை பெருமிதமான ஒன்று. ஆனால் உலகிற்கே வழிகாட்டும் நம்மில் எத்தனை பேர் உருப்படியாக இந்த யோக பயிற்சிகளை செய்கிறோம்? பெருகி வரும் மக்கள் தொகையும் அதிகரிக்கும் இயந்திரத்தனமான வாழ்க்கையும் இந்தியாவை அதிக நோய்களும்  மன அழுத்தமும் கொண்ட நாடாக மாற்றிக் கொண்டிருக்கிறது. உடல் உயிர் மன நலனை பேணுவதின் மூலம் ஆனந்தமான வாழ்க்கைக்கு வழி சொன்ன யுக்திகளை உலகம் முழுவதும் பரவ செய்துவிட்டு இங்கு நாம் நோயாளியாக மன அழுத்தமுள்ளவர்களாக வாழலாமா?

ஒரு நாள் என்பது இருபத்தி நான்கு மணிநேரம்.

ஒவ்வொரு நாளும் இருபத்தி நான்கு மணிநேரம் நம் கையில் இருக்கிறது.

இதில் எட்டு மணிநேரம் உறக்கம் போக மீதம் 16  மணிநேரம் இருக்கிறது.

அந்த பதினாறு மணிநேரத்தில் எட்டு மணி நேரம் வேலை போகட்டும்…..நிறுத்துங்க...நிறுத்துங்க…

எங்கே எட்டு மணிநேரம்….? 

அலுவலகம் சென்றால் நேரம் போவதே தெரியவில்லை என்கிறீர்களா? 

சரி...ஒப்பு கொண்டாலும் ஓவர் டைம் இத்தியாதிகள் சேர்த்து பன்னிரெண்டு மணிநேரம் வைத்து கொள்வோம்…

பன்னிரெண்டு மணிநேரம் போக உங்கள் கையில் இன்னும் நான்கு மணி நேரம் இருக்கிறதே? 

அந்த நான்கு மணிநேரத்தில் இரண்டு மணிநேரம் அலுவலகம் சென்று வர பயணம் கழித்தாலும் மீதம் இரண்டு மணிநேரம் இருக்கிறதே ?

அந்த இரண்டு மணி நேரத்தில் அரை மணி நேரத்தில் அருகில் உள்ள கடைக்கு சென்று வர கழித்தால் மிச்சம் ஒன்றரை மணிநேரம்...சரி...சரி….நியுஸ் பார்க்க வேண்டாமா….டிவி சீரியல் பார்க்க வேண்டாமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது….சரி...அதையும் எடுத்துக் கொள்ளுங்கள்…..மீதம் அரை மணி நேரத்தில் என்ன பண்ண என்று கேட்கிறீர்களா? 

24 மணிநேரத்தில் அந்த அரை மணி நேரம்  போதும் உங்கள் மனதையும் உடலையும் சீராக்க….அட ஐந்து நிமிடம் போதுங்க…..

உடல் உயிர் மனம்

இதுதான் ஆரோக்கியத்தின் அடிப்படை

இது சீராக இயங்கினால் ஆனந்தம் பொங்கும் வாழ்வில் - சத்தியம்

உடலுக்கு  - ரத்த ஓட்டம் வெப்ப ஓட்டம் காற்றோட்டம், உயிர் ஓட்டம் இது சீராக இருக்க வேண்டும். இதற்கு உதவுகிறது உடல் பயிற்சி.

உயிருக்கு - மேற்கண்ட ஓட்டங்களுடன் நமது உடலில் உயிர்சக்தி தங்கியிருக்கவேண்டும். உயிர் சக்தி என்றால் என்ன அது எப்படி இருக்கும்? கண்களை மூடிக் கொண்டு உடலையே கவனியுங்கள். அதனை சுற்றி ஒரு உஷ்ணமான அதிர்வலையை உணர்கிறீர்களா? அதுதான் உயிர்சக்தி. உணர முடியவில்லை என்றாலும் அந்த உயிர்சக்திதான் உங்களை இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு நீங்கள் உயிரோடு இருப்பதே சாட்சி.

மனம் - என்பது அமைதியாக இருக்க வேண்டும். இது நான்கு விதமான மன அலைச்சூழல்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆல்பா, பீட்டா, தீட்டா, டெல்டா. இதில் ஆல்பா நிலையில் வைத்திருக்கும் பொழுதுதான் உங்கள் மனம் அமைதியும் ஆனந்தமும் நிரம்ப இருக்கும். சரி ஆல்பாவிற்கு எப்படி போவது. ஒரு பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பேனாவையும்தான். 

பேராசை
கடுஞ்சினம்
கடும்பற்று
முறையற்ற பால்கவர்ச்சி
வஞ்சம்
உயர்வு தாழ்வு மனப்பான்மை

இதில் நூற்றுக்கு எத்தனை மதிப்பெண் உங்களுக்கு அளிப்பீர்கள்.  0 - 50 வரை என்றால் ஓரளவு நல்லவரே. 50 க்கு மேல் என்றால் இது எதனால் ஏற்பட்டது . எப்படி நெறிப்படுத்துவது என்று நெறிப்படுத்தினால் போதும் உங்கள் மனம் அமைதியாகிவிடும். ஆல்பா நிலைக்கு வந்துவிடும்

ஆனால் இதையெல்லாம் செய்ய நேரமிருக்கிறதா ?

இதற்கெல்லாம் நேரம் எதற்கு . அதான் அந்த  அரை மணிநேரம் போதுமே.  நாம் கிடைத்த ஒன்றில் நிறைவற்ற நிலையில் நேரம் போதவில்லை என்று அலைகிறோம். கிடைத்துள்ளதை திட்டமிட்டு செயல்படுத்தினால் எப்பொழுதும் உங்கள் கையில் நேரம் மிச்சமிருக்கும்.

அலுவலக பிரேக்கில் டீ சாப்பிட போகும் எத்தனை பேர் அந்த தேனீரை ருசித்து பருகுகிறீர்கள்?

அந்த தேனீரில் எத்தனை சுவை இருக்கிறது தெரியுமா ?

இனிப்பு, துவர்ப்பு, பாலின் சுவை, வெப்பம்.

ஆனால் நீங்கள் அவசரத்தில் குடித்து துப்பிவிட்டு மீண்டும் அலுவலக டேபிளில் அடைக்கலமாகி விடுகிறீர்கள். நீங்கள் தேனீர் அருந்தும் அந்த ஐந்து நிமிடத்தில் ஒரு தியானம் ஒரு உடற்பயிற்சி ஒரு மனபயிற்சி அடங்கி இருக்கிறது தெரியுமா?

அலுவலகத்தில் இருந்து கேண்டீனுக்கு ஒரு நடை. நடக்கும் போது சரியான நிதானமாக பதற்றமின்றி யாருடனும் பேசாமல் உங்கள் உடல் அசைவையும் இதயத் துடிப்பையும் கவனித்து நடந்து பாருங்கள். இப்பொழுது உடல் இயக்கத்தை கவனியுங்கள். அதில் ஒரு சீர்நிலை தெரியும். 

தேனீரை வாங்குகிறீர்கள். தேனீர் தரும் அந்த நபரின் முகத்தை என்றாவது கவனித்திருக்கிறீர்களா? அட இந்த முறை பார்த்து ஒரு புன்னகையை பரிசளியுங்கள். ஒரு நன்றி சொல்லிவிட்டு வாங்குங்கள். நாம் பார்த்த மனம் செம்மையடைதல் பயிற்சியில் இந்த Rapport Building  உதவும். அடுத்த முறை ருசியான டீ அல்லது கனிவான உபசரிப்பு நிச்சயம். உங்களை பார்க்கும் பொழுது அவர்களிடம் ஏற்படும் அதிர்வலை உங்களுடன் கலந்து உங்கள் உயிர்சக்தி வலுப்பெறுவது உறுதி.

அமைதியாக அமர்ந்து அந்த தேனீரில் உள்ள இனிப்பு, துவர்ப்பு, பாலின் சுவையின் ஆழத்தை உணர்ந்தபடி தேனீரை பருகுங்கள். இதற்காக நன்றி சொல்லுங்கள். உங்கள் உடல் மனம் லயித்து செயல்படும் அந்த தருணமே தியானம். ஒஷோவின் வழிமுறையில் இப்படி ஒரு தியானமுறை இருக்கிறது

இப்பொழுது அதே நிதானமுடன் நடையை கட்டுங்கள். திரும்பும் போது முடிந்தால் அந்த டீ கடை அக்காவுக்கு  இன்னொரு தேங்க்ஸும்….புன்னகையும் பரிசளிக்கலாமே!

இப்பொழுது என்ன உணர்கிறீர்கள் ? ஒரு வெள்ளைத்தாளில் குறித்து வாருங்கள்

உங்கள் உடல் உயிர் மனம் செம்மையாவதில், மகிழ்ச்சி நிரம்பும் என்பதற்கு நான் கியாரண்டி

என்ன இந்த பத்து நிமிட பிரேக்கில் ஒரு யோகம் செய்தாயிற்றா?

வாழ்க்கை வேறு யோகம் வேறல்ல. இரண்டற கலந்த ஒன்றுதான்

சரி ! இதுதான் பயிற்சி என்கிறீர்களா?

இன்னும் பார்க்கலாம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com