மனநல குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதுதான் எனக்கு மன நிம்மதி!

நிலப்பகுதிகள், மதம், சாதி, சம்பிரதாயங்கள், தேசம் ஆகிய எல்லைகளைக் கடந்து தனது தனித்தன்மையினாலும்
music heals
music heals

நிலப்பகுதிகள், மதம், சாதி, சம்பிரதாயங்கள், தேசம் ஆகிய எல்லைகளைக் கடந்து தனது தனித்தன்மையினாலும், உடல் நலத்தை மேம்படுத்துவதற்கும், வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படக்கூடிய குறைப்பாடுகளைத் திறம்பட நிர்வகிப்பதற்கும் உலகம் முழுவதும் அறியப்படக் கூடியதாக யோகாசனம் இருக்கிறது.

யோகசனப் பயிற்சி பெறுவதற்கு பல நிறுவனங்கள் இருக்கின்றன. அதைக் கற்றுக் கொள்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்த முடியாத ஏழைக் குழந்தைகளுக்கும் யோகாசனப் பயிற்சி அளித்து வருகிறார் புதுக்கோட்டையைச் சேர்ந்த யோக.பாண்டியன். மனவளர்ச்சி குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு இந்த யோகாசனப் பயிற்சி வகுப்பை அவர் நடத்தும்போது அவரைச் சந்தித்துப் பேசினோம்.

2000-2001-ஆம் ஆகிய ஆண்டுகளில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் யோகாசன ஆசிரியர் பட்டயப்படிப்பினை முடித்து 2002-ஆம் ஆண்டு புதுக்கோட்டை நகரில் 'ஆத்மா யோகா மையத்தை' தொடங்கி நடத்தி வருகின்றேன். இதில் குழந்தைகள், ஆண்கள் மட்டுமின்றி பெண்களுக்கும் யோகாசனப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

மருத்துவரீதியாக பல்வேறு உடல்நலகுறைபாடுகளுக்கு உகந்தாற் போல பயிற்றுவிக்கிறேன். கடந்த 17 ஆண்டுகளாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்துள்ளேன். அவற்றில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை சிறந்த யோகாசன போட்டியாளர்களாக உருவாக்கி அதில் 168 மாணவர்கள் ஹரியானா, மேற்கு வங்காளம், கர்நாடகம், ஜார்க்கன்ட், கோவா, ஆந்திரா போன்ற மாநில அளவிலும், சென்னை, மதுரை, கோவை போன்ற மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளிலும் கலந்து கொண்டு பல பரிசுகளைப் பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் யோகாசன பயிற்றுனராக 2007-ஆம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளேன். அனைத்து மாணவர்களும் வெற்றி பெற வேண்டும், அவர்களுடைய திறமை பெற்றோர்களுக்கு தெரிய வேண்டும் என்ற எண்ணத்தில் 2004- ஆம் ஆண்டுமுதல் புதுக்கோட்டை ரோட்டரி சங்கத்துடன் இணைந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அளவிலான யோகாசன போட்டியினை கடந்த 15- ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறேன்.

என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் தமிழகத்தில் அதிகமானோர் ஆசிரியர்களாக இருந்தாலும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் சிலர் யோகசனப்பயிற்சி அளித்து வருகின்றனர். இதெல்லாம் ஒரு புறம் பெரும் மகிழ்ச்சியாக இருந்தாலும் கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு அரசுப்பள்ளிகளில் இலவச வகுப்புகளை நடத்தி வந்தேன். ஆனால் சில குளறுபடிகளாலும், மாணவர்களுக்கு கல்வியின் சுமை அதிகம் என்பதாலும் யோகசனப் பயிற்சி வகுப்பை தொடர்ந்து நடத்த முடியவில்லை. ஆனால் இனிவரும் காலங்களில் கல்வித்துறை அனுமதிக் கொடுத்தால் அவர்களுக்காக வகுப்பை நடத்தத் தயாராக இருக்கின்றேன்.

அது மட்டுமல்ல கிராமங்களில் வாழ்கின்ற விவசாயிகளுக்கும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் சார்ந்த பெண்களுக்கும் இந்த இலவச யோகாசனப் பயிற்சி முகாமை நடத்தி வருகிறேன். தனியார் பள்ளி, கல்லூரிகளும் முன்கூட்டியே பதிவு செய்தால் அவர்களுக்கும் இலவசப் பயிற்சியை நடத்துகிறோம். இந்த 2019 -ஆம் ஆண்டு முதல் சில மனநல குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட சில குழந்தைகளுக்கு வாரம் ஓரு நாள் அவர்களுக்கு தகுந்தாற் போல் பயிற்சி அளித்து வருகிறேன். இது போன்றவர்களுக்கு பயிற்சி அளிப்பதுதான் எனக்கு மன நிம்மதி' என்றார்.

- பொ.ஜெயச்சந்திரன்    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com