

பகலில் கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் உழைத்துவிட்டு இரவில் நன்றாகத் தூங்கினால் தான் அடுத்த நாள் புத்துணர்வுடன் இருக்க முடியும். கடந்த தலைமுறையினரின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு முக்கிய காரணம் சத்தான உணவு, ஆரோக்கியான வாழ்க்கை முறைகள், போதிய அளவு ஓய்வும் உறக்கமும். ஆனால் இன்றைய சூழலில் நள்ளிரவு வரைத் தொடரும் வேலை உறக்கத்துக்கு எதிராக வந்துவிடுகிறது. அனைவருக்கும் ஆறிலிருந்து எட்டு மணி நேரம் உறக்கம் மிகவும் அத்தியாவசியம். உறக்கமின்மை உடல் மற்றும் மனரீதியான பிரச்னைகளுக்கு ஆணிவேர். நன்றாகத் தூங்கி புத்துணர்வுடன் விழித்தாலே அந்த நாளை எளிதாக எதிர்கொண்டுவிடலாம். நல்ல தூக்கம் இல்லையென்றால் என்னவெல்லாம் நடக்கும்? நிம்மதியான வாழ்க்கையுடன் கூடிய ஆரோக்கியம் பறி போய்விடும்.
முந்தைய இரவு உறக்கம் சரிவர இல்லையென்றால் மறுநாள் காலையிலிருந்தே மந்தமாக இருக்கும். வேலையில் ஈடுபாடு இருக்காது. உடல் சோர்வடைந்து விடும். அடிக்கடி கொட்டாவி வரும். எந்த வேலையையும் முழுமையாகச் செய்ய முடியாது. தெளிவாக யோசிக்க முடியாத நிலையில் சரியான முடிவுகளை எடுக்க முடியாது. பதற்றம் குழப்பம் தேவையில்லாத மன அழுத்தம் போன்றவை ஏற்படும். வாகனம் ஓட்டுபவராக இருந்தால் விபத்தில் சிக்க நேரிடலாம்.
தொடர்ந்து பல நாட்கள் சரியான தூக்கம் இல்லையென்றால் உடலில் பாதிப்புக்கள் மெள்ள ஏற்படத் தொடங்கும். அது நாளாவட்டத்தில் இதயக் கோளாறுகளை ஏற்படுத்திவிடும். உயர் ரத்த அழுத்தம், உடல் சோர்வு, நினைவாற்றல் குறைபாடு, தலை வலி, மயக்கம் போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம். மன அழுத்தம், கோபம், எரிச்சல் போன்றவையும் ஏற்படும்.
முழுமையான உறக்கம் இல்லை எனில் கண்களைச் சுற்றி கருவளையம் தோன்றி அழகு குன்றும். கண்களில் இருந்து நீர் வடிவது, தோல் சுருங்குவது, உணவில் நாட்டம் இல்லாமல் போவது (food aversion) போன்ற பிரச்னைகள் தோன்றலாம். அதனால் உடல் எடை குறையும். எதிலும் திருப்தி இல்லாமல் இருப்பதுடன் உடலுறவின் போது இயலாமை போன்ற சில பிரச்சனைகக்குளும் உள்ளாகலாம்.
முறையான உறக்கம் இல்லையெனில் தலைமுடி உதிரத் தொடங்கும். ஒரு கட்டத்தில் மேற்சொன்ன பிரச்னைகள் அழுத்த, வயோதிக தோற்றம் விரைவில் வந்துவிடும். அது தன்னம்பிக்கையை குலைத்து வாழ்க்கையை சலிப்படைய வைக்கும் எண்ணங்களுக்குள் அமிழ்ந்து போகச் செய்துவிடும்.
தூங்காமல் இருந்து அதே பழக்கத்தை தொடர்ந்து கொண்டிருந்தால் ஒருகட்டத்தில் உறக்கம் இயற்கையாக வராமல் போய்விடும். அதற்கான மருந்துகள் எடுக்க ஆரம்பிக்க, அதுவே ஒரு பழக்கமாகி மாத்திரை சாப்பிட்டால் தான் கொஞ்ச நேரமாகவது தூங்கும் நிலை ஏற்படும். இது நல்ல பழக்கமல்ல.
எனவே சீரான உறக்கம் நல் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். நன்றாகத் தூங்கி நன்றாக விழித்து இயற்கையுடன் இயைந்து வாழப் பழகினால் உடல் உறுதியாகவும் மனம் மகிழ்வாகவும் எப்போதும் இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.