எப்போதும் இளமையாகவும் அழகாகவும் இருக்க ஆசையா? 

பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்கும் இப்போதெல்லாம் அழகு நிலையங்கள் முளைக்கத் தொடங்கிவிட்டன.
எப்போதும் இளமையாகவும் அழகாகவும் இருக்க ஆசையா? 
Published on
Updated on
3 min read

பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்கும் இப்போதெல்லாம் அழகு நிலையங்கள் முளைக்கத் தொடங்கிவிட்டன. அந்த யூனிசெக்ஸ் சலூன்களில் முடி வெட்டிக் கொள்ளவும், நகம் டிசைன் செய்து கொள்ளவும் உங்களுக்கு நிறைய நேரம் இருக்க வேண்டும், தவிர பர்ஸ் பலமாக இருக்க வேண்டும். ஆனால் சில சமயம் இவையெல்லாம் வினையை விலை கொடுத்து வாங்கியது போலாகிவிடுகிறது. வீட்டில் எளிமையாக செய்ய வேண்டிய சில விஷயங்களை, அதிக செலவு செய்து, உள்ளபடி இருக்கும் ஆரோக்கியத்தையும் கெடுத்துக் கொள்ளும் செயலில் இறங்குவது  முட்டாள்தனம் அன்றி வேறென்ன? 

இன்னும் சிலர் அழகு சாதனப் பொருட்களை அதிக விலை கொடுத்து கடைகளில் வாங்கி சென்று வீட்டில் அதைப் பயன்படுத்துவார்கள். இதில் அவர்கள் பார்க்கத் தவறுவது ‘காலாவதித் தேதியை’. ஏற்கனவே பலவிதமான ரசாயனம் கலந்து தயாரிக்கப்படும் இந்தப் பொருட்கள், காலாவதியாக வேறு ஆகிவிட்டால் அதிலுள்ள தீமைகளைப் பற்றி சொல்லவா வேண்டும்? தொடர்ந்து இத்தகைய ரசாயனம் கலந்த அழகுப் பொருட்களைப் பயன்படுத்துவதால் சருமம் பாதிப்படைவதுடன் சருமப் புற்றுநோய் உள்ளிட்ட பலவித புதிய பிரச்னைகளும் தோன்றக்கூடும்.

இப்படியெல்லாம் அவதிப்படுவதற்கு பதில் எளிய முறையில் நம் வீட்டின் சமையல் அறையில் கிடைக்கும் பொருட்களை வைத்து சருமத்தை அழகாகக் கொள்ள முடியும் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? அப்படியே தெரிந்தாலும் அதன் பலன்களைப் பற்றிய நம்பிக்கை அனேகருக்கு இருக்காது. எந்தவொரு விஷயத்தையும் தொடர்ந்து செய்தால்தான் அதற்கான பலன் தெரியும் என்பதை அவர்கள் உணர மறுப்பார்கள். இதோ நம் வீட்டில் கிடைக்கும் உணவுப் பொருளான வெல்லத்தைப் பயன்படுத்தி சருமத்தை இயற்கையாக ஜொலி ஜொலிக்க வைக்கலாம். மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவெனில், வெல்லத்தில் இருக்கும் சத்துக்கள் சருமத்தில் ஏற்படக்கூடிய சுருக்கங்களை நீக்கி வயதான தோற்றத்தைத் தடுத்துவிடும். நீங்கள் எப்போதும் இளமைப் பொலிவுடன் திகழலாம்.

வெல்லத்தில் உள்ள வைட்டமின் மற்றும் தாதுக்களால் சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்புடனும் இருக்கும் என்கின்றன ஆய்வுகள். வெல்லத்தை பக்குவமாகத் தயார் செய்து முகத்தில் பூசி வந்தால் சருமத்துக்கு நல்லது. காரணம் அதில் இருக்கும் க்ளைகோலிக் அமிலம் சருமத்தில் இருக்கும் அழுக்குகளை சுத்தப்படுத்தி, மாசற்ற முகமாக்குகிறது. இதனால் முகத்தில் தோன்றும் கோடுகள் (Fine Lines), சுருக்கம், (Wrinkles) பருக்கள், தழும்புகள், கரும் திட்டுக்கள் என பல பிரச்னைகளுக்குத் தீர்வாகிறது.

வெல்லத்தை பயன்படுத்தி முகத்தில் மாஸ்க் போட்டு வந்தால் முகம் பொலிவடைந்து சீராகத் தோற்றமளிக்கும். 

இதை எப்படி தயார் செய்வது?

இரண்டு டீஸ்பூன் வெல்லத்தில் 2 டீஸ்பூன் தேனும், அரை டீஸ்பூன் எலுமிச்சைப் பழச்சாறும் சேர்க்கவும். இந்தக் கலவையை மென்மையாக முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவவும். பத்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இப்படி தொடர்ந்து வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் சருமம் அழகாவதுடன் முதுமைத் தோற்றம் ஏற்படுவது தள்ளிப் போகும். முகம் இளமைப் பொலிவுடன் பளிச்சென்று இருக்கும். 

மேலும் இந்த வெல்லத்தால் அனேக பலன்கள் உண்டு. முகத்தில் பழுப்புப் புள்ளிகள் இருந்தால், இந்த ஜாகரி மாஸ்க் (jaggery mask) அதை சிறுகச் சிறுக குறைத்துவிடும். வெல்லத்தில் இன்னும் நிறைய அழகுப் பொருட்களைத் தயார் செய்யலாம். Glycolic acid mask என்னும் மாஸ்க் எப்படி தயாரிக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

ஒரு டீஸ்பூன் வெல்லப் பொடி, ஒரு டீஸ்பூன் தக்காளி ஜூஸ், அரை டீஸ்பூன் எலுமிச்சைப் பழச்சாறு, சிறிதளவு மஞ்சள் மற்றும் வெதுவெதுப்பான க்ரீன் டீ இவை அனைத்தையும் சேர்த்து கலவையாக்கவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி பத்து நிமிடங்கள் உலர விடவும். அதன் பின் தண்ணீரால் நன்றாக கழுவிவிடவும். இது முகத்தில் படிந்துள்ள அழுக்குகளையும், சருமத்திலுள்ள கறைகளையும் அகற்றி முகத்தை புத்துணர்வாக்கும்.  

வெல்லத்தில் உள்ள க்ளைகோலிக் அமிலம் சருமத்தை புத்துணர்வாக்கும் செல்களைத் துரிதப்படுத்த உதவுகிறது. சருமத்தில் விழும் கோடுகளை  அழிக்க வேண்டுமா? இந்த ஃபேஸ் மாஸ்கை முயற்சிக்கவும். இந்த மாஸ்க் முகக் கோடுகள், சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றம் உள்ளிட்ட பிற அறிகுறிகளை அழிக்கிறது. முதலில், 1 டீஸ்பூன் திராட்சைச் சாறு, 1 டீஸ்பூன் குளிர்ந்த ப்ளாக் டீ, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் வெல்லத் தூள் மற்றும் போதுமான ரோஸ் வாட்டர் ஆகியவற்றை ஒரு பேஸ்ட் போல தயாரிக்க வேண்டும். இரண்டாவதாக, அனைத்து பொருட்களையும் கலந்து முகத்தில் பூசி, பின்னர் 15 நிமிடங்களில் கழுவ வேண்டும். வாரத்தில் ஒன்று முதல் இரண்டு முறை இதைப் பயன்படுத்தவும். ஆறு மாதங்களில் உங்கள் முகத்தைப் பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com