"டிசம்பர் 16' கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்கில் மைனர் நபருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் தண்டனை மிகக் குறைவானது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கருத்துத் தெரிவித்தார்.
""குற்றவாளியின் வயது எதுவாக இருந்தாலும் குற்றத்திற்கு ஏற்ப தண்டனை விதிக்க நாடாளுமன்றத்தில் தனி நபர் மசோதாவை நான் கொண்டு வர உள்ளேன்'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தில்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது துணை மருத்துவ மாணவியை ஒரு கும்பல் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த "மைனர்' நபருக்கு தில்லி சிறார் நீதிமன்றம் 3 ஆண்டுகள் தண்டனை விதித்தது. அதன்படி, சிறார் காப்பகத்தில் தங்கியிருந்து தண்டனைக் காலத்தை அந்த நபர் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மைனர் நபருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு அதிருப்தி தெரிவித்து சுஷ்மா ஸ்வராஜ் அவரது "டிவிட்டர்' சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள கருத்து:
"டிசம்பர் 16' துணை மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மைனர் நபருக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை வழங்கியிருப்பது மிகவும் குறைவானது. சம்பவம் நடந்தபோது அந்த நபர் 18 வயதுக்கு குறைவாக இருந்ததால் அவரை "சிறார்' ஆகக் கருதி குறைவான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவியின் மரணத்துக்கும் அவரை இழந்த குடும்பத்தாருக்கும் நீதி கிடைத்து விடாது. வயதுக்கு அப்பாற்பட்டு, குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இது தொடர்பாக மக்களவையில் தனி நபர் மசோதாவைக் கொண்டு வர உள்ளேன். குற்றத்தின் தன்மை, பாதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப தண்டனை விதிக்க வசதியாக சிறார் நீதிச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
மக்களவையில் நான் முன்மொழிந்த தனி நபர் மசோதா மீது வரும் 6-ஆம் தேதி விவாதம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கிறேன்' என்று டிவிட்டரில் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










