தாமதமான மருத்துவ சிகிச்சையே தனது தங்கையின் மரணத்துக்குக் காரணம் என தில்லியில் பாலியல் பலாத்காரத்தில் உயிரிழந்த மாணவியின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சனிக்கிழமை அவர் கூறியதாவது: அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அருகில் இருந்தவர்களிடமும் அந்த வழியாகச் சென்றவர்களிடமும் தனக்கு உதவி செய்யுமாறு என் தங்கை கேட்டிருக்கிறார். ஆனால் யாரும் உதவ முன் வரவில்லை. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது இதை என் தங்கையே என்னிடம் சொன்னார்.
நீண்ட நேரம் கழித்து நெடுஞ்சாலை ரோந்துப் போலீஸ் மூலம்தான் அந்த இடத்துக்குப் போலீஸார் வந்துள்ளனர். சம்பவம் நடைபெற்று சுமார் 2 மணி நேரம் கழித்துதான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அந்த இடைப்பட்ட நேரத்தில் அவருடைய உடலில் இருந்து ஏராளமான ரத்தம் வெளியேறியிருந்தது.
குறித்த நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் என் தங்கை உயிர் பிழைத்திருப்பார். விபத்து, தாக்குதல் என எதிர்பாராமல் பாதிக்கப்படுபவர்களுக்கு தயக்கமில்லாமல் உடனடியாக பொதுமக்கள் உதவி செய்ய முன் வர வேண்டும். இந்த விஷயத்தில் மக்களின் மனோபாவம் மாற வேண்டும்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தில்லி போலீஸாரின் குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் குற்றவாளிகள் அனைவருக்கும் மரண தண்டனை கிடைக்கும் என தங்கள் குடும்பம் நம்பிக்கையோடு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் உயிரிழந்த மாணவியின் நண்பர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பாதிக்கப்பட்ட இடத்துக்கு தாமதமாக வந்த போலீஸார் தங்களை மருத்துவமனையில் சேர்க்க தாமதம் ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து போலீஸார் மீது பல சமூக அமைப்பினரும் பிரபலங்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தில்லியில் உள்ள ஒரு சமூக அமைப்பு: இந்தச் சம்பவத்தில் போலீஸாரின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது. சம்பந்தப்பட்ட போலீஸார் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தில்லி போலீஸாரின் செயல்பாடுகள் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
கிரண் பேடி: இது போன்ற சம்பவங்களால்தான் மக்கள் போலீஸார் மீது நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள். சம்பவம் நடந்து 45 நிமிடங்கள் கழித்து வந்த போலீஸார், அந்த இடம் எந்த போலீஸ் எல்லைக்குள் வருகிறது, எந்த போலீஸ் நிலையத்தில் புகாரைப் பதிவு செய்யலாம் என காலம் தாழ்த்தியது உயிரிழந்த மாணவியின் நண்பர் கூறியதிலிருந்து தெரிய வருகிறது. முதல் தகவல் அறிக்கையை குறிப்பிட்ட போலீஸ் நிலையம்தான் பதிவு செய்ய வேண்டும் என எந்தச் சட்டமும் இல்லை. ஒரு போலீஸ் ஸ்டேஷனில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து பிறகு அதை இன்னொரு போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றிக் கொள்ளலாம். போலீஸாரின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
மம்தா சர்மா: இரண்டு பேர் தாக்கப்பட்டு சாலையில் கிடக்கிறார்கள். மனிதாபிமான அடிப்படையில் கூட யாரும் அவர்களுக்கு உதவி செய்யவில்லை. அந்த இடத்துக்கு வந்த போலீஸார் உடனடியாக அவர்களுடைய வாகனத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் செய்யவில்லை. அன்று அந்தப் பகுதியில் பணியில் இருந்த அத்தனை போலீஸார் மீதும் வழக்குப் பதிவு செய்து தண்டிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையத் தலைவர் மம்தா சர்மா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.