பஞ்சாப்பில் தலித் தாக்கப்பட்ட விவகாரம்: மக்களவையிலிருந்து காங்., திரிணமூல் வெளிநடப்பு

பஞ்சாப் மாநிலத்தில் தலித்துகள் கை வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக மக்களவையில் இருந்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பஞ்சாப்பில் தலித் தாக்கப்பட்ட விவகாரம்: மக்களவையிலிருந்து காங்., திரிணமூல் வெளிநடப்பு
Updated on
1 min read

பஞ்சாப் மாநிலத்தில் தலித்துகள் கை வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக மக்களவையில் இருந்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தின்போது, மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிராதித்யா சிந்தியா பேசுகையில், பஞ்சாபில் தலித் சமூகத்தினருக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்து பேசினார்.

பஞ்சாபில் 18 நிமிஷத்துக்கு ஒரு முறை தலித்துகளுக்கு எதிராக சம்பவங்களும்,  நாள்தோறும் 3 தலித் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், தலித் இளைஞர்கள் இருவரின் கைகள் வெட்டப்பட்டு, கொலை செய்யப்பட்டதையும், தலித் பெண் ஒருவர் பேருந்தால் மோதி கொலை செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அப்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, "நாடாளுமன்றத்தை பயன்படுத்தி, மாநில அரசுகளுக்கு காங்கிரஸ் அவப்பெயர் ஏற்படுத்துகிறது' என்றார்.

பின்னர் பேசிய, பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் மருமகளும், மத்திய அமைச்சருமான ஹர்ஸிம்ரத் கௌர் பாதல், பஞ்சாப் அரசை சீர்குலைக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது என்றார்.

இரண்டு குழுக்களுக்கு இடையேயான மோதலின்போதுதான், தலித் சமூகத்தைச் சேர்ந்த 2 பேரின் உடல் உறுப்புகள் வெட்டப்பட்டுள்ளன. அந்த சம்பவத்தில், ஜாட் சீக்கியர் ஒருவரின் உடல் உறுப்பும் வெட்டப்பட்டுள்ளது. ஆனால், அதுகுறித்து காங்கிரஸ் கட்சி பேசுவதில்லை. ஏனென்றால் ஜாட் சீக்கியரிடம் காங்கிரஸின் வாக்கு வங்கி இல்லை என்றார். மேலும், இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலரை போலீஸார் தேடி வருகின்றனர் என்றார்.

நாடாளுமன்றத்தில் பஞ்சாப் தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் எழுப்பி, மாநிலத்தின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை போடுகிறது. மேலும், காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையை பஞ்சாபை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ஆதரிக்கின்றனர். அவர்கள் மீது நீங்கள் (காங்கிரஸ்) எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

ஹர்ஸிம் ரத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களவையில் இருந்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com