அருண் ஜேட்லி மீது புதிய குற்றச்சாட்டுகளை சுமத்தியது ஆம் ஆத்மி

தில்லி கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகளுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி வரும் ஆம் ஆத்மி கட்சி, இன்று அவர் மீது மேலும் புதிய குற்றச்சாட்டுகளை சுமத்தியது.
அருண் ஜேட்லி மீது புதிய குற்றச்சாட்டுகளை சுமத்தியது ஆம் ஆத்மி
Updated on
1 min read

தில்லி கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகளுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி வரும் ஆம் ஆத்மி கட்சி, இன்று அவர் மீது மேலும் புதிய குற்றச்சாட்டுகளை சுமத்தியது.

தில்லி கிரிக்கெட் சங்கத்தின் கீழ் உள்ள ஒரு 'கிளப்'பில் நடைபெற்ற முறைகேடுகள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்க வேண்டாம் என ஜேட்லி, அப்போதைய தில்லி காவல் ஆணையர் மற்றும் சிறப்பு ஆணையர் ஆகியோருக்கு எழுதிய இரு கடிதங்களின் நகல்களை இன்று ஆம் ஆத்மி கட்சியினர் வெளியிட்டனர்.

தில்லி கிரிக்கெட் சங்கத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை அருண் ஜேட்லி தலைவராகப் பணியாற்றினார்.

இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி, காவல் துறை சிறப்பு ஆணையர் ரஞ்சித் நாராயனனுக்கு, அருண் ஜேட்லி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், சிண்டிகேட் வங்கி கிரிக்கெட் கிளப் தொடர்பாக சிலர் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். அந்த புகார் ஆதாரமற்றது. மேலும், அதில் எவ்வித குற்றமும் இல்லை. இந்த புகார் சம்பந்தமாக எழுப்பப்படும் கேள்விகளால் தில்லி கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதாக கருதுகின்றனர். எனவே, இதுவிஷயத்தில் தில்லி கிரிக்கெட் சங்கம் எவ்வித தவறான செயல்களிலும் ஈடுபடாததால் அந்த புகார்களை நேர்மையாக விசாரிப்பதோடு, முடித்துவிடவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுபோல, முன்னாள் காவல் துறை ஆணையர் பி.கே.குப்தாவுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி ஜேட்லி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், சிண்டிகேட் வங்கியால் நடத்தப்பட்ட கிளப், போலா சங்கர் என்பருக்கு மாற்றப்பட்டுள்ளது என வங்கி நிர்வாகம் முதலில் கடிதம் அளித்தது. சில நாள்களுக்குப் பிறகு வங்கி அந்த கிளப்பை மீண்டும் தன்வசம் எடுத்துக் கொண்டுள்ளது. இப்பிரச்சினையில் வங்கிக்கு தொடர்பில்லாத, கிரிக்கெட் கிளப்க்கு சம்பந்தம் இல்லாத சிலர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். இப்பிரச்னையில் தில்லி கிரிக்கெட் சங்கம் எவ்வித தவறான நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. எனவே, தில்லி கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீதான புகாரை முடித்துவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தில்லி கிரிக்கெட் சங்க விவகாரத்தில் அருண் ஜேட்லி மீது தொடர்ந்து புகார் கூறி வரும் ஆம் ஆத்மி கட்சியினர், அவர் பதவி விலக வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இதற்கு பதலளித்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் ஊடகத் தொடர்பாளர் ஜிவி.எல். நரசிம்ம ராவ், ஜேட்லி எவ்வித ஆட்சி அதிகாரத்திலும் இல்லாத நிலையில், காவல் துறை ஆணையருக்கு கடிதம் எழுதியதில் தவறில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com