தில்லி அரசின் வாகன கட்டுப்பாடு திட்டத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தில்லி அரசு அறிமுகப்படுத்தவிருக்கும் வாகன கட்டுப்பாடு திட்டத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயல்கிறது என தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டினார்.
தில்லி அரசின் வாகன கட்டுப்பாடு திட்டத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
Updated on
1 min read

தில்லியில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஒட்டுமொத்த விடுமுறைக்குப் பின்னணியில் மத்திய அரசின் சதி உள்ளது. தில்லி அரசு அறிமுகப்படுத்தவிருக்கும் வாகன கட்டுப்பாடு திட்டத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயல்கிறது என தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டினார்.

தில்லி அரசு வழக்கறிஞர்கள் மற்றும் சிறைத் துறை அதிகாரிகளின் ஊதிய உயர்வு குறித்த இரு கோப்புகளில் கையெழுத்திட சிறப்புச் செயலர் (சிறைத்துறை) சுபாஷ் சந்திரா, சிறப்புச் செயலர் (அரசு வழக்குகள்) யஷ்பால் கார்க்ஆகியோர் மறுத்துவிட்டனர்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து தில்லி அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து தில்லி, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ஒட்டுமொத்த விடுப்பில் சென்றனர்.

இதனிடையே அதிகாரிகளின் பணியிடை நீக்கம் சரியானது அல்ல என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அரசு அதிகாரிகள் இப்பிரச்னை குறித்து முதல்வர் அல்லது துணை முதல்வரை தொடர்பு கொண்டிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் கோவாவில் விடுமுறையை கழிக்கும் துணை நிலை ஆளுநரை தொடர்பு கொண்டுள்ளனர்.

தில்லி மக்களுக்கு சேவையாற்றவே நாங்கள் உள்ளோம். அதிகாரிகள் ஆறு மாதங்கள் விடுமுறையில் சென்றாலும், எங்களது சேவை தொடரும் என்றார்.

இதனிடையே அதிகாரிகளின் பணியிடை நீக்கம் என்பது முற்றிலும் தவறான நிர்வாக முடிவாகும் என தில்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாயா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com