வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மோடியின் இலங்கைப் பயணம்...

இந்தியப் பிரதமர் மோடி கடந்த 14-ஆம் தேதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த முதலாவது இந்தியப் பிரதமர் மோடியாவார்.

Updated On :20 மார்ச் 2015, 8:44 pm

1. யாழ்ப்பாணத்தில்...

இந்தியப் பிரதமர் மோடி கடந்த 14-ஆம் தேதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த முதலாவது இந்தியப் பிரதமர் மோடியாவார். பிரிட்டிஷ் பிரதமர் கேமரூனுக்குப் பிறகு யாழ்ப்பாணம் சென்ற உலகத் தலைவரும் இவர்தான். யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த நரேந்திர மோடியை வரவேற்க யாழ்ப்பாணமே விழாக்கோலம் கொண்டிருந்தது. யாழ்ப்பாணத்தின் மிக முக்கியமான தெருக்கள் தமிழர் பண்பாட்டுக்கமைய தோரணங்கள், நிறைகுடங்கள், மாவிலைகளாலும் கூடவே இலங்கை, இந்தியக் கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன், யாழ்ப்பாணத்திலுள்ள கீரிமலைப் பிரதேசத்தில் புதிதாக வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த வீடுகளை ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் மோடி தமிழ்க் கலாசார முறைப்படி, பால் காய்ச்சி வீடுகளை ஒப்படைத்தார். வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் நிகழ்வுக்கு வர சில நிமிடங்கள் தாமதமாகியதால், சலித்துக் கொள்ளாமல், அவருக்காகக் காத்திருந்தார் மோடி.

ஒரு வீட்டிற்குச் சென்ற மோடி பால் காய்ச்சிக் கொண்டிருந்த பெண்ணிடம் அகப்பையை வாங்கி அதற்குள் கல்கண்டைப் போட்டு யாழ்ப்பாண முறைப்படி பால் காய்ச்சினார். தனது வீட்டில் பால் காய்ச்சுபவர் "இந்தியப் பிரதமர்' என்பதை நம்ப முடியாமல் அந்தப் பெண் பார்த்துக்கொண்டிருந்தார். அங்கு நின்ற சிறுமியிடம் என்னவாகப் போகிறாய் என வாஞ்சையாக மோடி கேட்க "டீச்ச'ராகப் போறேன் என அந்தச் சிறுமி

பதிலளித்தார். உடனே மோடி "ஓர் ஆசிரியையிடம் வீட்டைக் கொடுத்துள்ளேன். இவள் நாளை இதேபோல ஆயிரம் வீடுகளைக் கட்டுவாள்' எனக் கூற மக்கள் அதை ரசித்துப் பாராட்டினார்கள்.

பின்னர், அங்கு கூடியிருந்த மக்களிடம் பேசிய மோடி "வெறும் கற்களைக் கொண்டோ, இல்லை, சுவர்களைக் கொண்டோ இந்த வீடுகள் கட்டப்படவில்லை. யாழ்ப்பாணத்தில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் சீரமைத்துக் கொடுக்கக் கூடிய நம்பிக்கை இந்த வீடுகளுக்குள்ளே ஒளிந்துள்ளது. இந்த வீடுகள் நாளைய நம்பிக்கையாகும்' எனக் கூற, கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

வீடுகள் வழங்கும் நிகழ்வு முடிந்தவுடன் கீரிமலை நகுலேஸ்வரர் கோயிலுக்கு மோடி சென்றார். இந்தக் கோயிலானது ஈழத்திலுள்ள "சிவாலய'ங்களில் முக்கியமானது. இலங்கையில் பௌத்த மதம் அறிமுகமாகாத காலத்திலேயே இந்த "சிவாலயம்' இருந்ததற்கான வரலாற்று ரீதியான சான்றுகள் உள்ளன. அதாவது, 2,550 ஆண்டுகளுக்கான தெளிவான வரலாறு இந்தக் கோயிலுக்கு உண்டு.

இந்தக் கோயிலானது அதிஉயர் பாதுகாப்பு வளையத்தில் அமைந்துள்ளது. அதிஉயர் பாதுகாப்பு வளையத்திற்குள்பட்ட பிரதேசங்களில் பொதுமக்கள் வசிக்க முடியாது. யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியில் இருந்த மக்கள் 1990 ஆம் ஆண்டு அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு அந்த இடங்கள் உயர் பாதுகாப்பு வளையங்களாக்கப்பட்டன. தற்போது அங்கே ராணுவம் மட்டுமே நிலை கொண்டிருக்கிறது.

வெளியேற்றப்பட்ட மக்களில் பலர் இன்னமும் சொந்த நாட்டில் அகதிகளாக முகாம்களில்தான் வாழ்கின்றனர். அவர்களுக்கான மீள் குடியேற்றம் இன்னமும் சரியாக செய்யப்படவில்லை. இலங்கை ராணுவத்தின் விமானக் குண்டு வீச்சில் சிக்கி 1990-ஆம் ஆண்டு இந்தக் கோயில் நிர்மூலமானது. சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக வழிபாடு நடத்தப்பட முடியாத நிலையில் இருந்த இந்தக் கோயில் பலரின் முயற்சியால் அண்மையில் புனரமைக்கப்பட்டது.

போரால் பாதிக்கப்பட்ட இந்தக் கோயிலுக்கு மோடி சென்றதை மிக முக்கியமான விஷயமாக யாழ்ப்பாணத்தில் பார்க்கிறார்கள். உயர் பாதுகாப்பு வளையத்தில் அமைந்துள்ள இந்தக் கோயிலைப் போல பிற இடங்களும் விரைவில் விடுவிக்கப்படும் என்ற சிறிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.

இது சம்பந்தமாக கருத்து வெளியிட்ட ஊடகவியலாளர் ரவிசாந்த் "உயர் பாதுகாப்பபு வளையத்தில் அமைந்துள்ள நகுலேஸ்வரர் கோயிலுக்குச் சென்றதன் மூலமாக உயர் பாதுகாப்பு

வளையப் பிரதேசங்களில் மக்களை மீள் குடியேற்ற இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என்பதை இந்தியப் பிரதமர் மறைமுகமாகக் கூறிச் சென்றுள்ளார். இது நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டியதொன்றாகும்' என்றார்.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கைச் சேர்ந்த அகதி முகாம்களின் தலைவரான சிறில் அன்ரனிக் குயின், மோடியின் விஜயம் சம்பந்தமாக கருத்துத் தெரிவிக்கையில் "மிகக் குறுகலான இடத்தில், எந்த வித அடிப்படை வசதியும் இல்லாமல் நாம் வாழ்ந்து வருகிறோம். "உயர் பாதுகாப்பு வளையம்' என்ற பெயரில் எம்மிடமிருந்து வலியக் கைப்படுத்திய காணிகளை எம்மிடமே ஒப்படைக்க இலங்கை அரசை மோடி வலியுறுத்த வேண்டும். அவரைத்தான் நாம் முழுமையாக நம்பியுள்ளோம்' என்றார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பெரிய அகதி முகாம்களில் ஒன்றான சுன்னாகம் கண்ணகி முகாமின் தலைவரான செல்லையா செல்வநாயகம் கூறுகையில் "1990 ஆம் ஆண்டு மயிலிட்டியிலிருந்து இடம்பெயர்ந்து சுன்னாகம் கண்ணகி நலன்புரி நிலையத்தில் வசித்து வருகிறோம். 153 குடும்பங்கள் இங்கே வசிக்கிறார்கள். பிறந்த நிலத்தைவிட்டு விட்டு இடம்பெயர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவதிப்படுகிறோம். எமது நிலங்களை மீட்க பிரதமர் மோடி உதவி செய்ய வேண்டும் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம். மோடியின் வருகைக்குப் பிறகு ஏற்பட்டுள்ள இந்த சாதகமான நிலையில் எமது நிலம் எமக்குக் கிடைக்காமல் போனால் இனி எப்போதுமே கிடைக்காது. பிரதமர் மோடியை கடவுள் ஸ்தானத்தில் வைத்து எமது நிலங்களைப் பெற்றுத் தாருங்கள் என கெஞ்சிக் கேட்கிறோம். எம்மை எமது நிலங்களில் வாழ அனுமதிக்காவிட்டால், தற்கொலை செய்துகொள்வதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை' எனக் கண்ணீருடன் கூறினார்.

இதைத் தொடர்ந்து, சிங்கள இன வெறியர்களால் எரிக்கப்பட்ட யாழ் நூலகத்தில் கலாசார நிலையத்திற்கான அடிக்கல்லை மோடி நாட்டி வைத்தார். இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த தினத்தில், கவன ஈர்ப்புப் பேரணி ஒன்றை தமிழர்கள் நடத்தியுள்ளனர். ஏராளமான ஆண்களும், பெண்களும் கோரிக்கை வாசகம் அடங்கிய பதாகைகளைப் பிடித்தபடி இந்தியப் பிரதமரின் கவனத்தைக் கவர வேண்டி அவர் பயணம் செய்யும் பாதையின் இரு மருங்கிலும் அணிவகுத்திருந்தனர்.

அவர்களில் சிலரிடம் பேசியபோது, இந்திய இழுவைப்படகுகளால் வடபகுதி மீனவர்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. பிரதமர் மோடி தலையிட்டு அதைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்பட மீள் குடியேற்றம், மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் போனவர்கள் குறித்து இலங்கை அரசு தகுந்த பதிலை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை உள்ளடக்கியே போராட்டம் நடத்தப்படுவதாகத் தெரிவித்தனர்.

மோடியின் யாழ்ப்பாண விஜயத்தில் பல நன்மைகள் இருந்தாலும் அவரிடம் தமது உண்மையான மன நிலையை எடுத்துக் கூற முடியவில்லை என வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கவலை தெரிவித்துள்ளார். பாதுகாப்பு என்ற பெயரில் வட மாகாண சபை உறுப்பினர்கள் உள்படப் பலர் தொல்லைக்குள்பட்டோம். இதனால், எங்களுடைய உண்மையான மனநிலையை பிரதமரிடம் வெளிப்படுத்த முடியவில்லை. இந்தியப் பிரதமரின் நிகழ்ச்சி நிரல் குறித்து எமக்கு அறிவிக்கப்படவில்லை. இறுதி நேரத்திலேயே நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டது. யாழ் பொது நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இந்தியப் பிரதமரை வரவேற்கும் உரை கூட முன் ஏற்பாடு செய்யப்படவில்லை. பிரதமருக்கு வழங்கவென எங்களால் கொண்டு செல்லப்பட்ட பரிசுப்பொருளும் பாதுகாப்புக் காரணங்களால் அனுமதிக்கப்படவில்லை. இதனால் எங்களுடைய உண்மையான மனநிலையை மோடியிடம் வெளிப்படுத்த முடியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

தொடரும்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.