

ஹரியாணா மாநிலத்தின் பதிகாபாத் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பங்கேற்ற சுகாதாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனீல் விஜ், பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை கூட்டத்திலிருந்து வெளியேறுமாறு கூறினார். எனினும், அந்த அதிகாரி வெளியேற மறுத்ததால் அமைச்சர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.
சண்டிகரிலிருந்து சுமார் 225 கிமீ. தொலைவில் உள்ள பகிதாபாத் மாவட்டத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சுகாதாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனீல் விஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் சங்கீதா கலையாவிடம், பஞ்சாப் மாநிலத்திலிருந்து மது கடத்தப்படுவது தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சங்கீதா, இதுவரை 2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
அவரது பதிலில் திருப்தி அடையாத அமைச்சர், மேலும் விளக்கம் கேட்டதால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அமைச்சர் அனீல், கண்காணிப்பாளர் சங்கீதாவை கூட்டத்திலிருந்து வெளியேறுமாறு கூறினார்.
அதற்கு சங்கீதா 'ஏன்?' `நான் எதற்காக வெளியேற வேண்டும்?' என்றதோடு, கூட்டத்திலிருந்து வெளியேறாமல் அங்கேயே உட்கார்ந்திருந்தார். இதில் கடுப்படைந்த அமைச்சர் அனீல், கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சங்கீதா மாவட்டக் கண்காணிப்பாளராக தொடரும் நிலையில், நான் பகிதாபாத் மாவட்டத்துக்கே வர மாட்டேன் என்றார். மேலும், இதுகுறித்து முதல்வரிடம் முறையிட போவதாகவும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.