பிகார் தேர்தலில், பாஜகவில் கிரிமினல்களுக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் எம்.பி. ஆர்.கே. சிங் குற்றம்சாட்டியுள்ளார். அவரது இந்த கருத்து, பிகார் அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாட்னாவில் ஆர்.கே. சிங் சனிக்கிழமை கூறியதாவது:
பாஜகவில் தற்போது எம்எல்ஏக்களாக இருப்போருக்கும், நேர்மையான தொண்டர்களுக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதேசமயம், பணம் வாங்கிக் கொண்டு கிரிமினல்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதுவும், பாஜகவில் இணைவதற்கு முன்னரே அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது, நம்பிக்கை துரோகத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பிகார் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ள உங்களுக்கும், காட்டாட்சியை நடத்தியதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாதுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? என்றார் ஆர்.கே. சிங்.
பாஜக மறுப்பு: ஆர்.கே. சிங்கின் இந்த குற்றச்சாட்டை பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் கூறுகையில், "நேர்மையான முறையிலேயே, கட்சியில் வேட்பாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. பிகாரை பொறுத்தமட்டில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும். ஏனெனில், பிகார் மக்களின் ஆதரவு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குதான் இருக்கிறது' என்றார்.
பாஜக தேசிய செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா கூறுகையில், "இது ஒரு துரதிருஷ்டவசமான கருத்தாகும். அடிப்படையற்ற அந்தக் குற்றச்சாட்டை நாங்கள் நிராகரிப்பதோடு, கண்டிக்கவும் செய்கிறோம்' என்றார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் நளின் கோலி கூறுகையில், "ஆர்.கே. சிங்கின் கருத்து, அவரது சொந்த கருத்தாகும். பாஜக ஒரு ஜனநாயகக் கட்சி. எந்த முடிவானாலும், அதை கட்சியின் மத்திய தலைமையே எடுக்கும்' என்றார்.
லோக் ஜனசக்தி கருத்து: அதேசமயம், ஆர்.கே. சிங்கின் கருத்தை பாஜகவின் கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தி ஏற்றுக் கொண்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் கூறுகையில், "குற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது என்ற ஆர்.கே. சிங்கின் கருத்தை எங்களது கட்சி ஏற்கிறது. அத்தகைய நபர்கள், அரசியலில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அனைத்து கட்சிகளும் எடுக்க வேண்டும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

