"கிராமங்கள் தொகுப்புத் திட்டம்' விரைவில் அறிமுகப்படுத்தப்படும்

கிராமங்களில் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஏற்படுத்தவும், அங்கு வசிக்கும் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் சுமார் 5 கிராமங்களைக் கொண்ட கிராமங்கள் தொகுப்பை "வில்லேஜ் கிளஸ்டர்' உருவாக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது என்று மத்திய ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் செளதரி வீரேந்தர் சிங் கூறினார்.
"கிராமங்கள் தொகுப்புத் திட்டம்' விரைவில் அறிமுகப்படுத்தப்படும்

கிராமங்களில் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஏற்படுத்தவும், அங்கு வசிக்கும் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் சுமார் 5 கிராமங்களைக் கொண்ட கிராமங்கள் தொகுப்பை "வில்லேஜ் கிளஸ்டர்' உருவாக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது என்று மத்திய ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் செளதரி வீரேந்தர் சிங் கூறினார்.

ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் திங்கள்கிழமை தொடங்கிய பத்திரிகை தகவல் மையத்தின் பிராந்திய பத்திரிகை ஆசிரியர்கள் மாநாட்டில் அவர் மேலும் பேசியதாவது:

நமது நாடு சுதந்திரம் அடைந்தபோது கிராமங்களில் வேலைவாய்ப்பின்மை பிரச்னை எதுவும் இல்லை. பொருளாதார ரீதியாக நமது நாடு தற்போது வளர்ச்சியடைந்த போதிலும், நகரங்களைப் போல கிராமங்களில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதோடு, கிராமங்களில் வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்துள்ளது. இதனால், வேலை தேடி கிராம மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இத்தகைய நிலைமையைத் தடுத்து நிறுத்தி, கிராமங்களிலும் அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் கிராமங்கள் தொகுப்புத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்தக் கிராமங்கள் தொகுப்பைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு அளிக்கப்படும். ஒவ்வொரு கிராமங்கள் தொகுப்புக்கும் குறைந்தபட்சமாக 5 ஆண்டுகளுக்கு ரூ.70 கோடி முதல் ரூ. 120 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதற்காக, மத்திய அரசு சார்பில் தேசிய அளவிலான கண்காணிப்புக் குழு அமைக்கப்படும். இன்னும் 5-7 ஆண்டுகளில் இத்தகைய கிராமங்கள் நகரங்களைப் போல வளர்ச்சியடையும்.

நாட்டின் வளர்ச்சியில் கிராமப்புற மக்களும் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் யோசனைப்படி அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தற்போது 99 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்கு உள்ளது. இவற்றில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் தொடர்ந்து செயல்பாட்டில்தான் உள்ளன. இதேபோல, அனைத்துக் கிராமங்களிலும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தும் திட்டங்களுக்கும் மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கும், கிராமப் பஞ்சாயத்து வார்டுகளை பெண்களுக்கு தொடர்ச்சியாக இரண்டு முறை ஒதுக்கீடு செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, வருகிற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அரசியல் சட்டத் திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்றார் அவர்.

இந்த மாநாட்டில் மத்திய சுற்றுலா, கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா பேசியதாவது:

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் (2015) இந்தியாவுக்கு சுமார் 80 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது, இதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 4.4 சதவீத வளர்ச்சியாகும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையால், 2015-ஆம் ஆண்டில் ரூ.1,26,211 கோடி அன்னியச் செலாவணி ஈட்டப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிககளுக்கு உதவுவதற்காக, 12 மொழிகளில் தகவல்களை அளிக்கும் உதவி மையத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிககளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நமது நாட்டுக்குள் வந்தவுடன் உடனடி நுழைவுஇசைவு (இ-விசா) வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், இதுவரை 4.45 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உடனடி நுழைவுஇசைவு வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா பேசியதாவது:

சிறுபான்மையின மக்கள் கல்வி, சமூக, பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மதரஸாக்களில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்களது பாடத் திட்டத்துடன் வேலைவாய்ப்பு சார்ந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல, கிறிஸ்தவர்கள், ஜைனர்கள், பெளத்தர்கள், பார்ஸிகள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களின் மேம்பாட்டுக்காகவும் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என்றார் அவர்.

முன்னதாக, இந்த மாநாட்டைத் தொடக்கிவைத்து மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பேசியதாவது:

குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்க தேசிய அளவிலான இயக்கத்தை தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த இயக்கம் மிக விரைவில் தொடங்கப்படும். இதேபோல, நாடு முழுவதும் புதிதாக 50,000 அங்கன்வாடி மையங்களைத் திறக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

குழந்தைகள் கடத்தலைத் தடுக்கவும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார் அவர்.

இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் ராஜஸ்தான் மாநில அமைச்சர் அருண் சதுர்வேதி, பத்திரிகை தகவல் மையத்தின் தலைமை இயக்குநர் ஃபிராங்க் நோரோன்கா, கூடுதல் தலைமை இயக்குநர் இரா ஜோஸி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com