தற்கொலைப் படை பயங்கரவாதிகள் ஜம்மு பகுதிக்குள் ஊடுருவும் நோக்கில் பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்கு அருகில் 30 மீட்டர் நீள சுரங்கப் பாதை அமைக்கப்பட்டிருப்பதை எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) கண்டறிந்தனர்.
இதுகுறித்து ஜம்முவின் ஆர்.எஸ்.புரா பகுதியில் பிஎஸ்எஃப் படைப்பிரிவின் தலைவர் ராகேஷ் சர்மா, பிடிஐ செய்தியாளரிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
எல்லைப் பகுதிக்கு மிக அருகில் வழக்கமாக மாதந்தோறும் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடி அகற்றல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் நமது வீரர்கள் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனர். வீரர்களது இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆட்சேபம் தெரிவித்தது. எனினும், அதையும் மீறி, நமது வீரர்கள் அங்குள்ள புற்களை அகற்றும் பணியை மேற்கொண்டனர். அப்போது, நமது எல்லைக்கு அருகே நன்கு கட்டி முடிக்கப்பட்ட ஒரு சுரங்கப் பாதை இருப்பது தெரியவந்தது. அந்தப் பாதையானது, பூமிக்கு அடியில் 10 அடி ஆழத்தில், ஒரு நபர் உட்கார்ந்து கொண்டே நகர்ந்து செல்லும்படியாக 30 மீட்டர் நீளத்தில் இருந்தது.
எல்லைக்கு மிக அருகில் இருந்த அந்தப் பாதையில் நமது பகுதியில் இருந்த முனை மூடப்பட்டு இருந்தது. அதில் வேறு வழிகள் ஏதும் இல்லை. அந்தப் பாதையை அவர்கள் முழுமையாக அமைக்கவில்லை. அந்தப் பாதை, ஜேசிபி வாகனத்தைக் கொண்டு தோண்டப்பட்டதாகும். அந்தப் பாதை, சரியான நேரத்தில் கண்டறியப்படவில்லை எனில், இந்திய எல்லைப் பகுதியில் தற்கொலைப் படை பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஊடுருவ விட்டிருக்கக் கூடும்.
அந்த சுரங்கப் பாதையை இந்தியா கண்டறிந்து விடக்கூடும் என்பதாலேயே அங்கு புற்களை அகற்றும் பணிக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது புரிய வருகிறது.
ஜம்மு பிராந்தியத்தில், கடந்த 2012-ஆம் ஆண்டு முதல், பிஎஸ்எஃப் வீரர்களால் கண்டறியப்பட்ட 4-ஆவது சுரங்கப் பாதை இதுவாகும் என்றார் ராகேஷ் சர்மா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




