சர்ச்சைக்குரிய பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக, பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்பட 21 பேருக்கு எதிராகவும், கரசேவகர்களுக்கு எதிராகவும் சிபிஐ தனித்தனியாக வழக்குகளைப் பதிவு செய்தன.
இதில், கரசேவர்களுக்கு எதிரான வழக்கு லக்னெள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திலும், பாஜக மூத்த தலைவர்களுக்கு எதிரான வழக்கு ரேபரேலி சிறப்பு நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தன.
அத்வானி உள்ளிட்ட தலைவர்களுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி உள்ளிட்ட 13 பேரை வழக்கில் இருந்து விடுவித்து ரேபரேலி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2001-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே, விஹெச்பி தலைவர் ஆச்சார்ய கிரிராஜ் கிஷோர், அசோக் சிங்கால், மகந்த் அவைத்யநாத், பரம்ஹம்ஸ் ராம் சந்திர தாஸ், மோரேஷ்வர் சவே உள்ளிட்ட 8 பேர் இறந்துவிட்டனர். இந்நிலையில், வழக்கில் இருந்து பாஜக தலைவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு மேல் முறையீடு செய்திருந்தது. ஆனால், சிபிஐ தரப்பு தாக்கல் செய்த மனுவை அலாகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்துவிட்டது. அதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு மேல்முறையீடு செய்தது.
அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாபர் மசூதி இடிப்பு தொடர்பான இரு வழக்குகளையும் ஒன்றாகச் சேர்த்து விசாரிக்கலாம் என்று கடந்த 6-ஆம் தேதி தெரிவித்திருந்தது.
மேலும், ஏற்கெனவே 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், விரைவில் நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து, 2 ஆண்டுகளில் விசாரணையை முடிப்பதற்கு உத்தரவிடவும் உச்ச நீதிமன்றம் பரிசீலித்து வந்தது. இந்நிலையில், மேற்கண்ட உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.