2ஜி: இறுதிக் கட்டத்தில் ஆறு ஆண்டு வழக்கு: சிபிஐக்கு 10 கேள்விகள் எழுப்பி ஆ.ராசா வாதம்

தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் 2011-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை ஆகியவை தொடுத்த வழக்கின் வாதங்கள்
2ஜி: இறுதிக் கட்டத்தில் ஆறு ஆண்டு வழக்கு: சிபிஐக்கு 10 கேள்விகள் எழுப்பி ஆ.ராசா வாதம்

தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் 2011-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை ஆகியவை தொடுத்த வழக்கின் வாதங்கள் செவ்வாய்க்கிழமை இறுதிக் கட்டத்தை எட்டின.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ரிலையன்ஸ் தொலைத் தொடர்பு நிறுவனம் தரப்பில் புதன்கிழமை வாதங்கள் முன்வைக்கப்பட்டதும் வழக்கின் தீர்ப்பை சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி ஒத்திவைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தொடுத்துள்ள வழக்குகள் தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, கலைஞர் டிவி முன்னாள் இயக்குநர் சரத்குமார் உள்ளிட்டோர் தரப்பு மற்றும் சிபிஐ தரப்பு வாதங்கள் ஏற்கெனவே நிறைவடைந்தன.
இதில் சிபிஐ தரப்பில் சுமார் ஆயிரம் பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வ வாதங்கள் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, 184 பக்கங்கள் அடங்கிய தனது பதில் வாதத்தின் சுருக்கத்தை ஆ.ராசா சிபிஐ நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். அப்போது சிபிஐக்கு சில கேள்விகளை எழுப்பி ராசா முன்வைத்த வாதம் வருமாறு:
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வான் டெலிகாம், யுனிடெக் ஆகிய இரண்டு நிறுவனங்களும் தொழில் போட்டியில் எதிர் எதிரானவை. அவை பரஸ்பரம் தங்கள் நலனுக்கு எதிராக ஒரே நேரத்தில் குற்றச் சதியில் எவ்வாறு ஈடுபட முடியும்?
ஸ்வான் மற்றும் யுனிடெக் நிறுவனங்களுக்கு விண்ணப்பித்த தேதியில் அவை அலைக்கற்றை ஒதுக்கீடு பெற தகுதி இல்லை என்பது வழக்கு. இந்த விவகாரத்தில் 'விண்ணப்பித்த தேதியிலேயே நிறுவனங்கள் தகுதி பெறுவது அவசியம்' என்று உத்தரவிட்டதே நான்தான். எனவே, அவற்றுக்கு சாதகமாக செயல்பட்டதாக என் மீது எவ்வாறு குற்றம்சாட்ட முடியும்?
'முதலில் வருவோருக்கு முதலில் உரிமம்' என்ற விதியை நான் மாற்றியதாக வழக்கு. ஆனால், அந்த விதியின் கீழ் உரிமம் பெற்ற அனைத்து நிறுவனங்களுக்கும் (டெல்லி வட்டம் தவிர) ஒரே நேரத்தில் அலைவரிசை வழங்கப்பட்டுள்ளது.
இதனால், அரசுக்கு வருவாயும் அலைக்கற்றை பயன்பாடும் உறுதி செய்யப்பட்டது. இதில் எனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக எவ்வாறு குற்றம்சாட்டப்படுகிறது?
கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரராகவோ, நிர்வாகியாகவோ நான் இல்லாத போது, தனியார் நிறுவனங்களுக்கும் கலைஞர் தொலைக்காட்சிக்கும் இடையிலான பணப் பரிவர்த்தனையை எனக்கு வழங்கப்பட்ட லஞ்சமாக கருத சட்டம் இடமளிக்குமா? என்பன உள்ளிட்ட 10 கேள்விகளை ராசா எழுப்பி தனது வாதத்தை நிறைவு செய்தார்.
இதைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றவர்கள் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
குற்றம்சாட்டப்பட்டுள்ள ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் தரப்பு வாதம் புதன்கிழமை முன்வைக்கப்படும். அத்துடன் இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிமன்றத்தில் சிரிப்பலை
2ஜி அலைக்கற்றை வழக்கை போதிய புரிதலின்றி சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை விசாரித்துள்ளதாகத் தெரிவித்து ஆ.ராசா கூறிய குட்டிக் கதையால் தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் சிரிப்பலை காணப்பட்டது.
இது குறித்து குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆ.ராசா, சிறப்பு நீதிபதி சைனி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை ஆஜராகி கூறியது: பார்வை பழுதுபட்ட நால்வர் யானையை தொட்டுப் பார்த்து விவரித்த கதையாக 2ஜி வழக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்றுள்ளது.
யானையின் காலைத் தொட்டவர் 'தூண்' என்றும், வாலை தொட்டவர் 'கயிறு' என்றும், காதை தொட்டவர் 'முறம்' என்றும், உடலை தொட்டவர் 'சுவர்' என்றும் கூறியதாக ஒரு சிறுகதை உள்ளது.
அதுபோல, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றிய புரிதலின்றி இந்த விவகாரத்தை மத்திய கண்காணிப்பு ஆணையம் (சிவிசி), மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், நாடாளுமன்றக் கூட்டுக் குழு, சிபிஐ ஆகியவை அணுகியதால் இந்த வழக்கு தீவிரமாகியது என்றார் ராசா. இந்தக் கதையை ராசா விவரித்து முடித்ததும் சிறப்பு நீதிபதி சைனி பலமாக சிரித்தார். இதைப் பார்த்த நீதிமன்றத்தில் இருந்தவர்களும் சில நிமிடங்கள் பலமாக சிரித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com