1962-ல் நேருவுக்கு நடந்தது மோடிக்கு நினைவிருக்கட்டும்: சீன நாளிதழ் 'திமிர்' கட்டுரை

1962-ம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் நேருவுக்கு நடந்தது தற்போதைய பிரமதர் மோடிக்கு நினைவிருக்கட்டும் என சீன நாளிதழ் திமிர் கட்டுரையை செவ்வாய்கிழமை வெளியிட்டது. 
1962-ல் நேருவுக்கு நடந்தது மோடிக்கு நினைவிருக்கட்டும்: சீன நாளிதழ் 'திமிர்' கட்டுரை

1962-ம் ஆண்டு இந்திய-சீனா எல்லை விவகாரத்தில் அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு நடந்தது தற்போதைய பிரதமர் நரேந்திர மோடிக்கு நினைவிருக்கட்டும் என்ற கட்டுரையை சீன தினசரி நாளிதழ் குளோபல் டைம்ஸ் செவ்வாய்கிழமை வெளியிட்டது.

இதுகுறித்து அந்த நாளிதழின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டதாவது:

1962 முதல் இந்தியா இதேபோன்று செயல்பட்டு வருகிறது. அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, சீன அரசால் தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வந்ததை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சீனா வெறும் எச்சரிக்கை மட்டுமே விடுக்கும். ஆனால் வேறு எதுவும் செய்து விடாது என்றிருந்தார். 

ஆனால், விளைவு வேறு விதமாக இருந்தது. இதே நிலையைத்தான் இந்தியா இந்த 55 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. 1962 போரில் இருந்து இந்திய அரசாங்கம் இன்றுவரை பாடம் கற்கவில்லை. இந்தப் போர் நடைபெற்று இன்னும் ஒரு நூற்றாண்டு கூட நிறைவேறாத நிலையில், அடுத்த போருக்கு அழைப்பு விடுப்பது போல் செயல்படுகிறது. 

1962-ல் பல உள்நாட்டு சிக்கல்களுக்கு இடையிலும் சீனா வெற்றிகரமாக அந்தப் போரை நடத்தியது. அதுபோன்ற நிலை தற்போது இல்லை. உலக நாடுகளிடையே சீனா பலத்துடன் உள்ளது. நரேந்திர மோடியும் இதேபோன்று சீனா விடுக்கும் எச்சரிக்கைகளை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் 1962-ல் நேரு அரசாங்கத்துக்கு நடந்த அதே நிலை இப்போது மோடி அரசாங்கத்துக்கும் நடக்கும். எனவே சீனாவை எளிதாக நினைக்க வேண்டாம் என்றிருந்தது.   

இந்தியா, சீனா நாடுகள் இடையே டோக்லாம் எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாகவே பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்தியர்கள் புனித யாத்திரை செல்லும் வழியை மறித்து சீனா அரசாங்கம் அங்கு சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டது. 

இதையடுத்து அங்கு அதிகளவிலான இந்திய ராணுவத்தினர் குவிக்கப்பட்டு அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டன. அதில் இருந்தே அங்கு பதட்டம் நீடித்து வருகிறது. இதனால் இரு நாடுகளின் ராணுவமும் பெரிய அளவில் அங்கு குவிக்கப்பட்டுள்ளன. மேலும், இரு நாட்டின் தூதர்கள், ராணுவ தளபதிகள், அரசியல் கட்சியினர், அரசுகள் தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. 

ஆனால், எல்லைப் பகுதியில் இருந்து இந்திய ராணுவம் முழுவதுமாக நீக்கப்பட வேண்டும் என்பதில் சீனா உறுதியாக உள்ளது. டோக்லாம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள இரு நாட்டு ராணுவமும் முழுமையாக திரும்ப அழைக்கப்படுவது தொடர்பாக இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது.

இந்தியா-சீனா எல்லைப் பிரச்னையில் இந்த நாளிதழ் அவ்வப்போது இதுபோன்று செய்திகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com