
புதுதில்லி: நாடு முழுவதும் பெரும் பரபரப்பினைக் கிளப்பிய கேரள 'லவ் ஜிகாத்' வழக்கில், தேசிய விசாரணை ஆணையம் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரளாவினைச் சேர்ந்தவர் ஷபின் ஜஹான். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்து மதத்தினைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்காக முதலில் அந்தப் பெண் இஸ்லாம் மதத்திற்கு மாறி, அதன் பின்னர்தான் அவர்கள் திருமணம் நடந்தது.
இதனை எதிர்த்து அந்த பெண்ணின் தந்தை அசோகன் என்பவர் கேரள மாநில உயர் நீதின்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் அவர் இந்து மதப் பெண்களை காதலித்து மதமாற்றம் செய்து, அவர்களை இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புகளில் இணைப்பதாகவும், அதற்கென ஒரு தெளிவான திட்ட வழிமுறை பின்பற்றப்படுவதாகவும் தன் மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.
இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த திருமணத்தினை செல்லாது என்று அறிவித்ததுடன், இதனை 'லவ் ஜிஹாத்' என்று வர்ணித்தது. அத்துடன் இத்தகைய வழக்குகள் குறித்து விசாரிக்குமாறு கேரள மாநில காவல்துறைக்கும் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து ஷபின் ஜஹான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வானது இந்த வழக்கினை விசாரித்து வருகிறது. இந்த அமர்வு கடந்த 10- ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், கேரளா மாநில காவல் துறை இந்த வழக்கு தொடர்பான விசாரணை விபரங்களை தேசிய விசாரணை ஆணையத்திடம் பகிர்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியது.
இந்நிலையில் இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது, தேசிய விசாரணை ஆணையமானது, இந்த வழக்கு குறித்து விரிவாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒரு நடுநிலையான விசாரணை அமைப்பாக தேசிய விசாரணை ஆணையம் செயல்படும் என்று தாங்கள் நம்புவதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், சர்சைக்குரிய இந்த விவாகாரமானது ஒரு சிறிய அளவில் உள்ளதா அல்லது வேறு ஏதேனும் பெரிய திட்டம் இதன் பின்னணியில் மறைந்துள்ளதா என்பதனை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரவீந்திரன் இந்த விசாரணையை மேற்பார்வை செய்வார் என்றும் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.