பாலியல் பலாத்கார வழக்கு: குர்மீத் ராம் ரஹீமுக்கான தண்டனை இன்று அறிவிப்பு

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு அளிக்கப்பட இருக்கும் தண்டனை விவரம் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியால்
பாலியல் பலாத்கார வழக்கு: குர்மீத் ராம் ரஹீமுக்கான தண்டனை இன்று அறிவிப்பு
Published on
Updated on
2 min read

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு அளிக்கப்பட இருக்கும் தண்டனை விவரம் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியால் திங்கள்கிழமை (ஆக.28) பிற்பகல் வெளியிடப்படவுள்ளது.
ரோத்தக் அருகே சுனாரியாவில் உள்ள மாவட்ட சிறையில் குர்மீத் ராம் ரஹீம் சிங் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கில் தீர்ப்பு வெளியானதும் மூண்ட கலவரத்தில் மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டதை கவனத்தில் கொண்டு, தண்டனை விவரத்தை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிறைக்கு நேரில் சென்று அறிவிப்பார் என்று பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் சனிக்கிழமை அறிவித்தது. இதையடுத்து, சிறையில் இதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளன.
தண்டனை விவரம் வெளியிடப்பட்டதும், குர்மீத்தின் ஆதரவாளர்கள் மீண்டும் கலவரத்தில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதால், முன்னெச்சரிக்கையாக ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குர்மீத் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை அமைந்துள்ள பகுதி உள்பட ரோத்தக் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறை செல்லும் சாலை நெடுகிலும் தடுப்பு அரண்களை அமைத்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இதேபோல், பஞ்ச்குலா, சிர்சா, பதேஹாபாத் உள்ளிட்ட பதற்றம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரோத்தக் மாவட்ட தேரா சச்சா சௌதா அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரையும் முன்னெச்சரிகை நடவடிக்கையாக தடுப்புக் காவலில் போலீஸார் வைத்துள்ளனர். தீர்ப்பைத் தொடர்ந்து எழும் எத்தகைய சவாலான சூழ்நிலையையும் எதிர்கொள்ள காவல்துறையினர் தயார் நிலையில்இருப்பதாக ரோத்தக் நகர காவல்துறை துணை ஆணையர் அதுல் குமார் தெரிவித்துள்ளார்.
இணையதளச் சேவை முடக்கம்: ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களில் இணையதளம் மூலம் வதந்திகள் பரவுவதைத் தடுப்பதற்கு, இணையதளச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. கலவரத்தைத் தொடர்ந்து, ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த பகுதிகளில் சில இடங்களில் மட்டும் அந்த தடையுத்தரவு ஞாயிற்றுக்கிழமை தளர்த்தப்பட்டிருந்தது.
ஹரியாணா மாநிலம், சிர்சாவில் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும் 5 மணிநேரம் தடையுத்தரவு தளர்த்தப்பட்டிருந்தது. இதையடுத்து, பெட்ரோல் விற்பனை நிலையங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்தன. கலவரத்தைத் தொடர்ந்து, ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களில் தடைபட்டிருந்த ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டன.
தேரா சச்சா சௌதா சொத்து விவரம் சேகரிப்பு: கலவரத்தில் ஏற்பட்ட சேதத்துக்கு இழப்பீடு வழங்கும் வகையில், தேரா சச்சா சௌதா அமைப்பின் சொத்துகளை விற்கவும், குத்தகைக்கு விடவும் தடை விதித்ததுடன், சொத்துப் பட்டியலை தாக்கல் செய்யும்படியும் ஹரியாணா அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதன்தொடர்ச்சியாக, தேரா சச்சா சௌதா அமைப்புக்குச் சொந்தமான அசையும், அசையாச் சொத்துகள் பட்டியலை சேகரிக்கும் பணியை குர்கான் மாவட்ட நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
பலி 38ஆக உயர்வு: ஹரியாணாவில் கலவரத்தில் பலியானோரது எண்ணிக்கை 38-ஆக உயர்ந்திருப்பதாக மாநில காவல்துறை தலைவர் பி.எஸ். சாந்து தெரிவித்துள்ளார். தண்டனை விவரம் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டதும், சட்டம்-ஒழுங்கு நிலை மீண்டும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு முன்னுரிமை கொடுத்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com