2ஜி வழக்கின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது: முன்னாள் தணிக்கை அதிகாரி ஆர்.பி. சின்ஹா

2ஜி முறைகேடு வழக்கில் இருந்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டது குறித்து தணிக்கைத் துறை (தொலைத்தொடர்பு) முன்னாள் இயக்குநர் ஆர்.பி. சின்ஹா அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
2ஜி வழக்கின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது: முன்னாள் தணிக்கை அதிகாரி ஆர்.பி. சின்ஹா

2ஜி முறைகேடு வழக்கில் இருந்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டது குறித்து தணிக்கைத் துறை (தொலைத்தொடர்பு) முன்னாள் இயக்குநர் ஆர்.பி. சின்ஹா அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக அளிக்கப்பட்ட அறிக்கை உண்மையானது என்று அவர் கூறியுள்ளார்.
தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) வினோத் ராய், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக அளித்த அறிக்கையின் தயாரிப்பில் சின்ஹா முக்கியப் பங்கு வகித்தார்.
இந்நிலையில், 2ஜி தீர்ப்பு வெளியான பிறகு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான கணக்கை தணிக்கை செய்தபோது அதில் பல்வேறு முறைகேடுகளும், விதிமீறல்களும் நடந்திருப்பதை ஆவணங்கள் மூலம் கண்டறிந்தோம். அரசுக்கு எந்த அளவுக்கு இழப்பு ஏற்பட்டது என்பதில் வேண்டுமானால் வேறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால், ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்தன என்பது தொடர்பான அரசு ஆவணங்களின் தணிக்கையில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. 
இந்தத் தீர்ப்பு எனக்கு வியப்பையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுவார்கள் என்று நான் நினைக்கவில்லை.
நாங்கள் தணிக்கை செய்து அளித்த அறிக்கை முழுவதும் ஆதாரப்பூர்வமானது. அதன் அடிப்படையில்தான் உச்ச நீதிமன்றம் 2ஜி அலைக்கற்றையின் 122 ஒதுக்கீடுகளை ரத்து செய்தது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு சட்டவிரோதமாக நடைபெற்றுள்ளது என்பதை உச்ச நீதிமன்றம் அப்போது உறுதி செய்தது.
அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான கொள்கையை மாற்றிய பிறகு எந்த அளவுக்கு அதிகமான தொகை அரசுக்கு வருவாயாகக் கிடைத்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றது என்பதில், சிஏஜி-யுடன் இணைந்து நாங்களும் உறுதியாக இருக்கிறோம். இது தொடர்பாக நடைபெற்ற குற்ற நடவடிக்கைகளையும் சிபிஐ நிரூபித்துள்ளது. எனினும், இந்த முயற்சிகள் நீதிமன்றத்தில் தோல்வியடைந்துவிட்டன.
தொலைத்தொடர்புத் துறை தொடர்பான சில ஆவணங்களை நான் முன்பு பரிசீலித்தபோது, அதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. சில நபர்களுக்கு சாதகமாக விதிகள் வளைக்கப்பட்டுள்ளன என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. தொலைத்தொடர்புத் துறையும், சட்ட அமைச்சகமும் அளித்த ஆவணங்களை முறையாகப் பரிசீலித்து நியாயமான அறிக்கையை மட்டுமே நாங்கள் அளித்தோம் என்றார் அவர்.
தீர்ப்புக்குப் பிறகு தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய் மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது குறித்த கேள்விக்கு, 'தனது பணியை நேர்மையாக மேற்கொண்டு, பல்வேறு முறைகேடுகளை வினோத் ராய் வெளிக்கொண்டு வந்துள்ளார். அவர் மீது குற்றம்சாட்டுவது வருத்தமளிக்கிறது. அவருடன் 5 ஆண்டுகள் இணைந்து பணியாற்றியுள்ளேன். வினோத் ராயுடன் இணைந்து 2ஜி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அறிக்கைகளை நான் தயாரித்துள்ளேன். அவர் மிகவும் துணிச்சலானவர். அரசின் கொள்கைகளில் தவறு இருந்தால் அதைச் சுட்டிக்காட்டுவதில் நேர்மையாக செயல்படும் வினோத் ராய் போன்ற தலைமை கணக்குத் தணிக்கையாளரை நான் எனது பணிக்காலத்தில் பார்த்தது இல்லை' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com