
புதுதில்லி: பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான 17 வங்கிகள் கூட்டமைப்பிடம் இருந்து ரூ.9000 கோடி கடன் பெற்று இங்கிலாந்துக்கு தப்பிச் சென்ற வழக்கில், பதிலளிக்க தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு மூன்று வார கால அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இங்குள்ள பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகளிடம் தனது தொழில் நிறுவனங்கள் சார்பாக ரூ.9000 கோடியை கடனாக பெற்றிருந்தார். ஆனால் கடனை முழுமையாக திரும்பிச் செலுத்தாத அவர் கடந்த ஆண்டு இங்கிலாந்திற்கு தப்பிச் சென்றார்.
எனவே பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான 17 வங்கிகள் கூட்டமைப்பானது அவரிடமிருந்து கடனை திரும்ப பெரும் பொருட்டு, அவரை இந்தியாவுக்கு கொண்டுவர உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடியது.ஆனால் இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விடுத்த சம்மன்களை மல்லையா மதித்து செயல்படவில்லை. மேலும் சொத்துப்பட்டியலை வெளியிட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவையும் சரியான முறையில் பின்பற்றவில்லை.
இந்நிலையில் அவரது நிறுவனம் ஒன்றில் நிகழந்த வியாபார பரிவர்த்தனை குறித்த விபரங்களை நீதிமன்றத்திற்கு முறையாக தெரிவிக்கவில்லை என்றும், பணம் பெற்றுக் கொண்டதை மறைத்து விட்டதாகவும் அவர் மீது வங்கிகளின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியது.
இந்நிலையில் அவர் வாங்கிய கடன் தொகைக்காக ரூ.260 கோடியை காப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்ற உத்தரவை நிறைவேற்றுவது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் கன்வில்க்கர் அடங்கிய அமர்வானது மல்லையா இந்த வழக்கில் மூன்று வார கால அவகாசத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி - 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.