

ஜெய்ப்பூர்: உலகப் புகழ் பெற்ற வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லீமா நஸ் ரீனுக்கு இனி வரும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தடை விதித்து இருப்பதாக எழுந்த கருத்துக்களால், பிரபல ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழா சர்சையில் முடிந்திருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஆண்டு தோறும் நடைபெறும் இலக்கிய திருவிழா உலகப்புகழ் பெற்றது. பல்வேறு நாடுகளில் இருந்தெல்லாம் படைப்பாளிகள் இதில் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான விழா,ஜெய்ப்பூரின் திக்கி அரண்மனையில் கடந்த 19-ஆம் துவங்கி, 23-ஆம் தேதி திங்கள்கிழமை அன்று நிறைவு பெற்றது.
இந்நிகழ்வில் நிகழ்ச்சி அட்டவனையில் இல்லாமல் 'திடீர்' நிகழ்வாக சர்ச்சைக்குரிய வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லீமா நஸ் ரீன் உரை இடம் பெற்றது. இதுபற்றிய தகவல் அறிந்ததும், நிகழ்வு நடைபெறும் திக்கி அரண்மனை முன் சிலர் ஒன்று கூடினர். அவர்கள் தஸ்லிமாவின் எழுத்துக்கள் இஸலாமை அவமதிக்கும் விதத்திலிருப்பதாகவும், இனி நடைபெறும் நிகழ்வுகளுக்கு தஸ்லீமாவை அழைக்கக் கூடாது என்று கூறியும் கோஷமிட்டனர்.
நிகழ்வு முடிவடைந்த அன்று மாலை நிகழ்வின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சஞ்சய் ராய் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், போராட்டக்காரர்களிடம் தாம் பேசியதாகவும், அவர்களின் உணர்வுகளை அறிந்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். சிறுபான்மையினருக்கு ஆதரவாக தாங்கள் செய்து வரும் செயல்களையும், எல்லாருக்கும் பொதுவான அரங்கமாக இது இருப்பதையும் எடுத்துரைத்த அதே நேரம், அவரகளது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்பதையும் தெரிவித்திருந்தார்.
இது பற்றிய தகவல் வெளியானதும் எழுத்தாளர் தஸ்லிமா சமூக வலைத்தளமான டிவிட்டரில் கோபமாக எதிர்வினையாற்றி இருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:
சர்வாதிகாரிகளும், அரசுகளும் என்னை தடை செய்து வந்தனர். ஆனால் மிகவும் முற்போக்கான மதசார்பற்ற அமைப்பான ஜெய்ப்பூர் இலக்கிய அமைப்பும் என்னை தடை செய்யும் என்று நம்பவே முடியவில்லை. இது போன்ற அடிப்படைவாதிகளின் கோரிக்கைகளுக்கு நீங்கள் ஒருமுறை அடிபணிந்தால் பின்னர் அதுவே தொடர்கதையாகி விடும்.
இவ்வாறுஅவர் தெரிவித்திருந்தார். இதற்கு பின்னர் ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழா அமைப்பின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், 'தஸ்லிமாவை தடை செய்திருப்பதாக வந்த செய்திகளில் உண்மையில்லை.இது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிட ப்படவில்லை ' என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்வினையாக ஜெய்ப்பூர் இலக்கிய அமைப்பு கருத்துரிமையில் நம்பிக்கை வைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று தஸ்லிமா டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.