
இந்தியாவின் 21-ஆவது தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி வியாழக்கிழமை பதவியேற்றார்.
தனது பதவிக் காலத்தின்போது, நாட்டில் சுதந்திரமான, அனைவரையும் உள்ளடக்கிய, நம்பகத்தன்மை மிகுந்த தேர்தல்களை நடத்துவதற்காகப் பாடுபடப் போவதாகவும், மத்திய, மாநிலத் தேர்தல்களில் மின்னணு நிர்வாகத்தை ஊக்குவிக்கப் போவதாகவும் பதவியேற்பு நிகழ்ச்சியின்போது அவர் தெரிவித்தார்.
தற்போது 64 வயதாகும் ஜோதி, பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது அந்த மாநிலத்தின் தலைமைச் செயலராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1975-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணியில் இணைந்த அச்சல் குமார் ஜோதி, குஜராத் தலைமைச் செயலர் பதவியிலிருந்து 2013-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஓய்வு பெற்றார்.
அதனைத் தொடர்ந்து, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் 3 தேர்தல் ஆணையர்களில் ஒருவராக கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டார்.
தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவிக் காலம் 6 ஆண்டுகளில் நிறைவடையும்.
எனினும், ஆணையரின் வயது 65 வயது பூர்த்தியடைந்தால் 6 ஆண்டுகளுக்குள்ளாகவே பதவிக் காலம் முடிவடையும்.
அந்த வகையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ஆம் தேதியுடன் அச்சல் குமார் ஜோதிக்கு 65 வயது பூர்த்தியாவதால், அன்றுடன் அவரது பதவிக் காலம் நிறைவடையும்.
குஜராத் மாநிலத்தின் தலைமைச் செயலராக மட்டுமன்றி, ஊழல் கண்காணிப்பு ஆணையர், கண்ட்லா துறைமுகக் கழகத் தலைவர், சர்தார் சரோவர் நர்மதா நிகம் நிறுவன நிர்வாக இயக்குநர் உள்பட பல்வேறு பதவிகளை அச்சல் குமார் ஜோதி வகித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.