ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மதுவிற்பனைக்கு ஏதுவாக நெடுஞ்சாலைகளை மாற்றியமைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

சண்டீகரில் மதுவகைகளை விற்பனை செய்வதை அனுமதிக்கும் வகையில், நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு செல்லும் என்று உச்ச நீதிமன்றம்

News image
Updated On :11 ஜூலை 2017, 11:10 pm

DIN

சண்டீகரில் மதுவகைகளை விற்பனை செய்வதை அனுமதிக்கும் வகையில், நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றத்தால் கடந்த டிசம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரம் வரையிலான பகுதிகளில் மதுபானக் கடைகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவு, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், யூனியன் பிரதேசமான சண்டீகரில் மதுவகைகளை விற்க ஏதுவாக சில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றி, அரசு நிர்வாகத்தால் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, பஞ்சாப்- ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் "அரைவ் சேஃப் சொசைட்டி ஆஃப் சண்டீகர்' என்ற தன்னார்வ அமைப்பு வழக்குத் தொடுத்தது. அதை விசாரித்த உயர் நீதிமன்றம், சண்டீகர் அரசு நிர்வாகம் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அந்த அமைப்பு மேல்முறையீடு மனு தொடுத்தது. அந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எல். நாகேஸ்வர ராவ் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், "மதுபானக் கடைகள் செயல்பட வேண்டும் என்ற திட்டத்துடன், சண்டீகர் நிர்வாகத்தால் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரியவில்லை.
அப்படி ஓர் எண்ணம் இருந்தால், அனைத்து நெடுஞ்சாலைகளையும் மாவட்ட சாலைகளாக மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும். எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறோம்' என்றனர். நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளுக்கு தடை விதிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தடை உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி தனிநபர்கள், ஹோட்டல்கள், விடுதிகள், நிறுவனங்கள், மதுபான விற்பனையாளர்கள் சங்கங்கள் சார்பிலும் மனுக்கள் தொடுக்கப்பட்டிருந்தன. அந்த மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.
இதேபோல், பல்வேறு மாநில அரசுகள் சார்பாகவும் மனுக்கள் தொடுக்கப்பட்டிருப்பதாகவும், அதன் மீது புதன்கிழமை (ஜூலை 12) விசாரணை நடத்தப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
சண்டீகர் பிரதேசம் யூனியன் பிரதேசமாக இருந்தபோதிலும், அதற்கு மாநில அந்தஸ்து தரப்படவில்லை. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.