கோபாலகிருஷ்ண காந்திக்கு ஆதரவு: நிதீஷுக்கு சோனியா, ராகுல் நன்றி

குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான எதிர்க்கட்சி பொது வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்திக்கு ஆதரவு அளித்ததற்காக, பிகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நன்றி
Updated on
1 min read

குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான எதிர்க்கட்சி பொது வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்திக்கு ஆதரவு அளித்ததற்காக, பிகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரிகள் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் கலந்துகொண்டன.
இந்தக் கூட்டத்தில் நிதீஷ் குமார் பங்கேற்காதபோதிலும், அவரது ஐக்கிய ஜனதா தளக் கட்சி சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சரத் யாதவ் கலந்துகொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், கோபாலகிருஷ்ண காந்திக்கு ஆதரவளித்ததற்காக நிதீஷ் குமாரை சோனியா காந்தி புதன்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்ததாக ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. தியாகி கூறினார்.
மேலும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் நிதீஷ் குமாருக்கு தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்ததாக ஐக்கிய ஜனதா தளக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, குடியரசுத் தலைவர் பதவிக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மீராகுமாருக்கு நிதீஷ் குமார் ஆதரவு தெரிவிக்கவில்லை. மாறாக, மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு நிதீஷ் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com