வாழ வைக்கும் வள்ளல்
தொடர்ந்து துன்பத்தில் கடந்து வருகின்றவனை சனி ஆட்டிப் படைக்கிறது என்று சொல்வது உண்டு. இதனை மங்கு சனி என்பர்.


இன்ப, துன்பம் கலந்ததுதான் மனித வாழ்க்கை. இன்பம் வரும் பொழுது மனித மனம் மகிழ்கிறது. துன்பம் வந்துவிட்டால் வருந்துகிறது. தொடர்ந்து துன்பத்தில் கடந்து வருகின்றவனை சனி பிடித்துக் கொண்டு ஆட்டிப் படைக்கிறது என்று சொல்வது உண்டு. இதனை மங்கு சனி என்பது வழக்கம்.
வறியவன் ஒருவன் செல்வனாகி, மென்மேலும் பொருள் செல்வத்தைக் குவித்து, வளமான வாழ்வினைத் துய்த்து வந்தாலும் அவனுக்கு சனி திசை நடக்கிறது என்றுதான் சொல்வார்கள். அதனை பொங்கு சனி என்பர். ஒருவனை வீழ வைப்பதும் சனி; ஒருவனை வாழ வைப்பதும் சனி.
இந்த சனி பகவான் சிறப்புமிக்க தெய்வமாக வழிபடப்படும் தலம் திருநள்ளாறு. இது காவிரி தென்கரையில் உள்ள 52-ஆவது திருத்தலமாகும்.
திருநள்ளாறு சைவத்திருமுறைகளில் பேசப்படும் திருத்தலமாகும். சம்பந்தரும் அப்பரும் சுந்தரரும் இவ்வூரினைப் பாடியுள்ளதால் இதன் தொன்மை புலப்படும். நல்லாறு என்பதற்கு அரிசிலாற்றுக்கும் நூலாற்றுக்கும் நடுவில் இருக்கும் தலம் என்பது பொருள்.
திருநள்ளாற்றின் இதயம் போல் ஊரின் நடுவில் அமைந்திருக்கிறது திருக்கோயில். வானளாவி நிற்கும் ராஜகோபுரம் 85 அடி உயரம் கொண்டு விளங்குகிறது.
மூலவரின் பழம் பெயர் நள்ளாறன் என்பது. பின்னாளில் தோன்றிய புராணங்கள், இவர் தர்ப்பைக் காட்டில் தோன்றி அருள்புரிந்ததால் தர்ப்பாரண்யேஸ்வரர் என்று துதிக்கப்படுகிறார் என்கின்றன. திருநள்ளாற்றீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். சுயம்பு மூர்த்தியாகிய மூலவர் திருமுகத்தில் தர்ப்பையால் ஏற்பட்ட வடுக்கள் காணப்படுதல் இதனை உறுதி செய்யும். தேவாரம் அருளிய மூவரும் இப்பெருமானைப் பதிகம் பாடிப்போற்றியுள்ளனர்.
இத்தலத்தில் இறைவி கண்கண்ட தெய்வமாய் காட்சியளிக்கின்றார். தேவிக்கு போகமார்த்த பூண்முலையாள் என்பது திருப்பெயர்.
மதுரையில் சமணரோடு அனல்வாதம் செய்த ஞானசம்பந்தர் போகமார்ந்த பூண்முலையாள் என்னும் தொடக்கத்துடன் திருநள்ளாற்றில் தாம் பாடிய திருப்பதிக ஏட்டை நெருப்பினில் இட்டபோது, அது எரியும் தீயில் பசுமையாய் நிலை பெற்று விளங்கி, சைவ சமயமே உண்மை சமயம் என உலகுக்கு உணர்த்தியது.
போகமார்த்த பூண்முலையாள் என்னும் இத்தலத்து இறைவியே சைவத்துக்குப் புத்துயிர் அருளினாள் என்பதால் அம்பிகை பிராணேஸ்வரி என்னும் திருநாமத்தால் போற்றப்படுகிறாள்.
கோயிலில் 51 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை 11}ஆம் நூற்றாண்டு முதல் 16}ஆம் நூற்றாண்டு வரையிலானவை. முதலாம் ராஜாதி ராஜன் முதலாக அவனுக்குப் பின்னர் வந்த சோழர்கள், அவர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு ஆட்சி புரிந்த பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகரப் பேரரசின் அரச பிரதிநிதிகள் ஆகியோர் கால கல்வெட்டுகளும் இங்குள்ளன.
சனிபகவான் இறைவன் ஈசனை வணங்கி பேறு பெற்ற தலம் இதுவென்பதால் சனிபகவானுக்கு இங்கு தனிச் சந்நிதி உள்ளது. நிடத நாட்டு மன்னன் நளன், சனிபகவானின் பாதிப்பிலிருந்து விடுபட இத்தலத்தில் வழிபாடு செய்து, இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றார். சனீஸ்வரனை வணங்குவதற்கு முன், பக்தர்கள் இங்குள்ள நளதீர்த்தத்தில் நீராடுவது வழக்கம்.
சனிபகவானின் தோஷம் நீங்க விரும்புபவர்கள், இந்தத் தலத்தில் திருஞானசம்பந்தர் அருளிய "போகமார்த்த பூண்முலையாள்' என்று தொடங்கும் பதிகம் பாடுவது நல்லது. சமணர்களுக்கு எதிரான சம்பந்தரின் அனல் வாதத்தில், இந்தப் பதிகம் எழுதப்பட்டிருந்த சுவடிகள் மட்டும் கருகாமல் இருந்ததால் "பச்சைப் பதிகம்' என்ற சிறப்புப் பெயரால் வழங்கப்படுகிறது.
தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் அருளும் சனிபகவான், ஈசனின் கட்டளைப்படி இங்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு நல்வாழ்வினை அளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். சனி
பகவானால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை வணங்கினால் நல்ல பலன்களைப் பெறுவார்கள். இங்கு வந்து எள் தீபம் ஏற்றி, கருங்குவளை மலர் சாத்தி சனீஸ்வரனை வழிபட, அனைத்து சனி தோஷங்களும் நீங்கும் என்று நம்பப்படுகிறது.
சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்ற ராசிக்கு பெயரும் காலம் இரண்டரை வருடங்களாகும். இவ்வாண்டு மார்ச் 6}ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறார். இவ்வைபவம் திருநள்ளாற்றுத் திருத்தலத்தில் சிறப்புடன் கொண்டாடப்பட இருக்கிறது. காரைக்காலுக்கு மேற்கே 5 கி.மீ. தூரத்தில் திருநள்ளாறு அமைந்துள்ளது.
- திருமேனி நாகராசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...