

நளனுக்கு விமோசனம் தந்த திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர்
போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகம் ஆர்த்த பைங்கண் வெள்ஏற்று அண்ணல் பரமேட்டி,
ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின்மேல்
நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே
- திருஞானசம்பந்தர்
நவக்கிரகத் தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் சனி பரிகார கோயில் புதுவை, காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருநள்ளாறு பகுதியில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 52-வது தலமாக விளங்குகிறது ஸ்ரீ பிரணாம்பிகை அம்பாள் சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயில். பொதுவாக உக்ர மூர்த்தியாகிய சனி பகவான் இக்கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாகக் கிழக்கு நோக்கி அபய முத்திரையுடன் அருள் வழங்குகிறார்.
தல வரலாறு
நிடத நாட்டின் மாவிந்த நகரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த நளன் என்னும் அரசன், விதர்ப நாட்டின் மன்னரின் மகளான தமயந்தியை சுயம்வரத்தால் மணந்துகொண்டார். கலிபுரு என்பவர் தமயந்தி தமக்குக் கிட்டாத வருத்தத்தில் நளன் மீது கோபமும், அழுக்காறும் கொண்டு அவரை பழிவாங்க முற்பட்டார். 12 ஆண்டுகள் வரை பழி தீர்க்கக் காத்திருந்த அவர், ஒரு நாள் இறைவழிபாட்டுக்காக தமது பாதங்களை நீரால் தூய்மை செய்யும்போது, புறந்தாளில் (பின்கால்) தண்ணீரின்றி இருந்துவிட்டது. இது நளன் செய்த குற்றத்துக்கு உரியக் காரணமாக கலிபுருவாகிய சனிபகவான் அவரைப் பிடித்துக்கொண்டார். அப்போதுமுதல் நளனை அவர் ஆட்டிப்படைக்கத் தொடங்கினார்.
பல்வேறு நிலையில் நளன் நிலையை இழந்து, நகரங்களை இழந்து மனைவியோடு நாட்டைவிட்டு வெளியேறினார். குழந்தைகள் இருவர் நல்ல முறையில் வாழ நினைத்து மாமன் வீட்டின் பராமரிப்பில் விட்டுவிட்டு மனைவியோடு கானகம் சென்றார். கானகத்தில் மனைவியை அவரிடமிருந்து சனி வேறுபடுத்திவிட்டார்.
கணவரைக் காணாமல் கதி கலங்கிய தமயந்தியை, சுவாகுகன் என்ற மன்னன் காப்பாற்றி அவளது தந்தையான வீமசேனன் நாட்டுக்கு அனுப்பிவைத்தான். கானகத்தில் நளனைக் கார்க்கோடகன் என்ற பாம்பு தீண்டி அழகற்றவனாக்கியது. குள்ளமான வடிவம், கரிய மேனி, விகாரமான தோற்றம் ஏற்பட்டது. வாகுகன் என்ற பெயருடன் இருதுபன்னன் என்னும் அரசனுக்குத் தேர்ப்பாகனாக ஊழியம் செய்தான்.
தமது கணவரை மீண்டும் அடைய விரும்பி தந்தையிடம் பேசி மீண்டும் ஒரு சுயம்வரத்துக்கு தமயந்தி ஏற்பாடு செய்தார். 2-ஆம் சுயம்வரத்துக்கு இருதுபன்னன் என்ற மன்னன் தேரில் சென்றடைந்தான். தேரை செலுத்தியவனோ உருமாறிய நளனாவான்.
தமது உள்ளுணர்வால் நளன்தான் உருமாறி வந்திருப்பதை உணர்ந்தாள் தமயந்தி, தந்தையிடம் இதற்கான உண்மையைக் கண்டறியக் கூறினாள். வாகுகனிடம் உண்மையை உரைக்கக் கூறியதன்பேரில், உண்மை வெளிப்படும் காலம் நெருங்கிவிட்டது என்பதை அறிந்த வாகுகன் உருவில் இருந்த நளன், முன்பு தன்னைத் தீண்டி உருமாறச் செய்த கார்க்கோடகன் பாம்பு கொடுத்த, இவ்வளவு நாளாக மறைத்து வைத்திருந்த அரவுரி (பாம்புத்தோல்) ஆடையை எடுத்து உடனே உடுத்திக்கொண்டான். உடனடியாக வாகுகன் மறைய, கவின்மிகு உருவத்தில் நளன் தோன்றினான். மீண்டும் படைகளால் நாட்டை மீட்டு மனைவி, மக்களோடு ஆட்சி செய்து வந்தான். ஆனால் அவன் மனதில் நிம்மதி இல்லை. அவர் முன் தோன்றிய நாரதர், திருத்தலப் பயணம் சென்று வந்தால் பிடித்த சனி விலகிவிடும், மன அமைதி கிட்டும் என்றார்.
அரசுப் பொறுப்பை அமைச்சரிடம் ஒப்படைத்துவிட்டு மனைவி, மக்களுடன் புண்ணியப் பயணம் மேற்கொண்டான் நளன். எத்தனையோ திருத்தலங்களுக்குச் சென்றும் நிம்மதி கிடைக்கவில்லை. அப்போது பரத்துவாச முனிவரை வணங்கியபோது, ஞானத்தால் அவர், நீ திருநள்ளாறு சென்று தீர்த்தத்தில் நீராடி, தர்பாரண்யேஸ்வரரை வழிபடுமாறு யோசனை கூறினார். அவ்வாறு திருநள்ளாறு வந்து, தீர்த்தத்தில் நீராடி கோயிலை அடையும்போது, இனியும் நளனைப் பிடித்திருப்பதால் பயனில்லை என எண்ணி விலகச் சனி முடிவெடுத்தார். தர்பாரண்யேஸ்வரரை வணங்கியபோது நளனுக்கும், அவரது மனைவி, மக்களுக்கும் இறைவன் கருணைக் காட்டினார். மூலஸ்தானம் வரை செல்ல முடியாத சனிபகவான் கோயிலின் பக்க மாடத்தில் நின்றார். (இப்போதைய சனிபகவான் சன்னதி).
அப்போது இறைவன், இனி என்னை வணங்கி அருள் பெறுவோர், உன்னையும் (சனி பகவான்) துதிப்பார்கள். இதே மாடத்திலிருந்து அருள்புரிவாயாக எனத் தெரிவித்தார். அப்போது முதல் சனியால் பாதிப்படைந்தோர் இத்தலத்தின் தர்பாரண்யேஸ்வரரை வணங்கினால் தீர்வு கிடைக்கும் என வந்து நன்மை அடைந்து வருகிறார்கள் என்பது நம்பிக்கை.
இதனாலேயே நளசக்கரவர்த்தியே தர்பாரண்யேஸ்வரரால் சனி பாதிப்பிலிருந்து மீண்டு, மீண்டும் அரசாட்சிக்குச் சென்றதை எண்ணி பக்தர்களும் திரண்டு இக்கோயிலுக்கு வருகிறார்கள். தர்பாரண்யேசுவரரை வணங்கிவிட்டு, சனீஸ்வர பகவானையும் வணங்கி அருள்பெற்றுச் செல்லும் புண்ணிய தலமாக இது விளங்குகிறது.
தல மூர்த்திகள்
இக்கோயிலில் ஒரே சன்னதிக்குள் ஸ்ரீ ஆதி கணபதி, ஸ்ரீ சொர்ண கணபதி என்கிற இரண்டு விநாயகர் உள்ளனர். ஸ்ரீ தட்சணாமூர்த்தி, ஆதி தட்சணாமூர்த்தி. சுதை வடிவிலான மகாலட்சுமி, ஸ்ரீ மகாலட்சுமி. விநாயகர் சன்னதி அருகே ஒரு பைரவர், தெற்கு நோக்கிய பார்வையில் பைரவர் என இரு சன்னதிகள்.
பலி பீடம் விலகிய நிலையில் இக்கோயிலில் உள்ளது. முந்தைய காலத்தில் கணக்கர் செய்த தவறினால் சுவாமியின் பானம் செல்வதற்கு ஏதுவாக பீடம் விலகியதாகக் கூறப்படுகிறது. இந்த கோலத்தை இக்கோயிலில் காணலாம்.
இடையனுக்குக் காட்சியளித்த சேத்திரமாகவும் இது கூறப்படுகிறது. ஸ்ரீ தியாராஜப்பெருமான் இடையனுக்குக் காட்சியளித்ததை, இக்கோயிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இக்கோயில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தோஷ நிவர்த்திக்குரியவர். கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சாப விமோசனம், தோஷ நிவர்த்திக்கு உரிய தலமாக இக்கோயில் விளங்குகிறது. பிரம்மனின் சாபம் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரரை வழிபட்டதால் விலகியதாக ஐதீகம். இதன் மூலம் சகல சாபத்தையும் போக்கும் வல்லவராக தர்பாரண்யேஸ்வரர் திகழ்கிறார்.
பதிகம் பாடல் பெற்ற தலம்
திருநள்ளாறு சிவபெருமானைப் போற்றி திருஞானசம்பந்தர் நான்கு பதிகமும், திருநாவுக்கரசர் இரண்டு பதிகமும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.
சப்தவிடங்க தலம்
சப்தவிடங்க தலங்களாக திருவாரூர், திருவாய்மூர், திருக்காறாயில், திருக்குவளை, நாகப்பட்டினம், வேதாரண்யம், திருநள்ளாறு ஆகியவை விளங்குகின்றன. திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் நகவிடங்கத் தியாகராஜர் என்பது திருநாமம். நடனம் உன்மத்த நடனம். உன்மத்தம் என்பது பைத்தியம் என்று பொருள். இடப்புறமும், வலபுறமும் கவிழ்வதுபோல் நடனம்.
இக்கோயில் தல விருட்சம் தர்ப்பை (புல்). கோயிலின் வடக்குப்புற பிராகாரத்தில் துர்க்கையம்மன் சன்னதி அருகே தர்ப்பை வளர்க்கப்படுகிறது. பொதுவாகக் கோயில்களின் தல விருட்சமாக மரங்கள் மட்டுமே இருக்கும். குறிப்பாக சிவன் கோயில்களில் வில்வ மரம் பிரசித்தமானது. இக்கோயிலில் மட்டுமே புல், தல விருட்சமாக விளங்குகிறது. ஸ்ரீ தர்பாரண்யேசுவரருக்கு உகந்ததாக இது விளங்குகிறது. தர்ப்பையை வழிபட்ட பின்னரே தர்பாரண்யேஸ்வரரை வழிபடச் செல்லும் வகையில் இக்கோயிலில் அமைப்பு உள்ளது. தர்ப்பை வளரும் இடத்தை தொட்டு வணங்கினாலே ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரரை மகிழ்வித்ததாக அமையும் எனக் கூறப்படுகிறது.
தீர்த்தங்கள்
இத்தலத்துக்கு வருவோர் நளன் நீராடிய குளத்தில் நீராடுவதால் பாதிப்புகள் விலகும் என்ற நம்பிக்கையில் நள தீர்த்தத்தில் நீராடிவிட்டு கோயிலுக்குச் செல்கின்றனர். இவ்வகையில் இத்தீர்த்தம் பிரதானமாகும். மேலும், பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், எமன் தீர்த்தம் ஆகியவை பயன்பாட்டில் உள்ளன. இக்கோயில் பகுதியில் 11 தீர்த்தங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. பெரும்பாலானவை பல்வேறு காரணிகளால் மறைந்துவிட்டப்படியால், தற்போது பயன்பாட்டில் உள்ளது நளன் தீர்த்தக் குளம், பிரம்ம தீர்த்தக் குளம், சரஸ்வதி தீர்த்தக் குளத்துடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எமன் தீர்த்தம் புனரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. எமன் தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரரை வழிபாடு செய்யும்போது, நம்மிடையே உள்ள எம பயம் நீங்குவதாகவும், ஆயுள் விருத்தியடைவதாகவும் நம்பிக்கை.
இத்தலத்தில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தின்போது 5 தேரோட்டம் நடைபெறுகிறது. தேருக்கு வரும்போதும், தேரிலிருந்து யதாஸ்தானத்துக்கும் ஸ்ரீ செண்பக தியாகராஜர் உன்மத்த நடனத்திலேயே செல்வது சிறப்புக்குரியது. தினசரி ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன.
பல்வேறு சிறப்புகளைக் கொண்ட திருநள்ளாறு (சனி) பரிகாரத் தலம் பற்றித் தினமணி வெள்ளிமணியில் புகழ்பெற்ற ஜோதிட வல்லுநர் ஏ.எம். ராஜகோபாலன் என்ன சொல்லியிருக்கிறார்?
துவாபர யுகம். பாண்டவ புத்திரர்கள் ஐவரும். திரௌபதியுடன் வனவாசம் செய்து வந்த காலம்.
களைத்துப்போய் திரௌபதி. செடிகளின் இலைகளைப் பரப்பி அதன் மேல் படுத்து துயிலுற்றனள். அதனைப் பார்த்த பஞ்ச பாண்டவர்கள் கண்ணீர் வடித்து வருந்தினர்.
திரௌபதி புகழ் பெற்ற அரச குமாரி செல்வத்தில் பிறந்து சீரும் சிறப்புமாக வளர்ந்தவள். இன்று காட்டில் இலைச் சருகுகளின் மீது படுத்துறங்கும் கோலத்தைக் காணக்காண அந்த ராஜ குமாரர்களின் நெஞ்சம் வெடித்தது.
அந்தச் சமயத்தில்தான் அவர்களைக் காண வியாச பகவான் அங்கு வந்தார் எதிர்பாராதவிதமாக. கண்கலங்கி நின்ற அந்த ராஜபுத்திரர்களுக்குத் தைரியமும் (ஆறுதலும் கூறினார். காலம் என்ற வலையில் சிக்கித் துன்பப்படாதார் இல்லை என்பதை விளக்கி அதற்கு உதாரணமாக நிடதநாட்டு சக்கரவர்த்தி நளனும் அவனது மனைவி தமயந்தியும் பட்டக் கொடிய துன்பங்களையும் விளக்கி ஆறுதல் அளித்தார் வியாஸர். அந்த நள மகாராஜன் துன்பப்பட்டது அவரது ஜாதகப்படி சனி பகவானின் ஏழரை ஆண்டு கோள்சாரம் நடைபெற்ற காலத்தில்தான்.
கொடிய துன்பங்களை அனுபவித்து அல்லலுற்ற அந்த நள சக்கரவர்த்தி நாரத மகரிஷியின் அறிவுரையின்படி திருநள்ளாறு என்ற திவ்ய திருத்தலம் சென்று அங்கு திருவருள் பாலித்து வரும் ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரரையும், அம்பிகையையும் தரிசித்து அங்கு எழுந்தருளியுள்ள சனி பகவானையும் வழிபட்டு அனைத்துத் துன்பங்களும் நீங்கி இன்புற்றான்.
இவ்வாறு மாமன்னர்களையும் மகா புருஷர்களையும்கூட விட்டு வைக்காத சக்திவாய்ந்த சனி பகவான் அவதார புருஷரான ஸ்ரீ கிருஷ்ணனையும் தனது ஏழரை வருட அதிகாரத்தில் படாத பாடுபடுத்தி வைத்தவராவார்.
அனைத்துக் கிரகங்களுக்கும் அனேக வித சக்திகளை அளித்தருளும் சூரிய பகவானுக்கும், சாயா தேவிக்கும் பிறந்த தெய்வக் குமாரனே சனி, காசியம்பதியில் சிவபெருமானைப் பூஜித்து அதன் பலனாக நவக்கிரகங்களில் ஒருவராகத் திகழும் பேறு பெற்றவர் அவர். நன்மைகளானாலும், தீமைகளானாலும் உறுதியுடன் செய்பவராதலால் அனைவருக்கும் அவரிடத்தில் அச்சம் அதிகம்.
ஆனாலும், சனி என்றாலே தீய பலன்களை மட்டும்தான் தருபவர் என்ற கருத்து ஜோதிடக்கலையின்படி தவறானதாகும். எவரது ஜாதகத்தில் சனி பலம் பெற்றும், சுபமான ஆதிபத்தியத்துடன் ஜெனன காலத்தில் விளங்குகிறாரோ, அந்த ஜாதகர்கள் நீண்ட ஆயுளையும், குறைவில்லாத ஜீவன பாக்கியத்தையும் பெற்று மகிழ்வார்கள். மிகக் கொடிய விபத்திலும், ஆயுளைப் பாதுகாத்து உயிர் அளிக்கும் சக்தியும், திருவுள்ளமும் கொண்டவர் சனி.
விவாகப் பொருத்தங்கள் பார்க்கும்போது, பெண், பிள்ளை ஆகிய இருவரின் ஜாதகங்களிலும் சனி பகவான் நல்லபடி அமர்ந்திருக்கிறாரா என்பதை ஆராய்வதும் மிக முக்கியமானதாகும்.
ஜாதகப்படி ஏழரை சனி, ஜென்ம சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனி ஏற்படும் காலங்களில் திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி அம்மையப்பனையும், சனீஸ்வரனையும் தரிசித்துவிட்டு வருதல் அளவற்ற நன்மை தரும். காகத்திற்குத் தினமும் உணவளித்தலும், ஏழைக்கு அன்னமிடுதலும், மாலையில் தீபம் ஏற்றுவதும் சனி பகவானுக்கு உகந்த வழிபாடுகளாகும்.
பக்திக்குக் கட்டுப்பட்ட கிரகமாவார் சனி கீழ்க்கண்ட துதியை தினமும் 108 முறை பாராயணம் செய்துவர துன்பங்கள் விலகும்.
“நீலாஞ்சன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்,
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்”
- மகாபாரதம்
(மீள்பிரசுரம்)
திருநள்ளாறு தலத்தின் பெருமைகள் குறித்த அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியர் சங்க துணைத் தலைவரும், திருநள்ளாறு கோயில் சிவாச்சாரியரும், ஜோதிடருமான டி. ராஜா சுவாமிநாத குருக்கள் சொல்வது என்ன ?
சனி கொடுப்பார், யார் தடுப்பார். இத்தலத்தில் உள்ள தர்பாரண்யேஸ்வரருக்கும், அம்பிகைக்கும், சனீஸ்வரருக்கும் உள்ள பெருமைகளும், தலத்தின் பெருமைகளும் சொல்லில் அடங்காதவை. ஒருவரது ஜென்ம பாவங்கள் தீரவும், இந்த ஜென்மாவின் பாவங்கள் தீரவும் இத்தலத்துக்கு வந்து விமோசனம் பெறுகின்றனர். கிரகங்களில் அதிக நாள்கள் சஞ்சாரம் செய்யக்கூடியவர் சனி என்பதால், அவர் தரும் பலன்களும் நீண்டிருக்கும். ஏழரைச் சனி, அஷ்ட சனி போன்ற தோஷங்கள் தீரவும், சொந்த ஜாதகத்தில் உள்ள சனி தோஷம் தீரவும், தீர்க்கமான ஆயுள் இருக்கவும், உடல் பிணி அகலவும், மனதில் சந்தோஷம் ஏற்படவும், கலியுக கலியை தீர்த்து நல்லருள் செய்பவராக இத்தல சனிபகவான் திகழ்கிறார் என்றார்.
சனிப்பெயர்ச்சி விழா
இத்தலத்தில் வாக்கிய பஞ்சாங்கத்தின்படியே பூஜைகள் நடைபெறுகின்றன. அதன்படி வருகிற மார்ச் 6-ஆம் தேதி காலை 8.24 மணிக்கு கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கும் வகையிலான சனிப்பெயர்ச்சியை குறிப்பிடும் சிறப்பு ஆராதனை நடைபெறவுள்ளது. இத்தலத்தின் அன்னதானத் திட்டத்தின் கீழ் தினமும் சுமார் 200 பேருக்கும், சனிக்கிழமையில் சுமார் 1,500 பேருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
எப்படிச் செல்வது?
புதுச்சேரியிலிருந்து பேருந்து, கார் மூலம் திருநள்ளாறுக்கு செல்வதற்கு 120 கி.மீட்டரும், நாகப்பட்டினத்திலிருந்து 30 கி.மீ., கும்பகோணத்திலிருந்து 60 கி.மீ., காரைக்கால் வரை எந்த பகுதியிலிருந்தும் ரயில் மூலம் வந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ள திருநள்ளாற்றைச் சென்றடையலாம். திருநள்ளாறு பேருந்து நிறுத்தத்திலிருந்து கோயிலுக்கும், நளன் தீர்த்தக் குளத்துக்கும் நடந்தே சென்றுவிடலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.