விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டமில்லை

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டமில்லை என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
Published on
Updated on
2 min read

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டமில்லை என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
முன்னதாக, வறட்சி, கடன் தொல்லை உள்ளிட்ட காரணங்களால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தற்கொலை செய்வது அதிகரித்தது. பல்வேறு மாநிலங்களில் விவசாயக் கடன் தள்ளுபடி கோரி போராட்டங்கள் வலுத்தன. இதையடுத்து, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டன. ஆனால், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக் கூடாது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய வேளாண் துறை இணையமைச்சர் புருசோத்தம் ரூபலா கூறியதாவது:
இப்போதைய சூழ்நிலையில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பான பரிசீலனை எதுவும் மத்திய அரசிடம் இல்லை. அதே நேரத்தில் விவசாயிகளின் குறுகிய காலக் கடன்களுக்கு வட்டி தள்ளுபடியை மத்திய அரசு அளித்து வருகிறது. அதாவது ஓராண்டில் ரூ.3 லட்சம் வரை கடன் பெற்று அதனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு மத்திய அரசு 3 சதவீதம் வட்டி தள்ளுபடி அளிக்கிறது. எனவே, அவர்கள் 7 சதவீத வட்டிக்கு பதிலாக 4 சதவீத வட்டி செலுத்தினால் போதுமானது என்றார்.
விவசாயி, விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் எஸ்.எஸ். அலுவாலியா இது தொடர்பாக மக்களவையில் பேசும்போது, விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், விவசாயிகளின் வருவாயை இருமடங்காக உயர்த்தவும் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நியாயமான விலையைப் பெற்றுத்தருவது, கால்நடைகள் மூலம் விவசாயிகளின் வருவாயை உயர்த்துவது, பல தரப்பட்ட பயிர்களைச் சாகுபடி செய்யும் திட்டம் உள்ளிட்டவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றார்.
காவல் துறையில் 5 லட்சம் காலியிடங்கள்: நாடு முழுவதும் காவல் துறையில் 5 லட்சம் காவலர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. ஐபிஎஸ் அதிகாரிகளைப் பொறுத்தவரையில் மொத்தம் 4,843 பணியிடங்கள் உள்ளன. ஆனால் இப்போது 3,905 ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டுமே பணியில் உள்ளனர். ஆண்டுதோறும் 150 புதிய ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இத்தகவலை உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஜி.அதிர் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
திருமண வயது அதிகரிப்பு: திருமண வயது அதிகரிப்பது குறித்து அவர் கூறியதாவது: இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளும் சராசரி வயது அதிகரித்துள்ளது. 2001-ல் ஆண்களில் சராசரி திருமண வயது 22 ஆக இருந்தது. 2011-ல் இது 22.8 ஆக அதிகரித்துவிட்டது. 2001-இல் பெண்களில் சராசரி திருமண வயது 18.4 ஆக இருந்தது. 2011-ஆம் ஆண்டில் இது 19.2 ஆக உயர்ந்துள்ளது என்றார் அவர்.
1000 தொண்டு நிறுவனங்கள் முடக்கம்: வெளிநாடுகளில் பெற்ற நிதியை தவறான வழிகளில் பயன்படுத்தியதாக 1000-க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், 2000-க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களிடம் தங்கள் கணக்கு விவரங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசு கேட்டுள்ளது. மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு இத்தகவலை மக்களவையில் தெரிவித்தார்.
டிஜிட்டலான ஓலைச்சுவடிகள்: மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா மக்களவையில் கூறியதாவது: 7 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் முறையில் மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் பாதுகாத்து வருகிறது. இது தொடர்பாக மொத்தம் 2 லட்சம் டிஜிட்டல் ஆவணங்கள் கலாசாரத் துறையிடம் உள்ளன. ஓலைச்சுவடிகளைக் கண்டறிந்து அவற்றை ஆவணப்படுத்தும் நோக்கில் கடந்த 2003-ஆம் ஆண்டு தேசிய செயல் திட்டம் உருவாக்கப்பட்டது என்றார்.
புதிய மசோதா தாக்கல்: நாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் அருகே அரசு உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு வழி வகை செய்யும் மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போதைய விதிகளின்படி நாட்டில் உள்ள 3,600-க்கும் மேற்பட்ட பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள பகுதியில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் சாலை அமைப்பது, புதிய கட்டடம் கட்டுவது போன்ற உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள முடியாது.
இதனால், உள்கட்டமைப்புப் பணிகள் பாதிக்கப்படுவதாகக் கூறி அதனை சரி செய்யும் வகையில் புதிய மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com