நிம்மதியாக அரசாங்கம் நடத்த முடியவில்லை: பதவி விலகல் குறித்து நிதிஷ் விளக்கம்

மகாபந்தக் கூட்டணியை முறித்து பிகார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் புதன்கிழமை ராஜினாமா செய்தார். சரியான முறையில் அரசாங்கம் நடத்த முடியவில்லை என குற்றஞ்சாட்டினார்.
நிம்மதியாக அரசாங்கம் நடத்த முடியவில்லை: பதவி விலகல் குறித்து நிதிஷ் விளக்கம்
Published on
Updated on
1 min read

பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை புதன்கிழமை இரவு திடீரென ராஜினாமா செய்தார். 

லாலு பிராசத் யாதவ் கடந்த 2006-ம் ஆண்டு ரயில்வே ஹோட்டல்களை வாடகைக்கு விட்டதில் ஊழல் செய்துள்ளதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மகனும், பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து துணை முதல்வர் பதவியை தேஜஸ்வி யாதவ் ராஜினாமா செய்ய வேண்டும் என நிதிஷ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதனை லாலு தரப்பு மறுத்து வந்தது.

இந்நிலையில், பிகார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் திடீரென புதன்கிழமை இரவு அம்மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

எனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். கூட்டணி தர்மத்துக்காக என்னால் முடிந்தவரை அமைதி காத்தேன். அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

இத்தனை சிக்கல்களுக்கும் இடையில் இந்த அரசை நடத்துமாறு லாலு பிரசாத் யாதவ் என்னை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். நான் யாரையும் ராஜினாமா செய்யுமாறு அறிவுறுத்தவில்லை. 

தன் மீது சுமத்தப்பட்ட வழக்குகளை எதிர்கொண்டு அது பொய் வழக்கு என நிரூபிக்குமாறு மட்டும்தான் நான் தேஜஸ்வி யாதவிடம் தெரிவித்தேன்.

இதுபோன்ற சூழ்நிலையில் என்னால் அரசாங்கத்தை முழுமனதுடன் நடத்த முடியவில்லை. பண மதிப்பு இழப்பு விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படதற்கு நான் கூட்டணி மாறுகிறேன் என்று விமர்சித்தார்கள். 

மக்களும் இதுபோன்ற அவதூறுகளை நம்ப ஆரம்பித்துவிட்டனர். இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு நான் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலைச் சந்தித்து பேசினேன்.

இப்போது கூட நான் ராஜினாமா செய்வதற்கு முன்பு லாலு பிரசாத் யாதவ் மற்றும் பிகார் காங்கிரஸ் தலைவர் சி.பி.ஜோஷியிடம் தெரிவித்துவிட்டுத்தான் வந்தேன். 

நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை. என்னை குற்றஞ்சொல்ல நினைப்பவர்கள் தாராளமாக சொல்லலாம்.

தேவைகள் மட்டும்தான் இவ்வுலகில் பூர்த்தியாகும், பேராசைகள் எப்போதும் நிறைவேறாது என மகாத்மா காந்தி கூறியதை நினைவுகூர்ந்து பேட்டியை முடித்தார்.
  
இந்த ராஜினாமா சம்பவங்களுக்கு முன்னதாக, ஒரு கூட்டத்தில் லாலு பிரசாத் யாதவ் பேசியதாவது:

எனது நீண்ட நாள் நண்பரின் கட்சியின் அடித்தளம் என்ன என்பது எனக்குத் தெரியும். அதன் பூர்விகமே பாரதிய ஜனதா கழகம்தான். பிகார் சட்டப்பேரவையில் என்னிடம் தான் அதிகளவு உறுப்பினர்கள் உள்ளனர்.

நான்தான் நிதிஷ் குமாரை பிகாரின் முதல்வர் ஆக்கினேன். ஆனால் எல்லாம் தனது கட்டுப்பாட்டில் இருப்பது போன்று அவரது நடவடிக்கைகள் உள்ளன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com