பணமதிப்பு நீக்கத்தின் விளைவுகளைப் பேசும் முதல் படம்: வெளிவர அனுமதிப்பாரா பஹ்லாஜ் நிஹலானி? (ட்ரைலர் இணைப்பு)
கொல்கத்தா: மத்திய அரசு கடந்த வருடம் நவம்பர் மாதம் அமல் செய்த பணமதிப்பு நீக்கத்தினால், பொதுமக்கள் அடைந்த துயரங்கள் பற்றி பேசும் முதல் படம் உரிய சான்றிதழுடன் வெளிவருமா என்பது தற்பொழுது மத்திய தணிக்கை வாரிய தலைவர் பஹ்லாஜ் நிஹலானியின் கைகளில் உள்ள தகவல்; வெளியாகியுள்ளது.
கொல்கத்தாவைச் சேர்ந்த இயக்குனர் சுவேந்து கோஷ். இவர் தற்பொழுது 'சன்யோத' (வெறுமை) என்னும் பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த படமானது கடந்த வருடம் நவம்பர் மாதம் 8-ஆம் தேதி மத்தியில் ஆளும் மோடி அரசினால் அமல் செய்யப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால், பொதுமக்கள் அனுபவித்த துயரங்கள் குறித்து பேசுவதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படமானது நாளை மறுநாள் (31-ஆம் தேதி) வெளியாகும் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது இந்த திரைப்படத்திற்கு என்ன மாதிரியான சான்றிதழ் வழங்குவது என்பது குறித்து முடிவு செய்வதில் வாரிய உறுப்பினர்களுக்கு கருத்தொற்றுமை இல்லை என்று இயக்குனருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி இயக்குனர் சுவேந்து கோஷ் கோரியதாவது:
நேற்று (செவ்வாய் கிழமை) கொல்கத்தா மண்டல மத்திய தணிக்கை அலுவலகத்திலிருந்து எனது திரைப்படத்திற்கு என்ன மாதிரியான பிரிவில் சான்றிதழ் வழங்குவது என்பதில் உறுப்பினர்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லை என்றும், தற்பொழுது இது தொடர்பாக முடிவு எடுக்கும் பொருட்டு திரைப்படம் மத்திய தணிக்கை குழு தலைவர் பஹ்லாஜ் நிஹலானிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிரான கருத்துக்களை இந்தப் படம் கொண்டிருப்பதே இப்பிரச்சினைக்கு காரணம் என்று நான் கருதுகிறேன், வேறு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்தான முதல் படம் இதுதான். இந்த படத்திற்கு விரைவில் உரிய சான்றிதழ் வழங்கி வெளிவர உதவும்படி தணிக்கை குழு தலைவரை வலியுறுத்த உள்ளோம்.
இவ்வாறு சுவேந்து கோஷ் தெரிவித்தார்.
படத்தின் ட்ரைலர்:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.