காங்கிரஸ் ஆதரவு அமைப்பு அழைப்பு: குஜராத் செல்கிறார் யஷ்வந்த் சின்ஹா

அடுத்த மாதம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள குஜராத் மாநிலத்துக்கு பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா வரும் 14-ஆம் தேதி செல்லவுள்ளார்.
காங்கிரஸ் ஆதரவு அமைப்பு அழைப்பு: குஜராத் செல்கிறார் யஷ்வந்த் சின்ஹா
Updated on
1 min read

அடுத்த மாதம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள குஜராத் மாநிலத்துக்கு பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா வரும் 14-ஆம் தேதி செல்லவுள்ளார்.
"நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசை மட்டுமே குறை கூற முடியாது. போதிய அவகாசம் இருந்தும், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பிரதமர் மோடியும், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் காரணமாவர்" என்று கூறி, அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியவர் யஷ்வந்த் சின்ஹா.
முன்னாள் மத்திய நிதியமைச்சரான இவர், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பெற்ற தன்னார்வ அமைப்பின் அழைப்பை ஏற்று, 3 நாள் பயணமாக, குஜராத் மாநிலத்துக்குச் செல்லவுள்ளார்.
அந்த மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல், டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில், இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இந்நிலையில், யஷ்வந்த் சின்ஹாவின பயணம் குறித்து, ராஜ்கோட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், வியாழக்கிழமை கூறியதாவது:
லோக்சாஹி பச்சாவ் ஆந்தோலன் (ஜனநாயகத்தைக் காப்போம்) என்ற தன்னார்வ அமைப்பு, நாட்டின் வர்த்தக சூழல் தொடர்பான கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஆமதாபாத், ராஜ்கோட், சூரத் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில், யஷ்வந்த் சின்ஹா பங்கேற்று தொழில் - வர்த்தகத் துறையினர் மத்தியில் உரையாற்றவுள்ளார் என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சிகளில், மத்திய அரசு தங்களது சாதனைகளாகக் கூறி வரும் ரூபாய் நோட்டு வாபஸ், சரக்கு-சேவை வரி(ஜிஎஸ்டி) அமலாக்கம் குறித்து யஷ்வந்த் சின்ஹா பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் குஜராத் மாநிலத்துக்குச் சென்ற காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், ராஜ்கோட்டில் வர்த்தகர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். அவர்களிடம், சரக்கு-சேவை வரியால் ஏற்பட்டுள்ள சுமைகள் குறித்து சிதம்பரம் கலந்துரையாடினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com