சர்ச்சைக்குரிய மாட்டு இறைச்சி விற்பனை தடை அறிவிப்பை திரும்பப் பெறுகிறது மத்திய அரசு? 

நாடு முழுவதும் பெரும் சர்ச்சையினைக் கிளப்பிய மாட்டு இறைச்சி விற்பனை தடை அறிவிப்பை, விவசாயிகள் மற்றும் கால்நடை விற்பனையாளர்களிடம் எழுந்த எதிர்ப்பினைப்,
சர்ச்சைக்குரிய மாட்டு இறைச்சி விற்பனை தடை அறிவிப்பை திரும்பப் பெறுகிறது மத்திய அரசு? 

புதுதில்லி: நாடு முழுவதும் பெரும் சர்ச்சையினைக் கிளப்பிய மாட்டு இறைச்சி விற்பனை தடை அறிவிப்பை, விவசாயிகள் மற்றும் கால்நடை விற்பனையாளர்களிடம் எழுந்த எதிர்ப்பினைப் பொறுத்து, மத்திய அரசு திரும்பப் பெறும் முடிவிலிருப்பதாகத் தெரிய வருகிறது.

பசு, எருது, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக் கூடாது என்று மத்திய அரசு கடந்த மே மாதம் உத்தரவிட்டது. மேலும், மாடுகளை வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்காக மட்டுமே பரஸ்பரம் விற்பனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய அரசின் இந்த முடிவு, தனிமனித உரிமைகளைப் பறிக்கும் செயல் என்று குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு எதிராக கேரளம் மற்றும் மேகாலயம், புதுச்சேரி சட்டப் பேரவைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதே நேரத்தில் மாட்டு இறைச்சியை கொண்டு சென்றதாகக் கூறி ராஜஸ்தானின் ஆல்வார் பகுதியில் இரண்டு பேர் பசு பாதுகாப்பு குழுவினரால் அடித்துக் கொல்லப்பட்டனர்.  

இதனிடையே, மத்திய அரசின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.

இந்தச் சூழலில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக இருவேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கால்நடைகள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடானது, விரும்பிய உணவை உண்ணும் உரிமையைப் பறிக்கும் செயல் என்றும், இதனால், மாட்டிறைச்சி வர்த்தகத்தில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம் மனுக்கள் மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.   

இதனிடையே கடந்த செப்டம்பர் மாதம் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, 'இத்தகைய நடைமுறைகள் கால்நடைகள் மீதான வன்முறையை தடுக்கும் விதமாக ஒரு கட்டுப்படுத்தும் அமைப்பாக மட்டுமே செயல்படும் என்றும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விவசாயிகளையோ இறைச்சிக் கூடங்களை வைத்திருப்போருக்கு சிரமம் கொடுக்கும் எண்ணம் அல்லது அத்துடன் மக்களின் உணவுப் பழக்கங்களை பாதிக்கும் எண்ணம் எந்த விதத்திலும் இல்லையென்றும் கூறினார்.    

இதைத் தொடர்ந்து இந்த தடை குறித்து கருத்து தெரிவிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் சார்பாக இரண்டு கடிதங்கள் அனுப்பப்பட்டன. அத்துடன் அதன் மூலம் பெறப்படும் கருத்துக்களை பொறுத்தே புதிய சட்ட வரைவு உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனவே நாடு முழுவதும் பெரும் சர்ச்சையினைக் கிளப்பிய மாட்டு இறைச்சி விற்பனை தடை அறிவிப்பை, விவசாயிகள் மற்றும் கால்நடை விற்பனையாளர்களிடம் எழுந்த பரவலான எதிர்ப்பினைப் பொறுத்து, மத்திய அரசு திரும்பப் பெறும் முடிவிலிருப்பதாகத் தெரிய வருகிறது. ஆனால் இதற்கான கால அளவு எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com