

தெலங்கானாவில் வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அஸாருதீன் போட்டியிட வேண்டும் என்று அந்த மாநில காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
ஹைதராபாதில் நிகழ்ச்சி ஒன்றில் அஸாருதீன் வியாழக்கிழமை பேசியபோது, காங்கிரஸூம், தாமும் இணைந்து செயல்பட்டால், தெலங்கானாவில் காங்கிரஸால் மீண்டும் ஆட்சியமைக்க முடியும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் என். உத்தம் குமார் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
தெலங்கானா அரசியலில் முக்கிய பங்காற்ற விரும்புவதாக அஸாருதீன் தெரிவித்திருந்தார். இதையடுத்து, தெலங்கானாவில் 2019-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தல் அல்லது மக்களவைத் தேர்தல் ஆகிய ஏதேனும் ஒன்றில் காங்கிரஸ் சார்பில் அவர் போட்டியிட வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறோம். தெலங்கானா தேர்தலில் காங்கிரஸூக்கு அவர் பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் விரும்புகிறோம் என்றார் அவர்.
ஹைதராபாதைச் சேர்ந்த அஸாருதீன், உத்தரப் பிரதேச மாநிலம், மொரதாபாத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு முன்பு எம்.பி.யாக இருந்தவர் ஆவார். எனினும், கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், ராஜஸ்தானில் போட்டியிட்ட அவர் தோல்வியை சந்தித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.