கருப்புப் பண முறைகேடில் வருமானவரித் துறை அதிகாரிகள்: சிபிஐ வலையில் சிக்கும் அரசியல்வாதிகள்

குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த 'ஸ்டெர்லிங் பயோடெக்' நிறுவனத்தின் கருப்புப் பண முறைகேட்டில் வருமான வரித் துறை அதிகாரிகளைத் தொடர்ந்து சில அரசியல்வாதிகள்,
Published on
Updated on
3 min read

குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த 'ஸ்டெர்லிங் பயோடெக்' நிறுவனத்தின் கருப்புப் பண முறைகேட்டில் வருமான வரித் துறை அதிகாரிகளைத் தொடர்ந்து சில அரசியல்வாதிகள், வங்கி அதிகாரிகள் மற்றும் சில அரசுத் துறை அதிகாரிகளும் சிக்குவார்கள் என்று சிபிஐ கூறியுள்ளது.
பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட வதோதராவைச் சேர்ந்த 'ஸ்டெர்லிங் பயோடெக்' நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருந்த வருமான வரித் துறை மூத்த அதிகாரிகள் எஸ்.கே. ஓஜா, சுபாஷ் சந்திரா, எம்.எஸ்.ராய் உள்ளிட்டோர், அந்த நிறுவனத்தின் ஹவாலா பணப்பரிமாற்றம், கருப்புப் பண பரிமாற்றம் உள்ளிட்டவற்றுக்கும் துணைபோனது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரூ.35. கோடிக்கு ரூ.1.25 லட்சம் கமிஷன்: இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாகக் கருதப்படும் ஸ்டெர்லிங் நிறுவனத்தில் இருந்து கைப்பற்ற டைரி மற்றும் கணினித் தகவல்களில் இருந்த பல்வேறு முக்கிய ஆதாரங்களை சிபிஐ அதிகாரிகள் திரட்டியுள்ளனர்.
அமெரிக்கா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் பெங்களூருக்கும் ஹவாலா முறையில் ஸ்டெர்லிங் நிறுவனம் கோடிக்கணக்கில் பணத்தை பரிமாற்றம் செய்துள்ளது. பெங்களூருக்கு ரூ.3.5 கோடியை ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்ய ரூ.1.25 லட்சம் கமிஷனாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ஹவாலா பணப்பரிமாற்றத்துக்கு வருமான வரித் துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் துணைபோயுள்ளனர். மேலும், இந்தப் பணப்பரிமாற்றம் தொடர்பாக எதிர்காலத்தில் எந்த விசாரணையும் நடைபெற்றுவிடக் கூடாது என்பதற்காக அதற்கான ஆதாரங்களையும் வருமான வரித் துறையினர் அழித்துள்ளனர். எனவே, கடந்த 5 ஆண்டுகளாக எவ்வித விசாரணையும் நடைபெறவில்லை.
கடல்தாண்டிய முறைகேடு: இந்திய எல்லையைக் கடந்து அமெரிக்கா, துபை, நைஜீரியா ஆகிய நாடுகளுக்குத்தான் அதிக அளவில் கருப்புப் பணமும், ஹவாலா பணப்பரிமாற்றமும் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக அந்நாடுகளில் உள்ள விசாரணை அமைப்புகளின் உதவியையும் சிபிஐ நாடியுள்ளது. எனவே, இந்த முறைகேட்டில் வெளிநாடுகளிலும் பலர் கைதாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரி ஏய்ப்பு நடவடிக்கைக்காக மொத்தம் 92 வெளிநாட்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 37 நிறுவனங்கள் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த முறைகேடுகள் அனைத்தும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தெரிந்துதான் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக வங்கி ஆவணங்கள், ஒப்பந்தங்கள், நிறுவனத்தின் உரிமையாளர்களின் பெயர்ப் பட்டியல் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இப்போது சிபிஐ வசம் உள்ளன.
டைரி விவரங்கள்: தங்கள் நிறுவனத்தின் முறைகேடுகளுக்கு உதவிய வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு எவ்வளவு பணம் அளிக்கப்பட்டது என்பதை ஸ்டெர்லிங் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தனிப்பட்ட முறையில் எழுதிவைத்துள்ளார். அதில், தில்லியில் உள்ள ஒரு வருமான வரித் துறை உயரதிகாரிக்கு 2011-ஆம் ஆண்டு மே 9-ஆம் தேதி ரொக்கமாக ரூ.80 லட்சத்தை கொடுத்தனுப்பியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு: வருமான வரித் துறை அதிகாரிகள் தவிர சில வங்கி, அரசுத் துறை அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கும் இந்த கருப்புப் பண முறைகேட்டில் தொடர்பு உள்ளது என்பதற்கான அடிப்படை ஆதாரம் சிபிஐக்கு கிடைத்துள்ளது. முக்கியமாக பொதுத் துறை நிறுவனமான இந்தியன் பொட்டாஷ் நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்களுடன் ஸ்டெர்லிங் நிறுவனம் வணிகரீதியாக தொடர்பில் இருந்துள்ளது. இதில் இந்தியன் பொட்டாஷ் நிறுவன இயக்குநருக்கு ரூ.30 லட்சம் வழங்கப்பட்டதாகவும் டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர அந்த நிறுவனத்தின் கணினிகளில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்களில் வருமான வரித் துறைக்கு பல்வேறு வகைகளில் ரூ.10.12 கோடி செலவிடப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இந்தச் செலவுகள் அனைத்தும் 2005 முதல் 2011-ஆம் ஆண்டு வரை நடந்துள்ளன. ஸ்டெர்லிங் நிறுவனத்தினர் வருமான வரித்துறை சோதனை நடத்துவதற்கு சில நாள்களுக்கு முன்பு வரையிலான லஞ்சம் கொடுத்த குறிப்புகள் கிடைத்துள்ளன.
வங்கி அதிகாரியின் கடிதம்: இது தவிர கனரா வங்கியின் தலைவர் கையெழுத்திட்ட வெற்றுக் கடிதம் ஒன்றும் சிபிஐ வசம் சிக்கியுள்ளது. இதன் மூலம் சில வங்கி அதிகாரிகளும் இந்த முறைகேட்டில் பங்கு இருப்பது வெளிப்பட்டுள்ளது.
மேலும், சில அரசியல்வாதிகள், அரசு உயரதிகாரிகளும் இந்த நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர். அவர்களுக்கு எதிராக அடிப்படை ஆதாரம் கிடைத்தவுடன் அவர்கள் மீதும் சிபிஐ-யின் நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.
இயக்குநரான அலுவலக உதவியாளர்: இந்த முறைகேட்டில் சுவாரசியமான பகுதிகளும் உள்ளன. ஸ்டெர்லிங் நிறுவனம் தாங்கள் உருவாக்கிய போலி நிறுவனங்களுக்கும், பினாமி நிறுவனங்களுக்கு தங்கள் அலுவலகத்தில் பணிபுரிந்த அலுவலக உதவியாளர் சிவ சங்கர் யாதவ், பியூன் ராஜேந்திர கேல்கர் ஆகியோரை இயக்குநர்களாகக் காட்டியுள்ளது.
அந்த இருவரின் வீட்டு முகவரிகளில் இரு போலி நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற பணப்பரிமாற்றங்களுக்கான காசோலைகளில் சிவ சங்கர் யாதவ், ராஜேந்திர கேல்கர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். தங்கள் மூலம் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெறுகின்றன என்பது தெரியாமலேயே அவர்கள் அதற்குத் துணை போயியுள்ளனர். நிறுவன அதிகாரிகள் கைகாட்டிய இடத்தில் அனைத்திலும் அவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
காகிதக் கணக்கு: நிறுவனத்தின் விற்பனை, கொள்முதல், லாபம் ஆகியவை வேண்டுமென்றே அதிகரித்துக் காட்டப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு நாடுகளுக்கு பொருள்களை ஏற்றுமதி செய்வதாக காகித அளவில் மட்டும் ஆவணங்கள் உள்ளன. ஆனால், அப்படி எந்த ஏற்றுமதியிலும் ஸ்டெர்லிங் நிறுவனம் ஈடுபடவில்லை. மேலும், போலியாக உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் பெயரிலான கடிதங்கள், பினாமி நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களையும் தொடக்கத்தில் வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது. ஆனால், அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது சிபிஐ வசம் அந்த ஆவணங்கள் வந்துவிட்ட நிலையில், அவற்றை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
சிபிஐ கண்காணிப்பில் அதிகாரிகள்... அந்த நிறுவனத்தின் முறைகேட்டுக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் பரிபூரணமாக ஒத்துழைப்பு அளித்துள்ளது அங்கு கிடைத்துள்ள ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில அதிகாரிகளின் துணையுடன் மட்டும் இந்த முறைகேடுகளை மூடி மறைத்திருக்க முடியாது. எனவே, இதில் மேலும் பல அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கும் என்று சிபிஐ உறுதியாக நம்புகிறது. எனவே, சந்தேகத்துக்குரிய மேலும் சில வருமான வரித்துறை அதிகாரிகள் சிபிஐ தனது கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது.
குட்டு வெளிப்படும்: இப்போதைய நிலையில் கைவசம் உள்ள ஆவணங்களைக் கொண்டு யாரெல்லாம் முறைகேடுகளுக்கு துணை நின்று உதவியுள்ளனர் என்பதை சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அடுத்தக் கட்டமாக கைது நடவடிக்கை மேற்கொண்டு கிடுக்கிப் பிடி விசாரணை நடத்தும்போது மேலும், பலரது குட்டு வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நமது நாட்டைக் கெடுக்கும் சாபக்கேடுகளில் முதன்மையானதாக லஞ்சமும், ஊழலும் இருக்கின்றன. அவை முழுமையாக ஒழிக்கப்படும்போதுதான நாட்டு மக்கள் அனைவரது வாழ்விலும் சுபிட்சம் பிறக்கும். எனவே, தவறு செய்தவர்கள் எத்தகைய உயரிய பொறுப்புகளில் இருந்தாலும் அவர்களை நீதியின் முன்பு நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com