சுடச்சுட

  

  மத்திய அரசு ஊழியர்களுக்கான பொது வைப்பு நிதியில் (ஜிபிஎஃப்) இருந்து பணத்தைத் திரும்பப் பெறுவோர், 15 நாள்களில் பணத்தைப் பெறும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.
  இதனால், மத்திய அரசின் துறைகளில் பணியாற்றும் 50 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.
  பொது வைப்பு நிதியை, 15 ஆண்டுகள் வரை பணியாற்றிய ஊழியர்கள் மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலையில், தற்போது குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கலாம் என்று விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  இதுதவிர, பொது வைப்பு நிதியை, ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினரின் கல்விச் செலவுக்காகவும் எடுக்க முடியும். இதற்கு முன்பு வரை, உயர்நிலைப் பள்ளிப் படிப்புக்குப் பிறகே அந்த நிதியை எடுக்க முடியும். ஆனால், தற்போது, தொடக்க கல்வி, உயர்நிலைக் கல்வி, மேல்நிலை படிப்புகளுக்கும் அந்த நிதியை எடுக்க முடியும் என்று மாற்றப்பட்டுள்ளது.
  மேலும், ஊழியர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களின் நிச்சயதார்த்தம், திருமணம் போன்ற அனைத்து வகையான சடங்குகளுக்கும், மருத்துவச் செலவு ஆகியவற்றுக்காகவும் பொது வைப்பு நிதியிலிருந்து பணம் எடுக்கலாம்.
  12 மாத ஊதியம் அல்லது வைப்புத் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு, இதில் எது குறைவானதோ, அந்தத் தொகை வரை அதிகபட்சமாக ஊழியர்கள் பெற முடியும். எனினும், உடல் நலக்குறைவு ஏற்பட்டால், மருத்துவ செலவுக்காக, வைப்புத் தொகையில் 90 சதவீத தொகையை ஊழியர்கள் திரும்பப் பெறலாம்.
  ஊழியர்கள் விண்ணப்பித்த 15 நாள்களில், ஒப்புதல் அளிக்கப்பட்டு, அவர்களுக்கான தொகையை திருப்பித் தர வேண்டும் என்றும், மருத்துவ சிகிச்சை போன்ற அவசர காலங்களில், 7 நாள்களில் பணத்தை திருப்பித் தர வேண்டும் என்றும் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
  பயனாளிகளின் கோரிக்கைகளை ஏற்று, பொது வைப்பு நிதியின் விதிகளில் அவ்வப்போது திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai