சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

காவிரி: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு- மே 3-க்குள் செயல்திட்டத்தை சமர்ப்பிக்க உத்தரவு 

காவிரி வழக்கு இறுதித் தீர்ப்பில் தெரிவித்தபடி, செயல்திட்டத்தை உருவாக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பில் தெரிவித்துள்ளபடி செயல்திட்டம்

News image
Updated On :9 ஏப்ரல் 2018, 11:01 pm

காவிரி வழக்கு இறுதித் தீர்ப்பில் தெரிவித்தபடி, செயல்திட்டத்தை உருவாக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பில் தெரிவித்துள்ளபடி செயல்திட்டம் (ஸ்கீம் டிராஃப்ட்) தொடர்பான வரைவை மே 3-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கெடு விதித்தது. 
காவிரி இறுதித் தீர்ப்பு தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசு, புதுச்சேரி அரசு, புதுச்சேரி கொறடா ஆர்.கே.ஆர். அனந்தராமன், கேரள அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி. ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன.
அப்போது தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்டே ஆஜராகி, 'உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி அளித்த காவிரி இறுதித் தீர்ப்பு தெள்ளத் தெளிவாக உள்ளது. அடிப்படை ஆங்கிலம் தெரிந்த அனைவரும் தீர்ப்பை புரிந்து கொள்ள முடியும். செயல்திட்டம் என்பது (காவிரி மேலாண்மை) வாரியத்தை மட்டுமே குறிப்பிடுகிறது. இருப்பினும், தீர்ப்பு தெளிவாக இல்லை என மத்திய அரசு கூறுவது ஏன்? எனவே, மத்திய அரசின் மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது' என்றார்.
மத்திய அரசு சார்பில் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் ஆஜராகி, 'சில குழப்பங்கள் உள்ளதால், தீர்ப்பை அமல்படுத்த மூன்று மாதம் அவகாசம் வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா , '6 வாரங்களுக்குள் செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என இறுதித் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். ஆனால், தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்தாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது. எனவே, காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக உரிய செயல்திட்டத்தை உருவாக்கி தனது நம்பகத் தன்மையை மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும்' என்றார்.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் சேகர் நாப்டே, ஜி. உமாபதி ஆகியோர் வாதிடுகையில், 'உரிய நீரை கர்நாடகம் திறக்காததால், தமிழக மக்கள் வேதனையடைந்துள்ளனர். தண்ணீர் திறப்பு தொடர்பாக கர்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரி ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தைத் நாட வேண்டியுள்ளது' என்றனர்.
கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் ஷியாம் திவான், மோகன் கதார்கி, 'இரு மாநிலங்களும் (தமிழகம், கர்நாடகம்) உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளன. கடந்த 28 ஆண்டுகளில் நடுவர் மன்ற உத்தரவை வறட்சி காரணமாக நான்கு முறை அமல்படுத்த முடியவில்லை. நடுவர் மன்ற உத்தரவை திட்டமிட்டு கர்நாடகம் அலட்சியப்படுத்தவில்லை' என்றனர்.
மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால், 'காவிரி இறுதித் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள செயல்திட்டம் (ஸ்கீம்) குறித்து பல்வேறு மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் சிரமம் ஏதும் இல்லை. வாரியத்துக்கு தலைமை ஏற்க நிர்வாகத் துறை அதிகாரியை நியமிப்பதா? அல்லது தொழில்நுட்பத் துறை அதிகாரியை நியமிப்பதா? என்பதில் சிரமம் உள்ளது. விரிவான செயல்திட்டம் (ஸ்கீம்) என்பது காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவில் தெரிவித்தப்படி அமைக்க வேண்டுமா? என தெளிவுப்படுத்த வேண்டும்' என்றார். 
இதையடுத்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, '(காவிரி) நடுவர் மன்ற உத்தரவை இறுதித் தீர்ப்புடன் இணைத்துவிட்டோம். நீண்ட காலமாக உள்ள காவிரி பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் அரும்பாடுபட்டு தீர்ப்பை அளித்தோம். உரிய நீர் திறக்கப்படுகிறதா என்பதை ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றம் கண்காணிக்க முடியாது. எனவேதான் சட்டப்படி விரிவான செயல்திட்டத்தை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால், மத்திய அரசு தேவையான எதையும் இதுவரை செய்யவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை முன்னரே அணுகியிருக்க வேண்டும்' என்றார்.
பின்னர், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: 'காவிரி இறுதித் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விரிவான செயல்திட்டம் தொடர்பான வரைவை நீதிமன்றத்தில் மே 3-ஆம் தேதிக்குள் மத்திய அரசு அளிக்க வேண்டும். மாநிலங்களின் கருத்துகளைக் கேட்ட பிறகு செயல்திட்ட வரைவில் மாற்றம் செய்வது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும். 
தற்போதைய சூழலில் அமைதியைக் கடைப்பிடிக்க சம்பந்தப்பட்ட மாநிலங்களின் உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்க வழக்கில் தொடர்புடைய மூத்த வழக்குரைஞர்களுக்கு உத்தரவிடுகிறோம். வழக்கு விசாரணை மே 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, காவிரி வழக்கு விசாரணையில் பங்கேற்க வந்த தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தமிழக அரசின் நீண்ட கால சட்டப் போராட்டத்துக்குப் பின் காவிரி விவகாரம் நல்ல நிலையை எட்டியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவு காலதாமதத்தை ஏற்படுத்தாது' என்றார். 

காவிரி இறுதித் தீர்ப்பு தெள்ளத் தெளிவாக உள்ளது. மத்திய அரசின் மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது.
- தமிழக அரசு

தமிழகமும், கர்நாடகமும் இறுதித் தீர்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளன. நடுவர் மன்ற உத்தரவை அலட்சியப்படுத்தவில்லை.
- கர்நாடக அரசு

விரிவான செயல்திட்டம் (ஸ்கீம்) என்பது காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவின்படி அமைக்க வேண்டுமா?.
-மத்திய அரசு

மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை முன்னரே அணுகியிருக்க வேண்டும். மே-3 க்குள் விரிவான செயல்திட்டம் அளிக்க வேண்டும். 
மாநிலங்களின் கருத்துகளைக் கேட்ட பிறகு நீதிமன்றம் முடிவு செய்யும். சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
-நீதிபதிகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.