தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் வாஜ்பாயை ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமரும் பாஜகவின் மூத்த தலைவருமான வாஜ்பாய் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நலம் குறித்து நலம் விசாரித்தனர்.
இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சமூத ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, பிகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சுஷில் மோடி, அமைச்சர் நந்த் கிஷோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயின் உடல் நிலை குறித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
மத்திய அமைச்சர் ஜேபி நட்டா கூறுகையில், "வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து தங்களது முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். எய்மஸ் சார்பில் அடுத்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும்" என்று தெரிவித்தார்.
இதன்மூலம், எய்ம்ஸ் மருத்துவமனையின் அடுத்த மருத்துவ அறிக்கை மாலை 5.30 அளவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும்.