தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

ஜேபிசி அமைக்கக் கோரி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கடும் அமளி: 6-ஆவது நாளாக இரு அவைகளும் ஒத்திவைப்பு

ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால்,

News image

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டும் கர்நாடக மாநில அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தில்லி நாடாளுமன்ற வளாகத்தில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்.பி.க்கள்.

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST


ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் புதன்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. 
மக்களவை அதன் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலையில் கூடியது. கேள்வி நேரம் தொடங்கியதும், ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர்களும், மேக்கேதாட்டு விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்களும், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் உறுப்பினர்களும் அவையின் மையப் பகுதியில் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை கூடிய போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகளை கைகளில் ஏந்தி அவையின் மையப் பகுதியில் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, சுமார் 40 உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதியில் நின்றவாறு முழக்கமிட்டனர். ஆளும் கட்சி உறுப்பினர்களும் தங்களது இருக்கையில் இருந்தவாறு சில விவகாரங்களை எழுப்பி கோஷமிட்டனர். 
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக மக்கள் மனங்களில் தீவிர சந்தேகம் உள்ளது. இதனால், இந்த விவகாரம் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவால் விசாரிக்கப்பட வேண்டும் என்றார். அப்போது, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசுகையில், அவையில் இந்த விவகாரங்களை விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், ஜேபிசி அமைப்பதற்கான கோரிக்கையை விவாதிக்க இடமில்லை என்றார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ரஃபேல் விவகாரம் உள்பட எந்த விவகாரத்தையும் விசாரிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்றார்.
அப்போது, உறுப்பினர்கள் தொடர்ந்து உரத்த குரலில் முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால், அவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அவை மீண்டும் கூடிய போது, இதே கோரிக்கையை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதியில் அமளியில் ஈடுபட்டனர். கடும் அமளிக்கு இடையே வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதாநிறைவேற்றப்பட்டது. ஆனால், அமளி தொடர்ந்ததால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 
மாநிலங்களவையில்..:மாநிலங்களவை புதன்கிழமை காலை அதன் தலைவர் எம். வெங்கய்ய நாயுடு தலைமையில் கூடியது. அப்போது, அமைச்சர்கள் சிலர் அறிக்கைகள் தாக்கல் செய்தனர். அதைத் தொடர்ந்து, பொதுக் கணக்குக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
பூஜ்ய நேரம் தொடங்கியதும், மேக்கேதாட்டு அணை விவகாரத்தை எழுப்பி அதிமுக, திமுக உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதியில் அமளியில் ஈடுபட்டனர். ரஃபேல் விவகாரத்தை காங்கிரஸாரும், ஆந்திர மாநில விவகாரத்தை அம்மாநில உறுப்பினர்களும் எழுப்பினர். 
பாஜக உறுப்பினர்கள் ரஃபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்புக் கோர வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி குரல் கொடுத்தனர். அமளிக்கு மத்தியில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் விஜய் கோயல் பேசுகையில், மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ஆனந்த் சர்மா தன்னைப் பற்றி பேசிய கருத்தை திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அப்போது, ராகுல் காந்தி மன்னிப்புக் கோர வேண்டும் என தாம் கேட்டதாக ஆனந்த் சர்மா தெரிவித்ததாக விஜய் கோயல் குறிப்பிட்டார். அதற்கு இந்த விஷயத்தை ஆவணங்கள் மூலம் பார்ப்பதாக அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். தொடர்ந்து உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதியில் அமளியில் ஈடுபட்டதால், அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, நீங்கள் அனைவரும் அவையை நடத்த விரும்பவில்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. இதை மக்கள் பார்க்க நான் விரும்பவில்லை என்று கூறியவாறு அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.